நாடளாவிய ரீதியில் ஸ்டிக்கர் மற்றும் ரீஷேர்ட் கலாசாரமொன்று அதிகரித்து வருகின்றது. “சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல்கள்” என்று பெருமை பேசும் வாசகங்களுடன் இந்த ஸ்டிக்கர் மற்றும் ரீஷேர் ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
“சிங்க லே” (சிங்கத்தின் இரத்தம்) என்பதே குறித்த ஸ்டிக்கரின் வாசகமாகும்.
சிங்கள இனப்பற்றுள்ள அனைவரும் தமது வாகனங்களில், வர்த்தக நிலையங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளின் பின்னணியில் சிங்கள பேரினவாத சக்திகள் முழுமூச்சாக இயங்கி வருவதோடு நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தி அதில் குளிர்காய எத்தனிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஏற்கனவே இல ங்கையின் தேசியக் கொடியில் சிறுபான்மையினரைக் குறிக்கும் பகுதியை நீ்க்கிய குறித்த இனவாதக் கும்பல், தற்போது அதிலும் சிங்கத்தின் உருவத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு இலட்சினை பொறித்து ஸ்டிக்கர் மற்றும் ரீஷேர்ட் மூலமாக இனவாதக்கருத்துக்களை வெளியிட்டும் வருகின்றனர்.
இந்த ஸ்டிக்கர்கள் கவரக்கூடிய வாசகங்களை வர்ணங்களை கொண்டு அச்சடித்து விற்பனை செய்தும் குறிப்பிட்ட சில பாதையோரங்களில் பலாத்காரமாக வாகனங்களில் ஒட்டப்பட்டும் வருகின்றன.
இந்த சிங்க லே என்ற இலட்சினையுடன் விற்பனை செய்யப்படும் ரீஷேர்ட்டுகள் 3,500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அறியமுடிகின்றது.
இவ்வாறான ஸ்டிக்கர்கள், ரீஷேர்ட்கள் கூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் குறித்த இனவாதக்குழு பெருந்தொகையில் வருமானம் ஈட்டி வருகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் இந்த பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. முகநூலில் குறித்த சிங்க லே பக்கத்தின் விருப்பு குறியீடுகள் தற்போது லட்சக்கணக்கில் விருப்புக்குறிகளைப் பெற்றமையும் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
அதுதவிர இந்த சிங்க இலட்சினைகளை உடலில் பச்சை குத்தியும் குறித்த இலட்சினை பொறித்த ரீஷேர்ட்டுகள் அணிந்து படம்பிடித்தும் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றும் கலாசாரமும் அதிகரித்து வருகின்றது.
இவ்வாறான பிரசாரங்கள் எதிர்காலங்களில் இனக்கலவரங்களை தூண்டுவதற்கான முன்ஆயத்தமாக இருக்கலாமென்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு எதிர்காலத்தில் இனக்கலவரமொன்றைத் தூண்டி பெரும் சேதங்களை ஏற்படுத்தவும் அதன் போது சிங்களவர்களின் சொத்துகளை குறித்த ஸ்டிக்கர் அடையாளத்தினூடாக பாதுகாக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளது.
மேலும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனக் கலவரமொன்றை ஒரே நேரத்தி்ல் கட்டவீழ்த்து விடுவதற்கான செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதற்கான முன்னோட்டமாக இந்த ஸ்டிக்கர் மற்றும் ரீஷேர்ட் விற்பனை தென்படுவதாக சிவில் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான செயற்பாடுகளை பார்க்கும் போது வேடிக்கையாகத்தான் தெரியும். எனினும் இவ்விடயம் தொடர்பில் உற்று நோக்கும் போது சிங்கள பௌத்த மக்களிடையே இனவாதக்கருத்துக்களை தூண்டி பேரினவாதத்திற்கு சார்பாக திரட்ட விதைக்கப்படும் உளவியல் ரீதியாக பிரசார உத்தியாகவே இது தெரிகிறது.
அரசுதரப்பு இப்பிரசாரத்திற்கு எதிர்ப்பினை வெளியிட்டு வந்தாலும் அவை போதுமானதாக இல்லை. கடந்த 23ஆம் திகதி அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இவ்வாறு பிரசாரங்களில் ஈடுபடுவோருக்கு எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை “சிங்க லே மாபியா” என்ற தலைப்பில் “ராவய” பத்திரிகையில் வெளியிடடுள்ள கட்டுரையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்களில் துரிதமாக பரவி வரும் “சிங்க லே” என்ற அமைப்பு யாரது தேவைக்காக எவரால் நடத்தப்படுகிறது என்பது தெரியவில்லை.
இருந்தும் இதைப் பார்க்கும் போது ஏதோவொரு அமைப்பு திட்டமிட்ட வகையில் இதை பரப்பி வருவதாக தெரியவருகிறது.
இதன் பின்னாள் யாரோ ஒரு முக்கியஸ்தகர் செயற்படுகின்றார் என்பது மட்டும் நிச்சயமாக தெரிகின்றது. இது ஒரு வேளை மஹிந்த வின் கருவிலிருந்து உருவாகியிருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
இற்றைய வரையில் இவர்களது பேஸ்புக் கணக்கு இனவாத கருத்துக்களை பரப்புவதாக மட்டுமின்றி வாகனங்களில் ஒட்டுவதற்கு இலவசமாக ஸ்டிகர்களை வழங்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.