இந்தப் படத்தின் வெற்றி விழாவில், அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களை வாழ்த்தினார்.

எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கடைசி சினிமா விழா இதுதான்.

சிவாஜியுடன் நடித்த “ஜல்லிக்கட்டு” அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“ஜல்லிக்கட்டு படத்தை நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். சித்ரா லட்சுமணன் தயாரித்தார்.

கதையைக் கேட்கும்போதே இது நன்றாக ஓடும் என்று தோன்றியது. சில கதைகளை கேட்டதுமே, அது வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியும். ஜல்லிக்கட்டு அப்படியொரு கதை.

அப்போதெல்லாம் நானும் மணிவண்ணனும் செட்டிலே ஒருவரை ஒருவர் `தலைவா!’ என்று கூப்பிட்டுக் கொள்வோம். இந்த `தலைவா’ பழக்கம் செட்டில் இருந்த மற்ற டெக்னீஷியன்களையும் தொற்றிக் கொண்டது.

இது எதில் போய் முடிந்தது தெரியுமா? செட்டில் சிவாஜி சாரிடம் போன டான்ஸ் மாஸ்டர் பாபு அவரிடம், “தலைவா! ஷாட் ரெடி” என்று சொல்லப்போக, பதிலுக்கு சிவாஜி சார் அவரை கேலி செய்யும் அளவுக்குப் போய்விட்டது.

“ஏண்டா! உங்க `தலைவா’ என் வரைக்கும் வந்தாச்சா?” என்று கேட்க, மாஸ்டர் அவசரமாய் `எஸ்கேப்’ ஆகியிருக்கிறார்.

நானும் பிரபுவும் `தலைவரே’ என்று அழைத்துக் கொள்வதும் சிவாஜிசாருக்கு தெரிந்திருக்கிறது. இப்போது அவரே செட்டில் “தலைவா” என்று அழைக்கப்பட்டு விட்டதால், அன்று படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனவர், பிரபு வரும் வரை காத்திருந்திருக்கிறார்.

பிரபு வீட்டுக்குப் போனதும் “வாங்க தலைவரே!” என்று அழைத்து அவரை வெலவெலக்க வைத்திருக்கிறார்.

மறுநாள் இதுபற்றி பிரபு என்னிடம் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு.

நேரத்துக்கு மதிப்பு கொடுப்பதில் சிவாஜி சாருக்கு நிகர் அவரேதான். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 7 மணிக்கு செட்டில் இருப்பேன். ஆனால் அதற்கு முன்பே சிவாஜி சார் செட்டில் இருப்பார்.

ஒருநாளாவது அவரை முந்திவிடவேண்டும் என்று இன்னும் சீக்கிரம் வரத்தொடங்கினேன். அப்போதும் சிவாஜி சார் எனக்கு முந்தி வந்திருந்தார்.

நடிப்பில் மட்டுமின்றி, `பங்ச்சுவாலிட்டி’யிலும் சிவாஜி சாருக்கு இணையாக யாருமில்லை என்பதை நானும் இந்த நாட்களில் கண்கூடாக உணர்ந்தேன்.

“ஜல்லிக்கட்டு” படப்பிடிப்புக்காக பெங்களூரில் இருந்து மங்களூருக்கு விமானத்தில் போனோம். நான், மணிவண்ணன், கேமராமேன் சபாபதி, சித்ரா லட்சுமணன் எல்லோரும் ஒரே ரூமில் தங்கினோம். சிவாஜி சார் பக்கத்து ரூமில் தங்கினார்.

படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். காலை 6 மணிக்கு விமானம் ஏறவேண்டும். சிவாஜி சார் அதிகாலை 4 மணிக்கு விழித்தவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார்.

நாங்கள் முந்தின நாள் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கியிருக்கிறோம். அதிகாலையில் எங்களை வந்து பார்த்தவர், நாங்கள் படுத்திருந்த இடத்துக்கு அருகில் சிக்கன் எலும்புகள் கிடந்ததை பார்த்திருக்கிறார்.

அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் போனவர், நாங்கள் புறப்பட்டு தயாராகி வந்தபோது பிடித்துக்கொண்டார்.

“ஏண்டா! காலையிலேயே எழுப்பலாம்னு வந்தால் செத்துப்போன கோழியோட ஒண்ணா படுத்திருக்கீங்களே” என்று கிண்டல் செய்தார். அந்த கிண்டலில் ஒரு தந்தைக்கே உரிய அக்கறை இருந்தது.

விமான நிலையத்துக்கு புறப்பட சிவாஜி சார் அவசரப்படுத்தின தால், ஆளாளுக்கு சீக்கிரமே கிளம்பி விட்டோம்.

கமலா அம்மாளும் சிவாஜி சாருடன் வந்திருந்தார்கள். “மாமா இப்படித்தான் அவசரப்படுத்துவாங்க. நாமபோறப்போ விமான நிலைய கேட்டை திறந்திருக்க மாட்டாங்க” என்றார்.

கமலா அம்மாள் சொன்னதுபோலவே ஆயிற்று. நாங்கள் போய்ச் சேர்ந்த பிறகுதான் விமான நிலைய பயணிகள் கேட்டையே திறந்தார்கள்!

அப்போது மங்களூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஒரு விமானம்தான். எனவே விமானத்தை தவறவிட்டால் தேவையில்லாமல் ஒருநாள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் சிவாஜி சாரின் `அவசரம்’ நியாயமானதுதான்.

பார்த்ததுமே “வாங்க கவுண்டரே!’‘ என்பார். படப்பிடிப்பின்போது கிடைக்கிற இடைவெளி நேரத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவார்.

எங்கள் சித்தப்பா அவரது நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பம் பற்றி ஆர்வமாய் விசாரிப்பார். என் சிறுவயதிலேயே விவசாய நிலங்கள் விற்கப்பட்டதை தெரிந்து கொண்டவர், “நீ சம்பாதிச்சு சொந்த ஊர்லயே நிறைய தென்னந்தோப்பு வாங்கணும்” என்று சொன்னார்.

அவர் சொன்னதுபோலவே பொள்ளாச்சி பகுதியில் வாழவாடி ஊரில் 95 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கியிருக்கிறேன்.

“ஜல்லிக்கட்டு” படம் எதிர்பார்த்த மாதிரியே நன்றாக ஓடி, வெற்றி பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகே பாரதிராஜாவுடன் “வேதம் புதிது” படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

தொடரும்…

பாலாஜி தயாரித்த காவல்: சிறிய வேடத்தில் விரும்பி நடித்தார், சத்யராஜ் (சினிமா தொடர் -9)

கதாநாயகனாக சத்யராஜ் நடித்த கடலோரக் கவிதைகள் மகத்தான வெற்றி (சினி தொடர்-8)

Share.
Leave A Reply