பாடசாலைகளைத் தேசிய மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை, 1930களிலிருந்தே பௌத்த அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு வந்த ஒரு கோரிக்கையாகும். சுதந்திரத்துக்குப் பின்பு இந்தக் கோரிக்கை வலுப்பெற ஆரம்பித்தது.

குறிப்பாக 1956இல் எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்க ‘தனிச் சிங்கள’ சட்டத்தை முன்னிறுத்தி தேர்தலில் வென்ற பின்பு, அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் ‘ஏமாற்றப்பட்ட பௌத்தம்’ என்ற தலைப்பில் நாட்டில் பௌத்தத்தின் நிலை பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டது.

பௌத்தத்துக்கு அதற்குரிய இடத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நிதியளிக்கும் அனைத்துப் பாடசாலைகளையும் தேசிய மயமாக்க வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்தது.

ஆனால், எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க இது சார்ந்து நடவடிக்கை எடுப்பதை இலாவகமாகத் தவிர்த்துக்கொண்டார். ஆனால், பௌத்த அமைப்புக்களின் அழுத்தம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

காலனித்துவ ஆட்சியில் மதம் பரப்பும் முக்கிய நிறுவனமாக இந்தப் பாடசாலைகள் இருந்ததாகவும், அந்நிலை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது எனவும், அன்று காலனித்துவ ஆட்சியில் காலனித்துவ அரசால் நிதியளிக்கப்பட்ட இந்தப் பாடசாலைகளுக்கு இன்றும் சுதந்திர இலங்கை நிதி அளித்துக் கொண்டிருக்கிறது எனவும் ஆனால், அங்கு பௌத்த மாணவர்களுக்கு பௌத்தம் கற்பிக்கப்படுவதில்லை.

ஆனால், பௌத்த மாணவர்களுக்கு கிறிஸ்தவம் கற்பிக்கப்படுகிறது எனவும் பௌத்த அமைப்புக்கள் குற்றஞ்சுமத்தின.

இடதுசாரி மற்றும் கம்யூ10னிஸ்ட் கட்சிகள், குறிப்பாக லங்கா சமசமாஜக் கட்சிக்கும் கத்தோலிக்க திருச்சபைக்குமான உறவு சுமுகமானதாக இருக்கவில்லை.

78PrimeMinisterBandaranaike

எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்க

‘மதம் என்பது வெகுஜனங்களுக்கான அபின்‘ எனச் சொன்ன கார்ள் மாக்ஸின் வழி பின்பற்றும் ‘தோழர்களுக்கும்’, தமது ‘மேயப்பனான’ கர்த்தரின் வழி பின்பற்றும் திருச்சபையினருக்கும் இடையில் உடன்பாடு ஏற்படாமை ஆச்சரியமான ஒன்றல்ல.

மேலும் கத்தோலிக்கத் திருச்சபையினர் சுதந்திரத்தின் பின் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தமையும், வெளிப்படையாகவே இடதுசாரிக், கம்யூ10னிஸ்ட் கட்சிகளை விமர்சித்தமையும் கத்தோலிக்க திருச்சபை மற்றும் இடதுசாரி, கம்யூ10னிஸ்ட் கட்சிகளிடையே முறுகல் நிலையை உருவாக்கியிருந்தது.

1952ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு தினத்துக்கு முன்பாக முதன்மை குரு வண. போர்டின் பின்வருமாறு கூறியிருந்தார்:

‘மனதிலே ஒரு துளியேனும் கிறிஸ்தவ நம்பிக்கையுள்ள எந்தக் கத்தோலிக்கனும் திருச்சபையினால் தடைசெய்யப்பட்ட அரசியல் பாசறையைச் சார்ந்த ஒரு வேட்பாளனுக்கு வாக்களிக்கமாட்டான்.

அது கம்யூ10னிஸமாக இருக்கலாம், அல்லது ஆண்டவருக்கும், திருச்சபைக்கும் எதிரானதொரு கருமத்தை ஆற்ற விளையும் எந்த அரசியல் கொள்கையாகவும் இருக்கலாம்’.

1956ஆம் ஆண்டு தேர்தலில் சிங்கள-கத்தோலிக்கர்கள், சிங்கள-கிறிஸ்தவர்களின் பெரும்பான்மை ஆதரவு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கு இருந்தது.

அவர்களும் தங்களைப் பெரும்பான்மைச் சிங்களவர்களாகவே கருதினர், ‘தனிச் சிங்கள’ சட்டம் என்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் முழக்கத்துக்கும் ஆதரவு தந்தனர். எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க கூட பிறப்பால் ஒரு கிறிஸ்தவரே.

ஆனால், இந்த நிலை 1960இல் மாறியது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியில் பாடசாலைகளை தேசியமயமாக்கும் கோரிக்கை வலுவடைந்தது.

அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் இதற்கான அழுத்தத்தை வழங்கின. இடதுசாரிக் கட்சிகளும் இதனை ஆதரித்தன. இடதுசாரி கம்யூனி

ஸக் கட்சிகளினுடைய ஆதரவுக்கு அவர்கள் அது தமது கொள்கை சார்ந்த நிலைப்பாடு என வியாக்கியானம் சொன்னாலும், கம்யூனிஸக் கட்சிகளுக்கு எதிரான திருச்சபையின் தொடர்ச்சியான நிலைப்பாடும் அதனால் எழுந்த முறுகல் நிலையும் ஒரு முக்கிய பங்குவகித்தது என்பதை மறுக்க முடியாது.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் 1960ஆம் ஆண்டின் 5ஆம் இலக்கச் சட்டம் மற்றும் 1961ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டம் என்பவற்றினூடாக அரச உதவிபெற்ற அனைத்துப் பாடசாலைகளையும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளையும் தேசியமயமாக்கியது.

இந்தத் தேசிய மயமாக்கலிலிருந்து 38 பிரபல்யமான கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலைகளுக்கு அவற்றுக்கு அரச நிதியுதவி வழங்கப்படாது மேலும் அவை கட்டணம் வசூலிக்கவும் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவற்றின் விருப்புக்கேற்ப தேசியமயமாக்கலிலிருந்து விலக்களிக்கப்பட்டது.

1960 காலப்பகுதியில், 1,170 கிறிஸ்தவப் பாடசாலைகளும், 1,121 பௌத்த பாடசாலைகளும், இந்து சபைக்கு (இந்து போர்ட்) சொந்தமாக 161 பாடசாலைகளும், ஆசிரியர் கலாசாலையும் மற்றும் வேறு 6,000 பாடசாலைகளும் இருந்தன.

தாம் தன்னிச்சையாக எந்தவிதக் கட்டணமும் வசூலிக்காது இயங்க தீர்மானித்த 38 மிஷனரிப் பாடசாலைகளைத் தவிர அனைத்து அரச உதவி பெறும் பாடசாலைகளும் தேசிய மயமாக்கப்பட்டன.

இதனால் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ பாடசாலைகளே பெருமளவு பாதிக்கப்பட்டாலும், இந்துப் பாடசாலைகளும் கணிசமானளவு பாதிக்கப்பட்டன.

இந்து போர்ட்டின் கீழ் இந்து மாணவர்கள் இந்துப் பாரம்பரிய சூழலில் தரமான கல்வி பெறத் தக்க வகையில் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தன.

சேர்.பொன் இராமநாதன், சேர். வைத்திலிங்கம் துரைசாமி, ‘இந்து போர்ட்’ இராஜரட்ணம் ஆகிய தலைவர்களால் தன்னலமற்ற தூரநோக்குச் சிந்தனையோடு ஸ்தாபிக்கப்பட்ட இந்து போர்ட், இந்து மக்களின் கல்விக்காக 161 பாடசாலைகளை உருவாக்கி நிர்வகித்து வந்தது.

அத்தனையும் 1960-1961இல் தேசிய மயமாக்கப்பட்டது. இந்தத் தேசிய மயமாக்கல் சிங்கள-பௌத்தர்களுக்கு சாதகமானதொன்றாக இருந்தது.

பாடத்திட்டங்கள் இனி இலகுவாக மாற்றியமைக்கலாம், அனைத்து பாடசாலைகளிலும் சிங்கள மொழிக் கற்பித்தலை கட்டாயமாக்கலாம், பௌத்த விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என்ற நிலை உருவானது. இந்தச் சூழல் சிறுபான்மையினங்களுக்கு சவாலானதொன்றாக இருந்தது.

கத்தோலிக்கர்களும், கிறிஸ்தவர்களும் இந்தத் தேசிய மயமாக்கத்தைக் கடுமையாக எதிர்த்தனர், கிறிஸ்தவப் பாடசாலைகளுக்குள் சென்று அவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

அரசாங்கம், பொலிஸாரை களத்திலிறக்கி போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க முனைந்தது. வத்திக்கான் உடனடியாக தலையிட்டு, தனது பிரதிநிதியாக பம்பாயிலிருந்து கர்தினால்

கிரேஷியஸை அனுப்பி, கத்தோலிக்கர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இந்தப் போராட்டம் தொடருமானால் அது கத்தோலிக்கர்களையே கடுமையாகப் பாதிக்கும், எதிர்காலத்தில், கத்தோலிக்கர்களின் நிலை மோசமாகும் என வத்திக்கான் நினைத்தது. இந்தச் சிக்கல் நிலை கத்தோலிக்க மற்றும் ஏனைய இன-மதங்களின் உயர் குழாமினரைப் பாதிக்கவில்லை.

அவர்கள் கல்விகற்ற, அவர்களது பிள்ளைகளை அனுப்பிய ‘பிரபல்ய’ மிஷனரிப் பாடசாலைகள் தேசிய மயமாக்கலிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தன.

மாணவர்களிடம் நேரடியாகக் கட்டணம் வசூலிக்காது அந்த ‘உயர் குழாமினரின்’ பாடசாலைகளை நிர்வகிப்பது அவ்வளவு கஷ்டமானதாக இருக்கவில்லை. இலங்கையின் முக்கிய தலைவர்களின் பிள்ளைகள் கூட அந்தப் பாடசாலைகளிலேயே கல்வி பயின்றனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியும் பாடசாலைகள் தேசியமயமாக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தது. தேசியமயமாக்கலின் பின் வடக்கு-கிழக்கில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு போதிய நிதியாதாரத்தை அரசு வழங்காமல் விட்டுவிடும் என அவர்கள் அஞ்சினர்.

மேலும் வடக்கு-கிழக்குக்கு அப்பால், தமிழர் சிறுபான்மையினராக உள்ள பிரதேசங்கிளிலிருக்கும் தமிழ்ப் பாடசாலைகள் கொஞ்சம் கொஞ்சமாக சிங்கள மயப்படுத்தப்படலாம், அதனால் அங்குள்ள தமிழ் மாணவர்கள் வேறு வழியின்றி சிங்கள மொழியிலேயே கல்வி பயில வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர்கள் அஞ்சினர். பாடசாலைகளின் தேசியமயமாக்கலை, சிங்கள மயமாக்கலாகவே தமிழரசுக் கட்சியினர் கண்டனர்.

பாடசாலைகளின் தேசியமயமாக்கல் இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுதே, ‘தனிச் சிங்கள’ சட்டத்தின் அமுலாக்கத்தை ஸ்ரீமாவோ அரசாங்கம் கொண்டுவந்தது.

இதனை எதிர்த்து ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழரசுக் கட்சி. தமிழ் மொழியின் பாவனை பற்றிய தமது குறைந்தபட்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தாம் அஹிம்சை வழியிலான நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவோம் என அறிவித்தது.

1961 பெப்பரவரி மாதத்தில் வடக்கு-கிழக்கு எங்கும் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டங்களையும், ஒத்துழையாமைப் போராட்டத்தையும் தமிழரசுக் கட்சி நடத்தியது.

அரசாங்கக் கச்சேரி உட்பட அரச அலுவலகங்கள் முன்பு தமிழரசுக் கட்சியினர் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் நடத்தினர்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு. திருக்கோணமலை, வவுனியா ஆகிய நகரங்களில் அரச அலுவலகங்கள் ஸ்தம்பித்தன. தொடர்ந்து இடம்பெற்ற சத்தியாக்கிரக போராட்டங்களால் அவை சுமுகமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்திடம் குறைந்தபட்சம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க நிறைவேற்றிய தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தையும் அமுல்படுத்துமாறு கோரப்பட்டபோது, ஸ்ரீமாவோவின் வலதுகரமாகவும், அன்றைய ஸ்ரீமாவோ அரசின் மூளையாகவும் இருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, ‘அது உருவாக்கப்பட்ட காலச்சூழல் வேறுபட்டது.

இன்று அதனை நடைமுறைப்படுத்தனால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள தீவிரவாதிகளுக்கு சாதகமானதாக அமையும்’ என 1961 பெப்ரவரியில் நடந்த அமைச்சரவைக் கூட்டமொன்றில் கூறியிருந்தார்.

சத்தியாக்கிரகம் வடக்கு-கிழக்கில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதனைக் கண்டு, கள நிலவரங்களை அறிந்து வர ‘இம்புல்கொட வீரயா’ எஸ்.டி.பண்டாரநாயக்கவும், அன்று நியமன நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமானும் விமானம் மூலம் யாழ்ப்பாணம் சென்றனர்.

விமானநிலையத்தில் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அஹிம்சை வழியில் நடந்த சத்தியாக்கிரக, ஒத்துழையாமைப் போராட்டங்களையும் கண்டனர்.

தமிழரசுக் கட்சியனரின் கோரிக்கையோடு கொழும்பு திரும்பியவர்கள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறியபோது, இதுபற்றி பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவிடம் பேசுமாறு ஸ்ரீமாவோ சொன்னதாகவும்,

பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவிடம் பேசிய போது அவர் ‘நாங்கள் விட்டுக்கொடுத்தால் சிங்கள மக்களின் எதிர்வினை எப்படியிருக்கும் என சிந்தியுங்கள்’ என அவர் கேட்டதாகவும், அதற்கு தொண்டமான் ‘ஆனால் நீங்கள் கடும் நிலைப்பாட்டை எடுக்கும் போது, தமிழ் மக்களின் எதிர்வினையைப் பற்றியும் சிந்தியுங்கள்’ எனச் சொன்னதாகவும்,

அதற்கு பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, ‘எங்களுக்கு தமிழ் மக்களின் எதிர்வினையைவிட சிங்கள மக்களின் எதிர்வினையே முக்கியமானது எனச் சொன்னதாகவும்’, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் அலட்சியமான பதில் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், அவர் ‘முதலில் கணவனும் (எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க), பிறகு மனைவியும் (ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க), இப்போது மருமகனும் (பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க) சிங்கத் தீவிரவாதிகளைப் பற்றியே யோசிக்கிறார்கள்.

தமிழர்கள், தமிழர்களின் உணர்வுகள் பற்றி இவர்களுக்கு அக்கறையில்லை. இதற்கெல்லாம் சிங்கள இனம் என்றாவது ஒருநாள் விலை கொடுக்க வேண்டி வரும்’ எனக் கூறியதாகவும் தனது கட்டுரையொன்றில் கே.ரீ.ராஜசிங்கம் குறிப்பிடுகிறார்.

உண்மையில் கணவனும், மனைவியும், மருமகனும் மட்டுமல்ல, மகளும் கூட இந்தப் பட்டியலில் எதிர்காலத்தில் சேர்ந்து கொண்டார் என்பது இந்த கறுப்பு வரலாற்றின் தொடர்ச்சி.

சிங்கள மக்களின் நலன், சிங்கள மக்களின் உணர்வு என குறுந்தேசிய அரசியலுக்குள் சிங்கள மக்களை இழுத்துச் சென்றது இந்த அரசியல் தலைமைகள்தான்.

நேர்மையான நல்ல அரசியல் தலைமை யாவரையும் ஒன்றிணைக்கும், உள்ளடக்கும் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பியிருக்கும், ஆனால் பதவிக்கான போட்டியில், மக்களுக்குள் புதைந்துகிடக்கும் குறுந்தேசியவாதத்தையும், பேரினவாதத்தையும் தட்டியெழுப்பி, அதற்கு தமது அரசியலால் உரமிட்டு வளர்த்து, இந்த நாட்டை இனவாதத்தின் விடுபடமுடியாத பிடிக்குள் சிக்கவைத்த கைங்கரியத்தை தொடர்ந்து வந்த எல்லா அரசியல் தலைமைகளும் செய்தன.

1961 பெப்ரவரியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற சத்தியாக்கிரக மற்றும் ஒத்துழையாமைப் போராட்டங்கள் கடும் நிலையை அடைந்திருந்தன.

(அடுத்தவாரம் தொடரும்…)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி- 11)

Share.
Leave A Reply