தம்புள்ளை பொற்கோவில், இலங்கையின் புகழுக்கு மையமாக இருப்பதுபோல, இருக்கும் இடத்திலும் மையமாகவே உள்ளது.
மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டமே இதன் அமைவிடம்.
இந்தக் கோவில் கொழும்புக்கு கிழக்கே, 148 கி.மீ. தூரத்திலும், கண்டிக்கு வடக்கே 72 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இது ஒரு குகை கோவில் என்பது கூடுதல் சுவாரஸ்யம். பயண வசதிகளும் பலே!
இதன் பழமையும் சிறப்பும் இலங்கையின் பாரம்பரிய சின்னமாக, உலக பாரம்பரிய தளங்களின் வரிசையில் இடம்பிடிக்கச் செய்துள்ளது.
கடந்த 1991ம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக இதை அறிவித்தது.
தமிழில் தம்புள்ளை பொற்கோவில் என்றும் சிங்கள மொழியில் தம்புளு லென் விகாரைய என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த குகைகோயில் இலங்கையில் ஒரு பொக்கிஷமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிற பெரிய வளாக குடவரை கோயிலாகும்.
160 மீட்டர் அளவுள்ள தளத்திற்கு பாறையே கோபுரமாக அமைந்துள்ளது. இதை சுற்றிலும் 80 க்கும் மேற்பட்ட ஆவண சித்தரிப்பு குகைகள் உள்ளன.
இவற்றில் ஐந்து குகைகள் முக்கியமானதாக கவர்கிறது. இந்த 5 குகைகளிலும் உள்ள பழமையான சிலைகளும் ஓவியங்களும் வியப்பை ஏற்படுத்துகிறது.
தம்புள்ளை பொற்கோவில் 150 மீட்டர் உயரமுள்ள பாறையில் ஐந்து குகைகளின் தொகுப்பாக காணப்படுகிறது. குகைக்குள் சந்நிதி அறைகளும் பிரிக்கப்பட்டுள்ளன.
பாறை மீதிருந்து பார்த்தால் கீழே உள்ள ஊர்கள், வயல்வெளிகள் நிலப்பரப்பின் பனோரமா காட்சி அழகாக தெரியும். அதில் 19 கி.மீ. தூரத்தில் உள்ள சிகிரியா பாறை அரண்மனையும் அடங்கும்.
கிழக்கு, மேற்காக 52 மீட்டர் நீளமும் நுழைவாயிலிலிருந்து பின்பக்கம் வரை 23 மீட்டர் அகலமும், 7 மீட்டர் வரை உயரமும் கொண்டது.
இங்குள்ள புத்தர் சிலைகள் பல்வேறு உயரங்களிலும், மனப்பான்மைகளிலும் மட்டுமல்ல, காலங்களினாலும் உருவாக்கப்பட்டது.
இலங்கையில் பெரும்பாலும் சிங்களர்களே புத்தமதத்தவர்களாக இருப்பதால் இதன் கலை மற்றும் கலாசார பிரதிபலிப்பு சிங்களர்களுடைய சகாப்தமாக விளங்குகிறது.
இங்கு உள்ள பெரிய சிலையின் நீளம் 15 மீட்டர் ஆகும். இங்கு மொத்தமாக, 1,500 ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இந்த படைப்புகளை ரசிக்கிறபோது, இயற்கையோடு அதிகம் கலந்திருந்த அக்கால கலைஞர்களுக்கு, நிகழ்கால வியாபர நோக்குடைய கலைஞர்கள் ஈடில்லை என்றே தோன்றுகிறது.
இங்கு உள்ள சிலைகள் மற்றும் ஓவியங்களில் பெரும்பாலானவை கவுதம புத்தர் மற்றும் அவர் வாழ்க்கை தொடர்புடையதுதான்.
பிந்தைய காலத்தில் இந்து மத கடவுள்களான விஷ்ணு, விநாயகர் சிலைகளும் சேர்க்கப்பட்டு, ஒரு மத சமதர்ம ஆலயமாக தற்போது இது திகழ்கிறது.
உயிர்ப்பான சுவரோவியங்கள் 2100 சதுர மீட்டருக்கு இந்த குகை கோயிலை கலை கோயிலாகவே மாற்றியுள்ளன.
மாரா பேயின் சலனம் மற்றும் புத்தரின் முதல் பிரசங்கத்தின் முத்தாய்ப்பு ஓவியங்களும் அதில் அடங்கும்.
இந்த குகைக் கோவிலில் புத்த மதத்தின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் புத்த மதம் இலங்கையில் பரவுவதற்கு முன்னரே இந்த குகைகள் தோன்றியுள்ளன.
வரலாற்று காலத்துக்கு முந்தைய மனிதர்கள் இந்த குகைகளில் வாழ்ந்துள்ளனர். 2700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் எலும்புக்கூடு புதைபடிமங்கள் இதை உறுதி செய்துள்ளன.
புத்தமதம் பரவிய பல நாடுகளில் குகைகள், மலைகள் போன்ற நிரந்தரமான, தியானம் அமைதிக்கு ஏற்பான பகுதிகளை தேர்வுசெய்து சிலைகள், ஓவியங்களை வடித்து மதத்திற்கான தடங்களை பதித்துள்ளனர். இங்கும் அப்படியே!
முதலாம் நூற்றாண்டில்தான் இந்த குகைகள், கோயிலாக மாற்றப்பட்டது. வலகம்பா என்பவர், தென்னிந்தியரால் அனுராதபுரத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு, 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனது தலைநகரை கைப்பற்றியதால், கடவுளுக்கு நன்றி செய்யும் விதமாக குகையை கோவிலாக்கினார். இது அனுராதாபுர காலம் கி.மு.1 ம் நூற்றாண்டிலிருந்து கி.பி.923 வரை ஆகும்.
1190ம் ஆண்டில் போலன்னறுவை சேர்ந்த நிஸ்ஸங்க மல்ல 70 புத்தர் சிலைகளையும் உருவாக்கி, குகைகளுக்கும் தங்க மெருகு கொடுத்தார். இது போலன்னறு காலம் (1073–1250).
18ம் நூற்றாண்டில் கண்டி ராஜ்யத்தால் பொற்குகைகோயில் மீட்டெடுப்பு செய்யப்பட்டது. ஓவியங்கள் உட்பட புதுப்பித்தல் பணிகளுடன் சுற்றுலாத்தல ரசனைக்கு ஒப்ப அப்போதே மாற்றப்பட்டது. இது கண்டி காலம்.
இலங்கை இப்படி பொற்காலம், போர்க்காலம் எல்லாம் கடந்து, இனியாவது இன சுமூக நற்காலத்துக்கு சென்றால் பல நாடுகளில் வாழும் சுற்றுலா பிரியர்களையும் அதிகம் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
-மரு.சரவணன்