தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியின் வெளிப்பாடே தமிழ் மக்கள் பேரவை உருவாகக் காரணம்.
தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகள் குறித்து அதன் ஏற்பாட்டாளர்களுடன் உத்தியோகப்பற்றற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அதில் இணைவதா? இல்லையா? என்பது குறித்து ஈ.பி.டி.பி. தீர்மானிக்குமென அதன் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அளித்த வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வி முழுமையாக கீழே தரப்படுகிறது.
கேள்வி: வடக்கில் புதிதாக உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பான ஈ.பி.டி.பி. யின் நிலைப்பாடு என்ன?
பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியின் காரணமாகவே இந்த தமிழ் மக்கள் பேரவை உருவாகியுள்ளது.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஜனநாயகம் இல்லை, அங்கு அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிகளுக்கு வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு ஒரு சிலர் மாத்திரமே தீர்மானம் எடுக்கிறார்கள், மக்களுடைய பிரச்சினைகளை இவர்கள் தீர்க்கும் வகையில் செயற்படுவது போல் தெரிவதில்லை.
இவ்வாறான காரணங்களால் ஏற்பட்ட அவநம்பிக்கையால் தான் தமிழ் மக்கள் பேரவை உருவாகியுள்ளது. ஆகவே இச்செயற்பாடும் கூட மோதகத்திற்குப்பதிலாக கொழுக்கட்டை போன்ற செயலாக இருந்துவிடக்கூடாது.
ஏனென்றால் வடிவத்தில் இரண்டும் வேறாயினும் உள்ளடக்கம் எல்லாம் ஒன்றுதான். அதேேபான்று இப்பிரச்சினையும் அமைந்துவிடக்கூடாது.
மாகாணசபை என்பது எமக்குக்கிடைத்த பொன்னான வாய்ப்புக்களில் ஒன்று. 1987 ஆம் ஆண்டிலேயே இப்பொன்னான வாய்ப்பு எமக்குக்கிடைத்தது. அதனை தமிழ் அரசியல் தலைமைகள் சரியாக பயன்படுத்தவில்லை.
அவ்வாய்ப்பு பலத்த அழிவுகளின் பின்னர் மீண்டும் கிடைத்துள்ளது. அதனைக்கூட அவர்கள் சரியானமுறையில் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.
ஆடத்தெரியாதவனுக்கு மேடை கோணல் போன்று சாக்கு போக்குகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆளுநர், பிரதம செயலாளர், ஆட்சி என்பவற்றின் மீதே குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
இவற்றில் மாற்றம் வந்த பின்னரும் கூட மாகாணசபை நிதியத்தில் 38 சதவீதம் தான் செலவழித்துள்ளார்கள். அவ்வாறான பிரச்சினைகளும் காணப்படுகிறது.
ஆகவே இதில் இணைந்து கொள்ளச்சொல்லி எங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அத்துடன் அழுத்தமும் இருக்கிறது.
அதைக்குறித்து நாம் ஆராயவேண்டும். அவர்கள் பல கட்சிகளின் கூட்டு என்ற படியால் அவர்களுக்கு கொள்கைகளும் இருக்கின்றன.
அது எவ்வாறான கொள்கை என்றும் அறியவேண்டியுள்ளது. அக்கொள்கை விக்னேஸ்வரனுடைய கொள்கையா? அல்லது வடிவேலுடைய கொள்கையா? பேரவையின் பொதுக்கொள்கை எவ்வாறானது என்றும் நாம் அறியவேண்டியுள்ளது.
அத்துடன் இவர்களின் நோக்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீதுள்ள அதிருப்தி, கசப்பு என்பவற்றால் உருவானதா என்பது குறித்தும் நாம் ஆராயவேண்டியுள்ளது.
அவற்றை பொறுத்திருந்துதான் நாம் அறிந்து கொள்ளவேண்டும். தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு கூட்டுமுயற்சிக்கு நாங்கள் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டோம்.
கேள்வி: தமிழ் மக்கள் பேரவை என்பது மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் கூட்டு என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றதே அது குறித்த உங்களது கருத்து யாது?
பதில்: அக்குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லாவிட்டாலும் நாம் ஆராயவேண்டிய அவசியமுண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைகள் மீது கொண்டுள்ள அவநம்பிக்கை அத்துடன் ஒரு இணக்க அரசியலுக்கூடாக பதவிகளைத்தான் பெற்றிருக்கிறார்களே தவிர பிரச்சினைகளுக்கான தீர்வைக்காண முன்வருவதில்லை.
எதிர்க்கட்சித்தலைவர் பதவி, குழுக்களின் பிரதித்தலைவர் போன்ற பதவிகளை பெற்றுள்ளார்களே தவிர பிரச்சினைகளை தீர்ப்பதாகத்தெரியவில்லை.
நான் அடிக்கடி கூறுகின்ற விடயம் என்னவென்றால் எந்தவொரு அரசாங்கமும் புதிதாக ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட காலத்திற்குள் முக்கிய பிரச்சினைகளை தீர்க்காவிடின் அவை ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்ற நிலைக்கு வந்துவிடும்.
இந்த நூறுநாள் வேலைத்திட்டத்திலேயே இந்தக்காணிப் பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம். அரசியல் கைதிகளை விடுவித்திருக்கலாம். மாகாண சபைக்குரிய அதிகாரங்களை கணிசமான அளவு பெற்றிருக்கலாம். ஆனால் எதையும் அவர்கள் செய்யவில்லை.
கேள்வி: இதுவரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசுடன் இணைந்து ஏறத்தாழ 2000 ஏக்கர் அளவில் காணியை சம்பூரிலும் ஏனைய இடங்களிலும் விடுவித்துள்ளார்கள் தானே ?
பதில்: இது அரசாங்கம் தனது கொள்கைகளிலும் வேலைத்திட்டங்களிலும் கூறியதை நிறைவேற்றியுள்ளதே இவற்றையெல்லாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சாதனைகளாக கருத முடியாது.
கேள்வி: தமிழ் மக்கள் பேரவை எதிர்காலத்தில் ஒரு அரசியல் அமைப்பாக மாறும் என நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: இவர்கள் இதை வெளிப்படையாக மறுத்தாலும் இவர்களின் நோக்கம், இலக்கு என்பவை இதுவாகத்தான் இருக்கும்.
இதனை வரலாற்றினூடாக நாங்கள் கண்டுள்ளோம். உதாரணமாக கம்பவாரிதியின் பாசறையில் இருந்துள்ள விக்னேஸ்வரன்தான் அரசியல் பிரமுகராக வெளிவந்துள்ளார்.
ஆகவே அவர் கம்பவாரிதியின் பாசறையில் இருந்து வராவிட்டால் அரசியலுக்குள் பிரவேசிக்க வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆகவே பொது அமைப்புக்களுக்கூடாக அரசியல் பிரவேசங்கள் இடம்பெற்றதும் உண்டு.
சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ். கஜேந்திரன், ரி.சித்தார்த்தன், தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் பேராசிரியர் சிற்றம்பலம், இவர்களெல்லோரும் அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்கள்.
அத்துடன் செல்வம் அடைக்கலநாதன் கூட அவ்வாறான ஒருவரே. ஏனென்றால் அவர் பேசியதை மறுதினமே மறுத்துவிட்டார்.
ஆகவே அவர்கூட இதில் சேர்வதற்கான வாய்ப்புண்டு. ஏனென்றால் கடந்த 30 ஆம் திகதி இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்திருக்கிறார்கள்.
அவர்கள் மூன்று பேரும் தமிழ்ரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆகவே இது தமிழரசுக்கட்சியின் சந்திப்பா அல்லது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சந்திப்பா என்றொரு கேள்வி எழுந்துள்ளது.
செல்வத்திற்கும் சித்தார்த்தனுக்கும் அழைப்பு விடுத்தும் அவர்கள் அதனை நிராகரித்து விட்டார்கள். ஆகவே இதனை அரசியலுக்கான ஒரு முயற்சியா அல்லது மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சியா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நேர்காணல் எஸ். கணேசன் படப்பிடிப்பு எம். எஸ். சலீம்