ஹட்டன் டிக்கோயா தோட்டத்திலிருந்து சவூதி நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்று நாடு திரும்பிய பெண் இதுவரை தனது வீட்டிற்கு வரவில்லை என பெண்ணின் மாமனாரான ஆறுமுகம் பச்சைமுத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
2013ம் ஆண்டு ஹட்டன் டிக்கோயா தோட்டத்திலிருந்து லெட்சுமனன் சிவகாமி (வயது 29) என்ற பெண் மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவிற்கு இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் தொழிலுக்கு சென்றுள்ளார்.
இவ்வாறு சென்ற இப்பெண் கடந்த 2015.10.08ம் திகதி தனது ஒப்பந்த காலம் முடிவுற்ற பின் நாடு திரும்பியுள்ளார்.
ஆனால் இதுவரை நாடு திரும்பிய பெண் வீடு வந்து சேரவில்லை என தனது மாமனாரால் முறைபாடு செய்யப்பட்டது.
இரண்டு பிள்ளைகளின் தாயான சிவகாமியின் கணவர் சுதாகர் (வயது 36) மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் 14 மற்றும் 5 வயதில் ஆண் பிள்ளைகள் இருவர் தனது தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றனர்.
மருமகள் 2013ம் ஆண்டு வெளிநாட்டுக்கு சென்றபின் 10 மாதங்கள் கடந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மாத்திரமே எமக்கு கிடைக்கப்பெற்றது.
இத்தொகையினை கொண்டு பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை மற்றும் குடும்ப செலவு போன்றவற்றை மேற்கொண்டு வந்ததாகவும் மேலதிக குடும்ப செலவுக்காக வயது போன நாங்கள் நகரத்திற்கு சென்று கூலி வேலை செய்து வருமானத்தை பெற்று வந்ததாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் மாமனார் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தும் கடந்த பத்தாம் மாதம் நாடு திரும்பிய எனது மருமகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ஆகையால் இவர் தொடர்பான விடயங்கள் அறிந்தவர்கள் பொலிஸாருக்கு தெரிவிக்கும் படி தன் மருமகளுக்காக மாமனார் கேட்டுள்ளார்.