அங்காரா: துருக்கி கடற்கரையில் உயிரிழ்ந்த நிலையில் கரை ஒதுங்கிய சிரிய அகதி குழந்தையான ஐலனின் (aylan-kurdi) புகைப்படம், மொத்த உலகத்தின் மனசாட்சியை உலுக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது.
சிரியாவில் நடைபெற்றுவரும் கொடூரமான உள்நாட்டு போர் காரணமாக இந்த ஆண்டில் ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பாவிற்கு சென்று தஞ்சம் புக கடல் வழியாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டுள்ளனர்.
Aylan Kurdi and his father Abdullah
இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் துருக்கியிலிருந்து 23 அகதிகளுடன் கிரீஸ் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் நடுக்கடலில் மூழ்கி மூச்சுத்திணறி பலியாகினர்.
அதில் ஒருவன்தான் மூன்று வயதே ஆன ஐலன் குர்தி. அவனோடு சேர்ந்து அவன் தாயும் 5 வயது அண்ணனும் நீரில் மூழ்கி இறந்தனர்.
துருக்கி கடற்கரையில் உயிரிழ்ந்த நிலையில் கரை ஒதுங்கிய ஐலனின் படம், அகதிகள் பிரச்சனையில் உலகின் கள்ள மௌனத்தை அசைத்து பார்த்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொள்ள தொடங்கின.
இந்நிலையில் உயிரிழந்த ஐலனின் மாமா, முகமது குர்தி, அவரது மனைவி மற்றும் அவர்களின் ஐந்து குழந்தைகள் ஆகியோர் இன்று கனடாவிற்கு சென்று சேர்ந்தனர். இவர்களின் அகதி விண்ணப்பதை கனடா அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
கனடாவின் வான்கூவர் விமான நிலையத்திற்கு வந்த அவர்களை, கனடாவில் வசிக்கும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த திமா குர்தி வரவேற்றார். திமாவுடன் அவரது நண்பர்களும், பொது மக்களும் ஐலன் குடும்பத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.