சத்யராஜ் கதாநாயகனாக உயர்ந்த நேரத்தில், நடிகர் கமலஹாசன் தனது சொந்தப் படத்தில் அவரை கதாநாயகனாக நடிக்க வைத்தார். அந்தப்படம் பெரிய வெற்றி பெற்றது.

கமலஹாசன் கதாநாயகனாக நடித்த “சட்டம் என் கையில்” படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமான சத்யராஜ், கமலஹாசன் நடித்த “காக்கிச்சட்டை” படத்தில் வில்லனாக புகழ் பெற்று ஹீரோவாகவும் ஆனார்.

அவர் ஹீரோவாக நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நேரத்தில், நடிகர் கமலஹாசன் தனது தயாரிப்பில் “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” என்ற படத்தில் சத்யராஜை ஹீரோவாக்கினார்.

கமலஹாசன் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்க நேர்ந்த அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“கமல் சார் நடிப்போடு சொந்தப் படங்களும் எடுத்துக் கொண்டிருந்தார். அவரது நிறுவனம் தயாரிக்கும் படத்தில் என்னை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஏற்பட்டிருக்கிறது.

இதுபற்றி அவர் தனது விருப்பத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டபோது என் மீதான கமல் சாரின் நம்பிக்கையையே அது வெளிப்படுத்துவதாக அமைந்தது.

மலையாளத்தில் அப்போது மோகன்லால் நடித்த `போயிங் கோயிங்’ படத்தை தமிழில் ரீமேக் செய்யும் நோக்கத்துடன் கமல் சார் பார்த்தார்.

என்னையும் படம் பார்க்க அழைத்துச் சென்றார். அந்தப்படம் முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் அமைந்தது. படத்தை பார்த்தவர் என்னிடம், “இந்தப்படம் வேணாங்க” என்று சொல்லிவிட்டார்.

அடுத்து நாங்கள் பார்த்த படம் மம்முட்டி நடித்த “ஆவநாழி” படம். இது கேரளாவில் அதிகபட்ச வசூல் செய்த படம். கேரளாவில் அதற்கு முன்பிருந்த அத்தனை வசூல் ரெக்கார்டுகளையும் உடைத்த படம்.

சுப்ரகீத் தியேட்டரில் படம் பார்க்க கமல் சார் ஏற்பாடு செய்திருந்தார். டைரக்டர் சந்தானபாரதியும் படம் பார்க்க வந்திருந்தார்.

குணசித்ரம், ஆவேசம், ஆக்ரோஷம் என்று அனைத்தையும் கலந்து, மம்முட்டி அருமையாக நடித்திருந்தார். படம் பார்க்கும்போதே எனக்குள், “இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்காது.

இதுமாதிரி கேரக்டரில் கமல் சாரே நடிக்க விரும்புவார். நடிப்புக்கு சவாலான அத்தனை விஷயங்கள் படத்தில் இருக்கின்றன. எனவே இதில் நமக்கு `நோ சான்ஸ்’ என்ற நினைப்பு ஓடியது.

படம் முடிந்ததும் கமல் சார் என்னிடம், “எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“சூப்பர் சார்!” என்றேன். எப்படியும் கமல் சார்தான் நடிக்கப்போகிறார்! ஆரம்பத்திலேயே வாழ்த்தி விடுவோம் என்று எண்ணினேன்.

ஆனால் நடந்தது வேறு. “இந்த கேரக்டரில்தான் நீங்கள் நடிக்கிறீர்கள். சம்பளம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டார்.

“சார்! உங்க கிட்ட போய் சம்பளம் பேசிக்கிட்டு…” என்று நான் தயங்கினேன்.

“சரி, சரி. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார், கமல்.

இந்தப்படம்தான் “கடமை கண்ணியம் கட்டுப்பாடு.” சந்தானபாரதி டைரக்ட் செய்தார்.

முதல் நாள் படப்பிடிப்புக்கு கமல் சார் வந்தார். பிறகு, படம் முடிந்த பிறகுதான் வந்தார்.

“உங்கள் படம், ஒவ்வொரு ஏரியாவிலும் என்ன விலைக்கு விற்கிறது தெரியுமா?” என்று என்னிடம் கேட்டார். நான் விழித்தேன். உண்மையில் எனக்கு அது தெரியாது. கமல் அப்படிக் கேட்டதன் அர்த்தம் பிறகு எனக்குத் தெரிந்தது.

கதாநாயகனாக நடித்த படங்களுக்கு நான் அதுவரை வாங்கிய தொகையை விட, அதிக தொகையை எனக்குக் கொடுத்தார்!

இந்தப்படத்தின் வெற்றி விழாவுக்கு யார் யாரை அழைக்கலாம் என்பதை கமல் சார் என்னிடம் கலந்து பேசினார். அப்போது அவர், “தமிழ்த்திரையுலகின் பிதாமகராக இருக்கும் சிவாஜி சாரை தலைமை தாங்க அழைப்போம்.

நான் சினிமாவுக்கு வந்த புதிதில் `உணர்ச்சிகள்’ என்ற படத்தில் என்னை நடிக்க வைத்து ரசிகர்கள் மத்தியில் என்னை எதிர்பார்ப்புக்குரியவராக்கிய டைரக்டர் ஆர்.சி.சக்தியை அழைப்போம்.

அதுமாதிரி சினிமாவில் நீங்கள் உயரம் காண காரணமாக இருந்த டைரக்டர் மணிவண்ணனையும் அழைப்போம்” என்றார். அப்படியே மூவரையும் அழைத்து விழா எடுக்கவும் செய்தார்.

கமல் சாரின் சொந்தப் படத்திலேயே ஹீரோவாக நடித்த பிறகு சினிமா வட்டாரத்தில் எனக்கான மரியாதையும் கூடுதல் ஆனது.

நான் சினிமாவில் வளர்ந்த நேரத்திலும் கேரக்டர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தேனே தவிர, இளம் வயது நாயகனாகவே படங்களை தொடரவேண்டும் என்று எண்ணியதில்லை.

டைரக்டர் பாரதிராஜாவின் “வேதம் புதிது” படத்தில் பாலுத்தேவர் என்ற கேரக்டரில் நடித்தபோது எனக்கு 32 வயதுதான். 31 வயதில், “மிஸ்டர் பாரத்” படத்தில் ரஜினி சாருக்கு அப்பாவாக நடித்தேன்.

நடிப்பில் `இமேஜ்’ பார்க்காமல், அந்த கேரக்டரில் என்ன செய்தால் ரசிகர்கள் ஈர்ப்புக்குள்ளாவார்கள் என்பதை மட்டும் கவனித்தேன்.

4f6fa8d9-7b73-4988-8f50-b0876f5d816a_S_secvpf.gifரஜினி சாருடன் நடித்த “மிஸ்டர் பாரத்” படத்தில்கூட மிகச்சிறந்த அனுபவம் கிடைத்தது. `திரிசூல்’ என்ற இந்திப்படத்தின் ரீமேக்தான் இந்தப்படம்.

இந்தியில் சஞ்சீவ்குமார், அமிதாப்பச்சன், சசிகபூர் ஆகியோர் நடித்திருந்தார்கள். தமிழில் சஞ்சீவ்குமார் கேரக்டரில் நானும், அமிதாப் கேரக்டரில் ரஜினி சாரும், சசிகபூர் கேரக்டரில் எஸ்.வி.சேகரும் நடித்தோம்.

இந்தப்படத்தில் நானும், ரஜினி சாரும் பாடி நடித்த “என்னம்மா கண்ணு” பாட்டு, இப்பவும் ரசிகர்கள் விரும்புகிற பாட்டாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு படத்தில்கூட இந்தப் பாடலை `ரீமிக்ஸ்’ செய்து சேர்த்திருந்தார்கள்.

ரஜினி சார் “16 வயதினிலே” படத்தில் பேசிய `இது எப்படி இருக்கு?’ வசனம் ரசிகர்களிடையே ரொம்பவும் பிரபலம். அது மாதிரி “24 மணி நேரம்” படத்தில் நான் பேசிய “என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே” வசனமும் ரசிகர்களைக் கவர்ந்தது.

“மிஸ்டர் பாரத்” படத்தில் நானும், ரஜினி சாரும் எங்கள் புகழ் பெற்ற வசனங்களை மாற்றிக் கொண்டோம்! வில்லன் ரகுவரனை புரட்டியெடுத்துவிட்டு “இது எப்படி இருக்கு?” என்று ரஜினி சார் ஸ்டைலில் நான் சொல்ல, ரஜினி சாரோ, என் ஸ்டைலில் “என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே” என்று பேசினார்.

இந்த வசன மாற்றத்துக்கு தியேட்டர்களில் ரசிகர்களின் பலத்த கரகோஷம். படமும் பிரமாண்ட வெற்றி பெற்றது.

படம் முழுக்க, இந்த காட்சியில் இந்த மாதிரி செய்தால் நன்றாக இருக்கும் என்று பேசி வைத்துக்கொண்டு நடித்ததையும் மறக்க முடியாது.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
தொடரும்..

(சினிமா தொடர்….1….9)

Share.
Leave A Reply