ராணிப்பேட்டை: காட்பாடியை அடுத்த கல்புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் பாலு. இவருடைய மகள் ராதிகா (வயது 19), அங்குள்ள தனியார் மருத்துவமனை நர்சிங் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். இவர் அங்குள்ள விடுதியிலேயே தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் ராதிகாவை கல்லூரி முதல்வரும், வார்டனும் சக மாணவிகள் இருக்கும்போது திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அவமானம் மற்றும் மன உளைச்சல் அடைந்த ராதிகா சம்பவத்தன்று விடுதி கழிவறையில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ராதிகா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணியினர் கோட்ட பொறுப்பாளர்கள் ராஜேஷ், மகேஷ் ஆகியோர் தலைமையில் மாணவியின் உறவினர்களுடன் நேற்று காலை திருவலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மாணவியின் தற்கொலைக்கு காரணமான நர்சிங் கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களை டி.எஸ்.பி. ராஜேந்திரன் சமாதானம் செய்தார்.

இது தொடர்பாக காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், திருவலம் போலீஸ் சப்–ன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் மீது மாணவியை தற்கொலைக்கு தூண்டியது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply