ஆவடி: அம்பத்தூர், கள்ளிக்குப்பம், கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (48). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி வசந்தா.

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.இதேபோல் அம்பத்தூர், மேற்கு பாலாஜி நகர், ராஜகணபதி தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன். கட்டிட தொழிலாளி.

இவரது மனைவி விமலா (33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் திருவண்ணாமலை.

ஒரு பகுதியில் வசிப்பதால் மகேந்திரனுக்கும் விமலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இப்பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக உருமாறியது.

இதையடுத்து இருவரும் தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர்.இந்நிலையில், இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, தனியாக குடும்பம் நடத்த முடிவு செய்தனர்.

இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் 23-ம் தேதி மகேந்திரனும் விமலாவும் வீட்டைவிட்டு வெளியேறினர்.

பின்னர், இவர்கள் பொன்னேரி பகுதியில் வீடு எடுத்து தங்கினர். இவர்கள் காணாமல் போனதால், அவர்களது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

ஒரு மாதத்துக்கு மேலாகியும் இவர்களைப் பற்றி எவ்வித தகவலும் உறவினர்களுக்கு கிடைக்கவில்லை. இருவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் விமலாவின் செல்போனில் கஜேந்திரன் தொடர்பு கொண்டபோது, விமலா எடுத்து பேசினார். அப்போதுதான் இருவரும் பொன்ேனரியில் தங்கியிருப்பது கஜேந்திரனுக்கு தெரியவந்தது.

‘நம் குழந்தைகளின் நலனுக்காக, நான் பழசையெல்லாம் மறந்து உன்னை ஏற்றுக் கொள்கிறேன். வீட்டுக்கு வா’ என்று கஜேந்திரன் அழைத்தார்.

‘அம்பத்தூருக்கு வந்தால், அனைவரும் என்னை அசிங்கமாகப் பேசுவார்கள். நான் வரமாட்டேன்’ என்று விமலா கூறினார்.

‘அம்பத்தூரில் வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கே சென்றுவிடலாம்’ என்று கஜேந்திரன் கூறினார். அதற்கும் விமலா மறுப்பு தெரிவித்தார். ‘இனி உன் விருப்பம் போல் இரு’ என்று கஜேந்திரனும் செல்போனை துண்டித்தார்.

இந்நிலையில், விமலா நேற்றிரவு செல்போனில் கஜேந்திரனை தொடர்பு கொண்டார். ‘மகேந்திரனும் நானும் கள்ளிக்குப்பம் பகுதியில் முருகாம்பேடு 4-வது தெருவில் நின்று கொண்டிருக்கிறோம்.

எங்களுக்கு வாழ பிடிக்கவில்லை. நாங்கள் விஷம் குடித்து சாகப்போகிறோம்’ என்று விமலா கூறியபடி செல்போனை துண்டித்தார்.

இதையடுத்து கஜேந்திரன் தனது உறவினர்களுடன் அப்பகுதிக்கு விரைந்தார். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விமலாவை ஆட்டோவில் ஏற்றி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றார்.

அங்கு விமலாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டதாக தகவல் கூறினர்.

இதேபோல் மகேந்திரனின் உறவினர்களும் தகவல் அறிந்து, மகேந்திரனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவரும் வரும் வழியிலேயே இறந்தார்.இப்புகாரின் பேரில் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன், எஸ்ஐ முனியம்மா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply