பிரதான வீதியிலிருந்து பல கிலோமீற்றர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியிலேயே எம்பிலிப்பிட்டி காணப்படுகின்றது.
எனவே, இவர்கள் இருவரும் அன்று ஏன் அப்பகுதிக்கு செல்ல வேண்டும்? இவர்களை யார்? எதற்காக கொலை செய்ய வேண்டும் என்பன இன்று வரை மர்மமாகவே உள்ளன
பவிதா 18 வயது இளம் பெண். எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவதகல , அலிகஹேனவத்த என்ற பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவள்.
குடும்பத்தின் மூத்தவளான இவளுக்கு ஒரு சகோதரி மட்டுமே. அம்பலாங்கொடையிலுள்ள பிரபல பாடசாலையில் உயர்தர உயிரியல் பிரிவில் கல்வி பயின்ற பவிதா கல்வியில் மிகுந்த கெட்டிக்காரி.
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையை எதிர்நோக்கியிருந்த நிலையில் படிப்பில் முழுமூச்சோடு ஈடுபட்டாள்.
இதனிடையே தான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அயல் வீட்டில் வசிக்கும் 24 வயது இளைஞன் நவீன் மீது காதல் கொண்டாள் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)
நவீன் மன்னார் பகுதியிலுள்ள இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்தான். நவீன், பவிதா ஆகிய இருவரினதும் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வர அவர்களும் அக்காதல் விவகாரத்துக்கு பச்சைக் கொடிகாட்டினர்.
எனவே, இருவரும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி காதல் வானில் சிறகடித்து பறந்தார்கள். பவிதா காதல் வயப்பட்டாலும் கல்வி நடவடிக்கைகளில் எவ்வித பின்னடைவினையும் சந்திக்கவில்லை.
பாடசாலை கல்விக்கு மேலதிகமாக உயர்தர உயிரியல் பாடங்களுக்கு அம்பலாங்கொடையிலுள்ள தனியார் வகுப்புக்கும் சென்று வந்தாள். வழமையாக சனிக்கிழமை நாட்களிலேயே தனியார் வகுப்புகள் நடைபெற்றன.
எனினும் தற்போது பாடசாலை விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை நாட்களிலும் வகுப்புகள் நடைபெற்றுவந்தன. எனவே, தனியார் வகுப்புகளுக்காக வீட்டிலிருந்து அதிகாலை 6 மணியளவில் சென்றால் மீண்டும் மாலை 6 மணியளவிலேயே வீடு வந்து சேர்வாள்.
பஸ் குருந்துகஹதம்ம நகரை அண்மிக்கும் தருவாயில் தனது தந்தைக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தான் இருக்கும் இடத்தை தெரியப்படுத்துவாள். தந்தையும் சரியாக அந்த நேரத்தில் அங்கு வந்து நிற்பார். அதன்பின் வீடு வரை தந்தை அழைத்துச் செல்வார்.
இது இவ்வாறு இருக்க கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழமைபோல் தனியார் வகுப்புக்காக காலை 6.30 மணிக்கும் 7.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் புத்தகப்பையையும், தாய் சமைத்த உணவினையும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டாள். இதன்போது தனது கையடக்க தொலைபேசியை எடுத்துச் செல்லவும் அவள் தவறவில்லை.
அதன்பின் காலை 11.30 மணியளவில் பவிதாவின் சகோதரி அவளுடைய தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்திய போது வழமைக்கு மாறாக தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
வழமையாக பவிதா வகுப்பில் இருக்கும் நேரங்களில் கைபேசியை ‘சைலன்டில்’ (Silent Mode) போட்டு தான் வைத்திருப்பாள்.
எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைத்திருப்பது கிடையாது. எனினும் அன்று தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அவளுடைய சகோதரிக்கு சற்று சந்தேகத்தை உண்டுபண்ணியது.. எனவே சகோதரி சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்பை ஏற்படுத்தி பார்ப்போம் என்று இருந்துவிட்டாள்.
பகலுணவு வேளை வரும் வரை காத்திருந்த அவள் மீண்டும் பவிதாவின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தினாள்.
எனினும், அச்சந்தர்ப்பத்திலும் அவளுடைய தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனவே, தாயிடம் சென்று ” அம்மா என்ன காரணம் என்று தெரியவில்லை.
அக்காவின் தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் நவீன் அண்ணாவிடம் கேட்டுப் பார்ப்போம்” என்று கூறினாள். அதற்கு தாயும் சம்மதித்தாள்.
அதன்படி இருவரும் சேர்ந்து பவிதாவின் காதலான நவீனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார்கள். எனினும், அந்த தொலைபேசி அழைப்புகளுக்கு நவீன் பதிலளிக்கவில்லை.
இவ்வாறு மிக நீண்ட நேரமாக இருவரின் தொலைபேசி இலக்கங்களுக்கும் அழைப்பை ஏற்படுத்திய வண்ணம் இருந்தார்கள்.
ஆயினும், தொடர்ந்து நவீன் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காத நிலையிலும், பவிதாவின் தொலைபேசி நிறுத்தப்பட்டும் இருந்தன. எனவே நேரம் செல்ல செல்ல இது பவிதாவின் குடும்பத்தினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொருவருடைய எண்ண அலைகளும் பலவாறு சிந்தித்தன.
பவிதா நவீனுடன் வீட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டாளா?, இதனால் தான் பவிதாவின் தொலைபேசி நிறுத்தப்பட்டிருக்கின்றதா?, பவிதா தன்னுடன் இருப்பதால் தான் நவீன் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காமல் இருக்கின்றானா? என்றெல்லாம் பலவாறு சிந்தித்தனர்.
எனவே, அவர்களுக்குள் எழுந்த சந்தேகத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் முகமாக நவீனின் வீட்டை நோக்கிச் சென்றார்கள்.
எனினும், அங்கும் நிலைமை தலை கீழாகவே இருந்தது. நவீனை காணவில்லை என்ற பதட்டத்தில் ஆளுக்கொரு பக்கம் புலம்பிக்கொண்டிருந்தார்கள்.
காலை 10.30 மணியவில் நண்பரொருவரை சந்தித்து வருகின்றேன். என்றுகூறி மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற நவீன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்றும், அவனுடைய தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தினால் அவன் அதற்கு பதிலளிக்க தவறுகின்றான் என்றும் நவீனின் குடும்பத்தினர் கூறினார்கள்.
மிக நீண்ட யோசனையின் பின் இரு குடும்பத்தினரும் இருவர் தொடர்பாகவும் தேடிப் பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தனர்.
இதன்போது பவிதாவின் சகோதர முறையிலான பியந்த தொடர்ந்து இருவரினதும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தியவாறே இருந்தார்.
அதுமட்டுமின்றி இருவருடைய தொலைபேசி .இலக்கத்துக்கும் “உங்கள் இருவரையும் காணாது நாங்கள் பயத்தில் இருக்கின்றோம்.
தயவு செய்து எங்களுக்கு ‘கோல்’ ஒன்று எடுங்கள்” என்று குறுங்தகவலொன்றையும் அனுப்பி வைத்தார். ஆயினும் அதற்கும் இருவரிடமிருந்தும் எந்தவித பதிலும் வரவில்லை.
அதனைத் தொடர்ந்து அம்பலாங்கொடையிலிருந்து மாலை 6.00 மணிக்கும் 8.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குருந்துகஹதம்ம நகரை நோக்கிவரும் சகல பஸ் வண்டிகளிலும் ஏறி பவிதா தொடர்பாக தேடிப் பார்த்தார்கள். எனினும் அங்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருந்தது.
ஏமாற்றத்துடன் இரவு 8 மணியளவில் வீட்டுக்கு வந்தடைந்தவர்களுக்கு. அதற்குபிறகு என்ன செய்வது? என்று ஒன்றுமே புரியவில்லை.
இந்த நிலையில் தான் இனிமேலும் பொறுக்கமுடியாது என்று பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்வோம் என்ற முடிவுக்கு வந்தனர்.
அதன்படி எம்பிலிப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பவிதாவின் தாய் தனியார் வகுப்புக்காக வீட்டிலிருந்து சென்ற மகள் இன்னும் வீடு திரும்பவில்லையென்றும், நவீனின் தந்தை காலை 10.30 மணியளவில் நண்பரொருவரை சந்தித்து வருவதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் சென்ற மகன் இன்னும் வீட்டுக்கு வரவில்லையென்றும் வெவ்வேறு முறைப்பாடுகளை பதிவு செய்தார்கள்.
கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய எம்பிலிபிட்டிய பொலிஸார் தமது விசாரணைகளை துரிதமாக ஆரம்பித்தார்கள். அதுமட்டுமின்றி, இருவரினதும், நண்பர்கள்,உறவினர்கள் என்று அனைவரும் தங்களால் முடிந்த அளவில் இருவரையும் தேடி அலைந்து திரிந்தார்கள்.
ஆயினும், அவர்களுடைய முயற்சிக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை.. அதற்குபிறகு அடுத்த நாள் காலை 11.00 மணியளவில் பவிதாவின் வீட்டுக்கு வந்த எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் பவிதாவின் குடும்பத்தவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டதுடன், இருவர் தொடர்பாக இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லையென்றும், இதுதொடர்பாக அயல் பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கும் தாம் அறிவித்துள்ளதாகவும் கூறிச்சென்றனர்.
மேலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளும் நோக்கில் தான் எங்கோ தப்பிச்சென்றிருக்க வேண்டும். அவர்களை தேடிக்கண்டுப் பிடித்து திருமணம் செய்து வையுங்கள் என்றும் இருவீட்டாருக்கும் பொலிஸார் அறிவுரைகளை வழங்கினர்.
இதனிடையே எல்பிட்டிய நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியிலுள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதற்கமைய குறித்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய பொலிஸார் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தின் ஊடாக அதன் உரிமையாளரை கண்டுபிடிக்க விழைந்தனர்.
எனினும் அநாதரவாக கிடந்த குறித்த மோட்டார் சைக்கிளுக்கும், நவீன், பவிதா தலைமறைவுக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் இருக்குமா? என்பது தொடர்பில் ஆரம்பத்தில் பொலிஸார் சந்தேகிக்க தவறிவிட்டனர். எனவே தான் எல்பிட்டிய பொலிஸார் இது தொடர்பாக நவீனின் பெற்றோருக்கு அறிவிக்கவில்லை..
எனினும், எல்பிட்டிய நீர்வீழ்ச்சிக்கு அருகிலிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்பதை எப்படியோ அறிந்துகொண்ட நவீனின் வீட்டார் தம்மை நீர்வீழ்ச்சிக்கு அருகில் அழைத்துச் செல்லுமாறு பொலிஸாருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்பின்னரே 13 ஆம் திகதி இரு வீட்டாரும் பொலிஸாருடன் இணைந்து எல்பிட்டிய நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று தேடுதலை மேற்கொண்டனர்.
இதன்போதே எல்பிட்டிய நீர்வீழ்ச்சிக்கு அருகிலிருந்து 48 மீற்றர் தூரத்திலுள்ள காட்டுப்பகுதியில் சிதைவுற்ற நிலையில், அரைகுறையான ஆடைகளுடன் பவிதாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, பவிதாவின் சடலம் கிடந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் நவீனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.
மேலும் சடலங்கள் காணப்பட்ட அயல் பகுதிகளை சோதனைக்குட்படுத்திய போது அதிக விஷ தன்மைகூடிய வெற்றுக்கிருமிநாசினி போத்தலொன்று கண்டெடுக்கப்பட்டதுடன், நஞ்சருந்தி வாந்தி எடுத்திருப்பதற்கான அறிகுறிகளும் ஆங்காங்கே காணப்பட்டன.
எனவே, இவற்றை உன்னிப்பாக அவதானித்த பொலிஸார் இவர்கள் இருவரும் நஞ்சருந்தியே தற்கொலைக்கு முயற்சித்திருக்க வேண்டும் என்ற அனுமானத்துக்கு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளுக்காக சம்பவ இடத்துக்கு வந்த எல்பிட்டிய நீதவான் சடலங்களை பார்வையிட்ட போது பவிதாவின் சடலம் டவல் ஒன்றினால் போர்த்தப்பட்டிருந்தது.. எனவே, அவற்றை விலக்கி பார்த்த போது அவளுடைய கீழ் உள்ளாடையை யாரோ கழற்றி மீண்டும் போடுவதற்கு முயற்சி செய்திருப்பது தெரியவந்தது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாருக்கு உயிரிழந்த நவீனின் நண்பன் கருத்து தெரிவித்திருக்கையில் “நான் மிகுந்த பயத்துடன் இருக்கின்றேன்.
உடனே எனது தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்” என்று நவீன் தனக்கு குறுங்தகவலொன்றினை அனுப்பியிருந்ததாகவும் அதற்கு பிறகு தான் அழைப்பை ஏற்படுத்திய போது அவனுடைய தொலைபேசி நிறுத்திவைக்கப்பட்டிருந்தாகவும் தெரிவித்திருந்தார்.
அதன்பிறகு பிரேத பரிசோதனைகளுக்காக எல்பிட்டிய வைத்தியசாலைக்கு சடலங்கள் இரண்டும் எடுத்துச் செல்லப்பட்டன.
அதன்படி இருவரும் தற்கொலை செய்துகொள்ளவில்லையென்றும் , திட்டமிடப்பட்ட வகையில் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அதன்முடிவுகள் அறிவித்தன.
பவிதா தலையில் ஆயுதமொன்றினால் பலமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், இறுதியாக பாலியல் ரீதியான செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மேலும் நவீன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பிரதான வீதியிலிருந்து பல கிலோமீற்றர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியிலேயே எம்பிலிப்பிட்டி நீர்வீழ்ச்சி காணப்படுகின்றது.
எனவே இவர்கள் இருவரும் அன்று ஏன் அப்பகுதிக்கு செல்ல வேண்டும் ? இவர்களை யார்? எதற்காக கொலை செய்ய வேண்டும் என்பன இன்று வரை மர்மமாகவே உள்ளன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் போதிய சாட்சியங்களும் கிடைக்கப்பெறாத நிலையில் விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளன.
அதுமட்டுமின்றி, இருவரும் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தினத்தன்று இருவரையும் பொது இடங்களில் கண்டதாக கூறப்படும் சாட்சியங்களிலும் முரண்பாடுகள் நிறைந்ததாகவே காணப்படுகின்றன.
இந்நிலையில் மேலதிக பரிசோதனைகளுக்காக இருவரினதும் சடலங்களிலிருந்து பெறப்பட்ட உடற் கூறுகள் ஜின்.டெக். நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
எதுஎவ்வாறாயினும், இயற்கையின் குளிர்ச்சியும் அழகும் ஒன்றாக சேரப்பெற்ற நீர்வீழ்ச்சிக்கு அருகில் இக்காதலர்களின் மரணமானது இதயத்தை கதி கலங்க வைக்கின்றது.. எனவே, குறித்த கொலையுடன் தொடர்புடைய உண்மைகள் விரைவில் துலங்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட உறவினர்களின் எதிர்பார்ப்பாகும்.
(2015.12.24 திகதி வரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில்)