நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட 6 இலட்சத்து 50 ஆயிரம் குற்றவாளிகளின் கை விரல் ரேகை அடையாளங்கள் குற்றப் பதிவுப் பிரிவில் (சி.ஆர்.டி) சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவை குற்ற விசாரணைக்கு பயன்படுத்தவென நாடளாவிய ரீதியில் விரிவு படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றப் பதிவுப் பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
கைவிரல் ரேகை ஒத்துப் பார்க்கும் சேவையை நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கும், குற்ற விசாரணையின் போது கைது நடவடிக்கைகளை இலகுபடுத்தும் விதமாகவும் இரு வேறு நடவடிக்கைகளின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த வைபவங்கள் பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் தலைமையில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க பிரதம அதிதியாக கலந்துகொள்ள இடம்பெற்றது.
அமைச்சின் செயலாளர் ஜகத் பி.ஜயவீர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான காமினி நவரத்ன, பூஜித்த ஜயசுந்தர, நந்தன முனசிங்க, ஜகத் அபேசிறி குணவர்தன உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரியந்த ஜயகொடி தெரிவித்ததாவது,
கைவிரல் ரேகையை வைத்து சந்தேக நபர்களை குற்றவாளிகளாக காணும் நடை முறை 1908 ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டது.
அப்போது ஆங்கிலேயர் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து இங்கு அழைத்து வந்த குழந்தை வேல் முதலியார் என்ற பொலிஸ் பரிசோதகரைக் கொண்டு இங்கு இந்த நடை முறை ஆரம்பிக்கப்பட்டது.
1908 முதல் 2012 ஆம் ஆண்டு வரை சாதாரண மனிதக் கண்களினால் சில கருவிகளைப் பயன்படுத்தி இது தொடர்பிலான சோதனைகள் இடம்பெற்றன.
எனினும் 2012 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில் நுட்ப பிரிவின் அனுசரணையில் இதற்கென விசேட மென் பொருள் உருவாக்கப்பட்டது.
அதன்படி 2013 பெப்ரவரி 28 முதல் கைவிரல் ரேகைகள் ஒத்துப் பார்க்க கணினி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் இந்த தொழில் நுட்ப வசதிகளை நாம் தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள 42 பொலிஸ் பிரிவுகள், குற்றப் புலனாய்வுப் பிரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, மோசடி தடுப்புப் பிரிவு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு ஆகிய விஷேட நிறுவனங்களுக்கும் விஸ்தரிப்பு செய்துள்ளோம். இதுவே இந்த நிகழ்வின் பிரதான நோக்கம்.
இதனூடாக குற்றவிசாரணைகள் இலகுபடுத்தப்படும்.
சந்தேகத்தில் கைதாகும் ஒருவரின் கை விரல் ரேகைகள் உடனடியாக பெறப்பட்டு சில மணி நேரங்களிலேயே ஒத்துப் பார்க்கப்படும்.
இது வீண் சிரமங்களை தடுக்க உதவும்.எம்மிடம் தற்போதுள்ள தரவுகளில் பழைமையான கைவிரல் ரேகை 1912 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். அத்துடன் அதில் மற்றொரு கைவிரல் ரேகைக்கு உரியவர் 212 குற்றங்களுடன் தொடர்புடையவராவார்.
இதனை விட சிறைகளில் இருந்து தப்பிய 7300 பேரின் விபரங்களும்திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 24 ஆயிரம் பேரின் விபரங்களும் 9943 இராணுவத்தில் இருந்து தப்பியோரின் விபரங்களும் கூட எம்மிடம் உள்ளன.
அதனால் இவ்வாறு விரிவுபடுத்தப்படும் திட்டம் குற்ற விசாரணைகளில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.