ஜோகனஸ்பர்க்:சூடான் நாட்டில் முன்னர் கொடூரமான உணவுப் பஞ்சம் நிலவிய வேளையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பத்திரிகை புகைப்படக் கலைஞரான கெவின் கார்ட்டர் என்பவர் ஒரு காட்சியை கண்டார்.

வெளிநாடுகளில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த ஒரு விமானத்தில் இருந்து உணவை வாங்க ஒரு பெண் ஓடினார்.

தனது ஓட்டத்துக்கு இடையூறாக இடுப்பில் இருந்த குழந்தையை கொளுத்தும் வெயிலில் ஒரு வெட்டவெளியில் இறக்கி விட்டுவிட்டு தலைதெறிக்க அந்தத் தாய் ஓடினாள்.

பட்டினியால் எலும்பும், தோலுமாக இருந்த பெண் குழந்தை பலகீனமாக தவழ்ந்தபடி முன்னேறி செல்வதையும், அந்த குழந்தை எப்போது சாகும்?

அது, எப்போது நமக்கு தீனியாக மாறும்? என அருகாமையில் அமர்ந்தபடி நோட்டமிட்டபடி அமர்ந்திருந்த கழுகையும் ஒருசேர கண்ட கெவின் கார்ட்டர், தனது கேமராவுக்கு மிகச்சிறந்த தீனி கிடைத்ததாக கருதினார்.

கழுகு பறந்தவிடக்கூடாதே என்ற தவிப்புடன் இவ்விரு காட்சிகளையும் ஒரே சட்டகத்தில் (பிரேம்) வருமாறு மிக நெருக்கமாக சென்று, சுமார் 10 மணி மீட்டர் இடைவெளியில் விதவிதமான கோணத்தில் தனது கேமராவுக்குள் சிறைப்படுத்தினார்.

அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் 26-3-1993 அன்று வெளியான அந்த புகைப்படம், உலகிலேயே மிகச்சிறந்த புகைப்படமாக போற்றப்பட்டு கெவின் கார்ட்டருக்கு அந்த ஆண்டுக்கான புலிட்சர் பரிசை பெற்று தந்தது.

பிணங்கொத்தி கழுகுக்கு ஒரு குழந்தை இரையாக இருந்ததை தடுத்து, அந்த கழுகை விரட்டியடிக்க முயலாமல் புகைப்படம் எடுத்து, விருதும், பாராட்டுகளையும் வாரிகுவித்து கொண்ட கெவின் கார்ட்டருக்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனக் குரல்களும், சாபங்களும் பரிசாக கிடைத்தன.

இதனால், கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகிய கெவின் கார்ட்டர், 27-7-1994 அன்று கொடூரமான தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.

தனது வாகனத்தின் புகைப்போக்கியில் ஒரு பைப்பை சொருகி, அதன் மறுமுனையை டிரைவர் இருக்கையின் பக்கம் வைத்து, ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் மூடிவிட்டு, என்ஜினை அதிவேகமாக இயங்க வைத்து, அதன்மூலம் எழுந்த மோனாக்ஸைட் புகையால் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக பின்னர் தெரியவந்தது.

Share.
Leave A Reply