இரா­ணு­வத்­தி­னரின் உணர்ச்­சியைத் தூண்டி, நாட்டில் அர­சியல் மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவும், அதே இரா­ணு­வத்தை தமது கைக்குள் போட்டுக் கொள்­வ­தற்­கான முயற்சியில் அர­சாங்­கமும் தீவிரம் காட்டி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட கடத்­தப்­பட்டு காணா­மற்­போகச் செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பாக கைது செய்யப்­பட்டு  விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள, லெப்.கேர்ணல் சம்மி குமா­ர­ரத்ன, லெப்.கேர்ணல் பிர­போத வீரசேகர, சார்ஜன்ட் மேஜர் உப­சேன உள்­ளிட்ட இரா­ணுவப் புல­னாய்வு அதி­கா­ரி­களை வெலிக்­கடைச் சிறைச்­சா­லையில் உள்ள மருத்­து­வ­ம­னையில் சென்று பார்­வை­யிட்­டி­ருந்தார் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ.

சிறைச்­சா­லையில் அடைக்­கப்­பட்­டி­ருந்த தனது முன்னாள் அமைச்­சர்கள், அல்­லது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைப் பார்வை­யி­டவே அங்கு சென்று வந்த மஹிந்த ராஜபக் ஷ, இப்­போது இரா­ணுவ அதி­கா­ரி­களைச் சந்­திக்­கவும் அங்கு சென்றி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷவுக்கும், இந்த இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்கும் தனிப்­பட்ட தொடர்­புகள் அல்­லது அறி­முகம் இருந்திருக்குமா என்று தெரி­ய­வில்லை.

அவ்­வா­றி­ருந்தும், அவர் இரா­ணுவப் புல­னாய்வு அதி­கா­ரி­களைப் பார்­வை­யிடச் சென்­றி­ருக்­கிறார் என்றால், அதற்கு ஒரே காரணம் அர­சியல் நலன் தான்.

தேர்தல் காலங்­களில் விடு­தலைப் புலிகள் தலை­தூக்கப் போகின்­றனர் என்று சிங்­கள மக்­களை உசுப்­பேற்­றியும், புலிகளை அழித்த வெற்றிப் பிர­தா­பங்­களைக் கூறியும் வாக்கு வேட்­டை­யாட முனைந்­தவர் தான் மஹிந்த ராஜபக் ஷ.

ஆனால் கடை­சி­யாக நடந்த இரண்டு தேர்­தல்­க­ளிலும் அவ­ரது இந்தப் பிர­சா­ரங்கள் சிங்­கள மக்கள் மத்­தியில் எடுபடவில்லை.

அதனால் அவ­ரது, மீண்டும் ஜனா­தி­ப­தி­யாகும் கனவு மட்­டு­மன்றி, குறைந்­த­பட்சம் பிர­தமர் பத­வி­யை­யா­வது பிடித்து விடலாம் என்ற கனவும் கூடத் தகர்ந்து போனது.

ஒரு சில மாதங்கள் அவ்­வப்­போது அர­சாங்­கத்­துடன் முட்டி மோதி வந்த மஹிந்த ராஜபக் ஷ, வர­வு-­செ­லவுத் திட்ட விவா­தத்தின் போது பாரா­ளு­மன்­றத்தில் முதல் முறை­யாக உரை­யாற்­றினார்.

அந்த உரையில் அவர், போரில் பங்­கெ­டுத்த மூத்த படை அதி­கா­ரி­களை ஓய்வு பெறும் நிலைக்கு கொண்டு செல்­லாமல் சேவையில் வைத்­தி­ருக்க வேண்டும் என்றும், அதன் மூலம் போர்க்­குற்ற விசா­ர­ணையில் இருந்து அவர்­க­ளுக்கு நிறு­வன ரீதி­யான பாது­காப்பை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

அவ­ரது அந்த உரை, தனது அடுத்த கட்ட அர­சியல் நகர்­வுக்கும் படை­யி­ன­ரையே பயன்­ப­டுத்த திட்­ட­மி­டு­கிறார் என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

தேசிய பாது­காப்பு மற்றும் போர்க்­குற்ற விசா­ர­ணையில் இருந்து படை­யி­னரைப் பாது­காத்தல் ஆகிய விட­யங்­களின் ஊடாக, படை­யினர் மத்­தி­யிலும், சிங்­கள மக்கள் மத்­தி­யிலும், தன் மீது கவ­னத்தை ஏற்­ப­டுத்த முனைந்­தி­ருக்­கிறார் மஹிந்த ராஜபக் ஷ.

ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட கடத்­தப்­பட்டு காணா­மற்­போகச் செய்­யப்­பட்ட சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய இரா­ணுவப் புல­னாய்வு அதி­கா­ரி­களைப் பார்­வை­யிட்டு, அவர்­க­ளுக்கு ஆறுதல் கூறி­யுள்­ள­தா­னது, படை­யினர் மத்­தியில் அர­சாங்­கத்தின் மீது அவர்­களின் அதி­ருப்­தி­களைத் திருப்பி விடு­வ­தற்­கான முயற்­சி­யாகும்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்­சியில், இடம்­பெற்ற பல்­வேறு குற்­றச்­செ­யல்­க­ளுக்கு படை­யினர் பலிக்கடாக்களாக்கப்பட்டுள்­ளனர்.

பல்­வேறு சம்­ப­வங்கள் தொடர்­பாக கைது செய்­யப்­பட்டு நீதி­மன்ற விசா­ர­ணை­களை எதிர்­கொண்­டுள்­ள­வர்­களில் பலரும் படை­யி­ன­ரா­கவே உள்­ளனர்.

லசந்த விக்­கி­ர­ம­துங்க படு­கொலை, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ரவிராஜ் மற்றும் ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம் படு­கொ­லைகள், பிரகீத் எக்­னெ­லி­கொட கடத்தல் என்று பல்­வேறு சம்­ப­வங்­க­ளிலும் தொடர்­பு­டை­ய­வர்­க­ளாக கைது செய்யப்பட்டிருப்பவர்கள் படை­யினர் தான்.

இரா­ணு­வத்தின் நம்­பிக்­கையை சம்­பா­திப்­ப­தற்­காக போரா­டு­கின்ற ஒரு அர­சாங்கம், இத்­த­கைய சம்­ப­வங்கள் அனைத்திலும், படை­யி­னரை திட்­ட­மிட்டு மாட்டி வைக்க ஒரு­போதும் முனை­யாது.

அது எத்­த­கைய எதிர்­வி­ளைவை ஏற்­ப­டுத்தும் என்­பதை ஒரு அர­சாங்கம் நன்­றா­கவே அறியும். இது மஹிந்த ராஜபக் ஷவுக்கும் கூட தெரி­யாத விட­ய­மல்ல.

11258146_640656322700544_1988528905562869142_n-800x3651ஆனாலும், விளக்­க­ம­றி­யலில் உள்ள இரா­ணுவப் புல­னாய்வு அதி­கா­ரி­களை சந்­தித்­துள்­ளதன் மூலம், மஹிந்த ராஜபக் ஷ, தாம் படை­யி­னரின் பக்கம் நிற்­ப­தாக காட்­டிக்­கொள்ள முற்­பட்­டி­ருக்­கிறார்.

இதனை ஒரு பகு­தி­யினர் பெரு­மி­த­மாக கரு­தி­னாலும், மற்­றொரு பகு­தி­யினர் மறு­வ­ள­மாகச் சிந்­திப்­பார்கள் என்­பதை அவர் மறந்து விட்­டி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் நடந்த குற்­றச்­செ­யல்கள் எல்­லாமே அவ­ருக்குத் தெரிந்து தான் நடந்­ததா? என்ற கேள்­வியை அவர்கள் எழுப்ப முனை­வார்கள்.

குற்­றம்­சாட்­டப்­பட்ட படை­யி­ன­ருக்­காக பரிந்து பேசி­யி­ருப்­பதும், நாட்டின் சட்­டத்­து­றை­யினால் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் போது அவர்­களை அப்­பா­விகள் என்று விழித்­தி­ருப்­பதும், அவரும் இத்­த­கைய குற்­றங்­க­ளுக்கு உடந்­தை­யாக இருந்­தி­ருக்­கி­றாரோ என்ற எண்­ணத்­தையே ஏற்­ப­டுத்தும்.

அது­மட்­டு­மன்றி, வடக்கில் எடுக்­கப்­படும் எல்லா நட­வ­டிக்­கை­க­ளையும், பாது­காப்பை பல­வீ­னப்­ப­டுத்தும் நகர்­வு­க­ளாக மஹிந்த ராஜபக் ஷவும் அவ­ரது தரப்­பி­னரும் வெளிப்­ப­டுத்த முனை­வது, படை­யி­னரின் அனு­தா­பத்­தையும் ஆத­ர­வையும் தேடிக்­கொள்ளும் முயற்­சியே என்­பதை தான் காட்­டு­கி­றது. இது ஆபத்­தான ஒரு விடயம் என்­பதை அர­சாங்­கமும் அறியும்.

யாழ்ப்­பா­ணத்தில் நடந்த தேசிய நத்தார் நிகழ்வில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இதனைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

அதே­வேளை, தியத்­த­லாவ இரா­ணுவ முகாமில் நடந்த நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இந்த விட­யத்தை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

‘பாது­காப்பை பல­வீ­னப்­ப­டுத்­து­கி­றது அர­சாங்கம்’ என்ற மஹிந்த ராஜபக் ஷவின் குற்­றச்­சாட்­டு­களை வலுவற்றதாக்குவதற்கு அர­ச­த­ரப்பும் தீவி­ர­மான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருக்­கி­றது.

உலக மாற்­றங்­களை இலங்கை இரா­ணு­வமும் உள்­வாங்கிக் கொள்ள வேண்டும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பிட்­டது, தனியே படை­களை நவீன மயப்­ப­டுத்தும் விட­யத்தை மட்­டு­மல்ல.

அதற்கும் அப்பால், நவீன உல­கத்தில் மனித உரி­மைகள் மற்றும் மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களும் முக்­கி­ய­மா­னவை என்­பதைத் தான் அவர் கூற முனைந்­துள்ளார்.

பத்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் இருந்­ததை விடவும் இப்­போது மனித உரி­மைகள் என்ற விடயம் பெரி­ய­தொரு விவகாரமாக மாறி­யி­ருக்­கி­றது.

மனித உரி­மை­களைச் சார்ந்தே முடி­வு­களை எடுக்க உலகம் தலைப்­ப­டு­கி­றது.

அர­சியல் ரீதி­யான, இரா­ஜ­தந்­திர ரீதி­யான, பாது­காப்பு ரீதி­யான உற­வு­க­ளுக்கும், முடி­வு­க­ளுக்கும் மனித உரி­மைகள் முக்கி­ய­மான ஒரு கரு­வி­யாக மாறி­யி­ருக்­கி­றது.

இந்த உண்­மையை இரா­ணுவம் புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் ரணில் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இதனைக் குறிப்­பிட்­டுள்­ள­தற்குக் காரணம், போர்க்­குற்ற விசா­ரணை தான்.

போர்க்­குற்ற விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­படும் போது, படை­யினர் மீதான நட­வ­டிக்­கைகள் தவிர்க்க முடி­யா­தது என்பதையும், அர­சாங்கம் அத்­த­கைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் போது படை­யினர் பொறுமை காக்க வேண்டும் என்­ப­தையும் தான் அவர் அவ்­வாறு கூற வந்­தி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷ தரப்பு, இந்த விவ­கா­ரத்தை பழி­வாங்­க­லா­கவோ, பாது­காப்பை பல­வீ­னப்­ப­டுத்தும் செய­லா­கவோ, காட்­டிக்­கொ­டுப்­பா­கவோ அல்­லது இன­வா­த­மா­கவோ பயன்­ப­டுத்தக் கூடிய ஆபத்து இருப்­பதை அர­சாங்கம் உணர்ந்து கொண்­டி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ வின் வலை­யிலும் சிக்கிக் கொள்­ளாமல் அதே­வேளை, சர்­வ­தேச சமூ­கத்­தையும் பகைத்துக் கொள்ளாமல் இந்த விடயத்தை கையாள்வது மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு சிக்கலானதொரு விடயம் தான்.

படையினர் மீதான நடவடிக்கைகள், பாதுகாப்பு ரீதியான மறுசீரமைப்புகள் எல்லாமே இந்த அரசாங்கத்தினால் விரும்பி மேற்கொள்ளப்படும் விடயங்களல்ல.

இது சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களினால் இடம்பெறும் விடயங்கள். இருந்தாலும், எப்படி ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கும்   தரப்பினருக்கு வாய்ப்பையும் கொடுக்காமல்- அதேவேளை, படையினரையும் பகைத்துக் கொள்ளாமல், சர்வதேச சமூகத்தையும் விரோதித்துக் கொள்ளாமல், இவையெல்லாவற்றுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் திருப்திப்படுத்துவது என்பது, தற்போதைய அரசாங்கத்துக்கு குதிரைக் கொம்பான விடயம் தான்.

இதனை அரசாங்கம் எவ்வாறு சாதிக்கப் போகிறது என்பதை எதிர்வுகூற முடியாது. பொறுத்திருந்து பார்ப்பதை விட வேறு வழியில்லை.

-சுபத்ரா-

Share.
Leave A Reply