பெண் நிருபரை மது அருந்த அழைத்த விவகாரம் தொடர்பில் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் மன்னிப்பு கோரியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்-பாஸ் இருபது-20 போட்டியில், மெல்போர்ன் அணிக்காக விளையாடி வருகிறார் மேற்கு இந்திய தீவுகளின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெயில். டொஸ்மேனியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 15 பந்துகளில் 41 ஓட்டங்களை விளாசினார் கெயில்.
கெயில் ஆட்டமிழந்த பின்னர் தொலைகாட்சி ஒன்றின் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளரான மெல் மெக்லாலின் அவரிடம் பேட்டி எடுத்தார்.
இதன்போது, உன் கண்களை பார்பதற்காகவே இந்த பேட்டியில் கலந்து கொண்டேன் என அந்த வர்ணனையாளரிடம் வழிந்தார் கெயில். மேலும், நாங்கள் இப்போட்டியில் எப்படியும் வென்று விடுவோம். அதற்கு பிறகு நாம் சேர்ந்து மது அருந்தலாம் . வெட்க பட வேண்டாம்” என்றார்.
பேட்டியை எடுத்த அந்த பெண் கெயிலின் இந்த வர்ணனையால் தர்மசங்கடமானார். எனினும், சமாளித்துக் கொண்டு, தான் வெட்கப்படவில்லை என்றார்.
விளையாட்டு முடிந்ததும் மெக்லாலினிடம் கெய்ல் மன்னிப்பு கோரினார். தான் எந்த தீய எண்ணத்துடனும் அதனை கூறவில்லை என கூறினார்.
கெயிலின் இச்செயலுக்கு தொலைகாட்சி நிர்வாகம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஹெண்ட்ரூ பிளிண்டொப் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களிலும் பலர் கெயிலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உங்களிடம் நான் நேர்மையாக உள்ளேன். நான் உண்மையில் ஒரு எளிமையான கருத்தாகத்தான் கருதினேன். இது ஒரு எளிய நகைச்சுவைதான்.
இதில் அவமானகரமான பொருள் எதுவும் இல்லை அல்லது குற்றம் இல்லை. இது அவருக்கு வருத்ததை ஏற்படுத்தி இருந்தால் இதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என விமான நிலையத்தில் வைத்து கெய்ல் தெரிவித்து உள்ளார்.
பொதுவாக கெய்ல் இதுபோன்று நகைச்சுவையாக பேசுவது இயல்பு. இதுபோன்று கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் தொடரின்போது பெண் நிருபர் ஒருவர், கெயிலின் ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் அடுத்த போட்டியில் வீரர்களின் ஆட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கெய்ல், நல்லது, நான் இதுவரை உங்களைத் தொட்டதில்லை. ஆகவே, எப்படி இருக்கும் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை என்று கேளியாக கூறி சர்ச்சையில் சிக்கி கொண்டமை குறிப்பிடத்தக்கது.