70 வயதான தனது தகப்பனார் தற்போதும் மிகவும் பலமாக உள்ளார் என்பதை காண்பிப்பதற்காகவே மகிந்த தலைகீழாக நிற்கும் இந்த ஒளிப்படத்தை நாமல் ராஜபக்ச, தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியிருந்தார்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப்  மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

மகிந்த தலைகீழாக நிற்கும் ஒளிப்படம் ஒன்றை இவரது மகனான நாமல் அண்மையில் தனது முகப்பத்தகத்தில் வெளியிட்டிருந்தார். இது தொடர்பாகவே இப்பத்தியில் ஆராயப்படுகிறது.

70 வயதான தனது தகப்பனார் தற்போதும் மிகவும் பலமாக உள்ளார் என்பதை காண்பிப்பதற்காகவே நாமல் இந்த ஒளிப்படத்தை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியிருந்தார்.

இதற்கு மாறாக, சமூகத்தில் வாழும் சாதாரண மனிதர்களால் மகிந்தவின் இந்த ஒளிப்படமானது சமூக மற்றும் அரசியல் கண்ணோட்டத்தில் உற்றுநோக்கப்பட்டுள்ளது.

IMG_2586-719x480

ஏனெனில் இந்த ஒளிப்படம் வெளியிடப்பட்ட காலப்பகுதியே இதற்குக் காரணமாகும். இவ் ஒளிப்படமானது சமூக மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியிடப்படுவதற்கு ஒரு சில நாட்களின் பின்னரே பிரகீத் எக்னலிகொட கொலை செய்யப்பட்டமை அல்லது காணாமற் போன சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களைப் பார்வையிடுவதற்காக மகிந்த ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.

‘சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு ஆபத்தில் உள்ள அதேவேளையில் இராணுவ அதிகாரிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது’ என வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து வெளியேறிய போது மகிந்த ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு சூழலில், மகிந்த தலைகீழாக நிற்கும் ஒளிப்படம் கூறும் உண்மையான கதை என்ன என இங்கு ஆராயப்படுகிறது.

‘மகிந்த வழமைபோல் தனது காலில் நின்றிருந்தால் சிறைச்சாலையின் நுழைவாயிலில் வைத்து ஊடகங்களிடம் இராணுவ அதிகாரிகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாகக் கூறியிருப்பாரா?’ என்பது இங்கு முதலாவதாக முன்வைக்கப்படும் வினாவாகும்.

முச்சக்கரவண்டியின் சாரதியும் புரட்சிகளை விரும்பாத சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே இத்தகைய வினாவை வினவியுள்ளார். எனினும், மகிந்த தலைகீழாக நின்றதுடன் தொடர்புபட்ட முச்சக்கர வண்டிச் சாரதியின் கேள்வியானது சரியானதே.

மகிந்த அதிபராக இருந்த காலப்பகுதியில் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புபட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் பெப்ரவரி 02, 2010 அன்று பிரிகேடியர் ஹெப்பெற்றிவலன மற்றும் 17 உயர் நிலை இராணுவ அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் தமது உயிரைப் பணயம் வைத்து பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் பங்கு கொண்ட யுத்த கதாநாயகர்கள் ஆவர்.

இதற்கு முன்னர், 2010ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் மகிந்தவை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கியவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 14 மூத்த இராணுவ அதிகாரிகள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டனர். இந்தச் சம்பவமும் மகிந்தவின் ஆட்சிக்காலத்திலேயே இடம்பெற்றது.

இதுகூட இராணுவத்தின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவித்த சம்பவமாகவே நோக்கப்பட்டது. இதுவே சிறிலங்கா இராணுவ வரலாற்றில் பெரும் எண்ணிக்கையிலான உயர்நிலை இராணுவ அதிகாரிகள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட முதலாவது சம்பவமாகும்.

’14 இராணுவ அதிகாரிகள் தேசத் துரோக குற்றம் சுமத்தப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்’ என்ற தலைப்பில் 02.02.2010 அன்று சிங்கள தினசரிப் பத்திரிகையான ‘திவயின’ வில் கீர்த்தி வர்ணகுலசூரியவால் செய்தி வெளியிடப்பட்டது.

’14 மூத்த இராணுவ அதிகாரிகள் நேற்றைய தினம் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் நாயகம் லக்ஸ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.

இந்த அதிகாரிகள் தேசத்திற்கு எதிரான சதித்திட்டம் ஒன்றுக்கு உதவியுள்ளமையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அதிகாரிகளில் ஐந்து மேஜர் ஜெனரல்களும், ஐந்து பிரிகேடியர்களும், ஒரு கேணல், ஒரு லெப்.கேணல் மற்றும் இரண்டு கப்டன் தர அதிகாரிகளும் உள்ளடங்குவர்.

இந்த இராணுவ அதிகாரிகளின் சதித்திட்டம் தொடர்பாக கடந்த வாரம் புலனாய்வு அதிகாரிகளால் உயர் அரசாங்க அதிகாரிகளிடம் தகவல் வழங்கப்பட்டதாகவும் ஹுலுகல்ல மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்’ என திவயின நாளேடு தனது செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது.

1962ல் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பின் போது, சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் சிலர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டனர். இந்த ஆட்சிக்கவிழ்ப்பானது பின்னர் ‘அரசி மற்றும் லியனகே’ ஆட்சிக் கவிழ்ப்பு என சிறிலங்காவின் நீதி வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டது.

மகிந்த அரசாங்கத்தால் 14 இராணுவ அதிகாரிகள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதால், இவர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அதிபர் செயலர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருக்கு எதிராகச் செயற்பட்டதாக இந்த இராணுவ அதிகாரிகள் மீது பழிசுமத்தப்பட்டது.

மேஜர் ஜெனரல்களான டி.லியனகே, ராஜித சில்வா, ஜயநாத்பெரேரா, மகேஸ் சேனநாயக்க, சமந்த சூரியபண்டார மற்றும் பிரிகேடியர்களான டி.டி.டயஸ், கெப்பெற்றிவெலன, மொகோற்றி, ஹன்னடிகே, குமாரப்பெரும மற்றும் கேணல் திலக் உபயவர்த்தன, லெப்.கேணல் ஜெயசூரிய, கப்டன்களான ரணவீர மற்றும் கிரிசாந்த ஆகியோரே மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் கட்டாய விடுமுறைக் கடிதங்கள் வழங்கப்பட்டு உடனடி அமுலுக்கு வரும் வரையில் பதவி நீக்கப்பட்ட 14 இராணுவ அதிகாரிகளாவர்.

சிறிலங்கா அரசிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஒட்டு மொத்தமாக 37 இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டனர்.

ஆகவே மகிந்தவால் தனது ஆட்சிக்காலத்தில் இராணுவத்தினருக்கு எதிராக நடந்த கைங்காரியங்களை மறந்துவிட முடியுமா?

அவ்வாறாயின், மகிந்தவால் இராணுவத்தினருக்கு எதிராக இழைக்கப்பட்ட கடந்த காலத்தை மறக்கடிப்பதற்காகவா மகிந்தவின் யோகாசனப் பயிற்றுவிப்பாளார் இவரைத் தலைகீழா நிற்கவைத்தார்?

தன்னால் இழைக்கப்பட்ட கடந்த காலத் தவறுகளை மகிந்தவால் நினைத்துப் பார்க்க முடியுமாயின் வெலிக்கடைச் சிறைச்சாலையின் நுழைவாயிலருகே நின்றவாறு ஊடகவியலாளர்கள் முன்னிலையில இவ்வாறான கீழ்த்தரமான கருத்துக்களை வெளியிட்டிருக்கமாட்டார்.

lasantha-720x480பிரகீத் மற்றும் லசந்த

லசந்த கொலை வழக்குத் தொடர்பில் மகிந்தவால் இராணுவ அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டதானது நாட்டுப்பற்றுள்ள ஒரு செயலா? அவ்வாறாயின் பிரகீத் எக்னலிகொட மற்றும் லசந்த மீதான கொலைச் சம்பவங்கள் தொடர்பில் ரணில்-மைத்திரி அரசாங்கங்களால் இராணுவ அதிகாரிகள் கைதுசெய்யப்படுவதானது எவ்வாறு தேசத்துரோகச் செயல் என மகிந்தவால் நியாயப்படுத்த முடியும்?

தமது கால்களை நிலத்தில் ஊன்றியவாறு நிற்கும் மக்கள் இந்த உண்மையைப் புரிந்துகொள்வார்கள். இது தொடர்பான நடைமுறைகளையும் இவர்கள் விளங்கிக்கொள்வார்கள்.

ஆனால் அதேவேளையில் தலைகீழாக நிற்கும் எவராலும் இது தொடர்பான உண்மைத் தன்மையை ஒருபோதும் விளங்கிக் கொள்ள முடியாது.

பிரகீத் மற்றும் லசந்த மீதான கொலை வழக்குகள் தொடர்பில் கைதுகள் இடம்பெறும் போது அதற்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் மகிந்தவின் ஆதரவாளர்கள் உண்மையில் பிரகீத் மற்றும் லசந்த மீதுள்ள பற்றுப் பாசத்தால் இதனைப் புரியவில்லை.

மாறாக மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் புதைக்கப்பட்ட மேலும் பல புதைகுழிகள் தோண்டப்பட்டுவிடுமோ என்கின்ற அச்சமே இதற்குக் காரணமாகும்.

– உபுல் ஜோசப் பெர்னான்டோ

Share.
Leave A Reply