கன்னி மரியாள் இயேசு பாலகனைப் பிரசவித்ததை குறிக்கும் நத்தார் தினத்தையொட்டி ‘கன்னி’ ஆடாக கருதப்பட்ட ஆடொன்று இரட்டை குட்டிகளை ஈன்ற அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
நொட்டிங்கம்ஷியரில் பார்ன்ஸ்பீல்ட் எனும் இடத்திலுள்ள வைட் போஸ்ட் பண்ணையைச் சேர்ந்த ரோஸி என்ற ஆடே இவ்வாறு இரட்டைக் குட்டி களை ஈன்றுள்ளது.
மேற்படி ஆடு எந்தவொரு எதிர்ப்பாலைச் சேர்ந்த ஆட்டுடனும் கலவியில் ஈடுபட்டதாக கருதப்படாத நிலையில் அந்த ஆடு குட்டிகளை ஈன்றுள்ளமை பண்ணை உரிமையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அத்துடன் அண்மையில் அந்தப் பண்ணையிலுள்ள விலங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் போதும் ரோஸி கர்ப்பமடைந்திருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்தப் பண்ணையின் உரிமையாளர்களும் ஊழியர்களும் இதனை நத்தார் தினத்தையொட்டி இடம்பெற்ற அதிசயமாகவே கருதுகின்றனர்