எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக இருந்தபோது, அவரை சத்யராஜ் சந்தித்தார். அப்போது, “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடியுங்கள்” என்று எம்.ஜி.ஆர். அழைப்பு விடுத்தார்.
சினிமாவில் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்த சத்யராஜுக்கு, கொஞ்சநாள் குடும்பத்துடன் ஓய்வெடுக்கலாமே என்று தோன்றியது.
அவரது சகோதரிகளில் ஒருவரான ரூபா, தனது கணவர் சேனாதிபதியுடன் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் இருந்தார். இதனால், ஒரு மாதம் நடிப்புக்கு `லீவு’ கொடுத்துவிட்டு, குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு பறந்தார், சத்யராஜ்.
இந்த அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் சத்யராஜ் மிகவும் நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு வந்தது.
அந்த அனுபவம் பற்றி, சத்யராஜ் கூறியதாவது:-
“தங்கை வீட்டுக்கு அமெரிக்காவுக்கு போக முடிவு செய்து புறப்பட்ட நாளில் என் நண்பர் டைரக்டர் மணிவண்ணன், “தினத்தந்தி”யில் என்னை வாழ்த்தி முழுப்பக்க விளம்பரம் கொடுத்துவிட்டார்.
இது, என் மீதான அவரது அதிகபட்ச அன்பு என்றாலும், இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. “என் நண்பன் சத்யராஜின் அமெரிக்கப் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்ற அந்த ஒருபக்க வாழ்த்துதான் எனக்கும், எம்.ஜி.ஆர். சாருக்குமான நட்புக்கான அடித்தளம் அமைக்கப்போகிறது என்பது, அப்போது எனக்குத் தெரியாது.
அப்போதுநாங்கள் சென்னை வாலஸ் கார்டனில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தோம்.
ஒரு மாதம் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் கதவைத் திறந்ததுமே கண்ணில் பட்டது ஒரு தந்தி. பிரித்த மாத்திரத்தில் அது என் அமெரிக்க பயணத்தை வாழ்த்தி அனுப்பப்பட்ட தந்தி என்பதும், அதை எனக்கு அனுப்பியது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். என்பதும் தெரிந்தது!
அதிர்ந்து போனேன். தந்தி வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. நாங்கள் அமெரிக்காவுக்கு புறப்பட்டுப் போன கொஞ்ச நேரத்தில், அந்த தந்தி எங்கள் வீட்டுக்குள் போடப்பட்டிருக்கிறது.
ஒரு மாதம் கழித்து அப்படியொரு தந்தி வந்திருப்பது தெரிந்ததும் மகிழ்ச்சியையும் தாண்டி அதிர்ச்சியே எனக்குள் ஏற்பட்டது.
பின்னே! என்னை வாழ்த்தி தந்தி அனுப்பியிருப்பது மதிப்பிற்குரிய முதல்வர். ஒரு மாதம் வரை அதற்கு பதில் நன்றிகூட சொல்லாமல் இருததால், தவறாக நினைத்துக் கொள்ளமாட்டாரா?
உடனே அவரை சந்தித்து, வாழ்த்துக்கு நன்றி சொல்வதுதான் பண்பாடு. ஆனால் அவர் அழைப்பில்லாமல் எப்படிப் போவது? அப்படிப் போனாலும் அவரை சந்தித்துப் பேசமுடியுமா?
இப்படியான குழப்பம் என்னை ஆட்கொண்டபோது, டைரக்டர் பாரதிராஜாவிடம் யோசனை கேட்டேன். அவரோ, “யாரிடமும் முன்கூட்டியே அனுமதி பெறத் தேவையில்லை.
நேராக தோட்டம் (எம்.ஜி.ஆரின் ராமாவரம் இருப்பிடம்) போங்க! போய், வாழ்த்துக்கு நன்றி சொல்லிட்டு வந்துடுங்க” என்றார்.
அவர் சொன்னது நல்ல யோசனையாகப்பட்டது. மறுநாளே மனைவியுடன் தோட்டத்துக்கு கிளம்பினேன். காலை 8 மணிக்கு தோட்டத்தை நெருங்கும்போது இன்னொரு சந்தேகம். `ஒருவேளை கேட்டில் நிற்கும் காவலாளி தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விட்டால்?’
நான் சராசரி மனிதன் என்றால் பரவாயில்லை. என்னோடு அந்த விஷயம் முடிந்து விடும். நான் இப்போது நடிகன். பார்க்கிற எல்லோருக்குமே என்னைத் தெரியும். ஒருவேளை அப்படி திருப்பி அனுப்பிவிட்டால், “எம்.ஜி.ஆரை பார்க்கப்போன நடிகர் சத்யராஜ் திருப்பி அனுப்பப்பட்டார்” என்றல்லவா செய்தி வரும்!
ஆனால் அப்படியெல்லாம் எந்தத் தடையும் இருக்கவில்லை. கேட்டில் என் வருகைக்கு வரவேற்புதான் இருந்தது. அங்கிருந்தவர்கள் எங்களை வரவேற்பு அறைக்கு அழைத்துப்போய் உட்கார வைத்தார்கள்.
தோட்டத்தில் நிறைய குழந்தைகளை எம்.ஜி.ஆர். படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தைகள் என்னைப் பார்த்ததும் உற்சாகமாய் ஓடிவந்து `ஆட்டோகிராப்’ வாங்கினார்கள்.
கொஞ்ச நேரத்தில் நாங்கள் வந்திருந்த தகவல் எம்.ஜி.ஆர். சாருக்கு சொல்லப்பட்டு, எங்களை இன்னொரு வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது அங்கிருந்த ஒருவர் எங்களை நெருங்கி வந்து, “என்ன சாப்பிடறீங்க?” என்று கேட்டார்.”
நான், “வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு வந்து விட்டோம் என்றேன். “இந்த இடத்துக்கு வந்து அப்படியெல்லாம் சொல்லக்கூடாது” என்றார், அவர்.
எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு போகிறவர்களுக்கு முதலில் வயிறார சாப்பாடு. அதன்பிறகுதான் அவருடன் சந்திப்பு என்பதாக நானும் ஏற்கனவே அறிந்திருந்தேன். என்றாலும் காலை டிபன் முடித்துவிட்டுப் போனபிறகு, உடனே மறுபடி டிபன் சாப்பிட முடியுமா? எனவே `டீ` கொடுங்க போதும்” என்றேன்.
`டீ’ வந்த கொஞ்ச நேரத்தில் ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். சார் நாங்கள் இருந்த அறைக்கே வந்துவிட்டார். இருவருக்கும் கையோடு கொண்டு போயிருந்த மாலைகளை அணிவித்து ஆசி பெற்றுக்கொண்டோம்.
எங்களைப் பார்த்ததுமே எம்.ஜி.ஆர். சார் கேட்ட முதல் கேள்வி, “ஏன் குழந்தைகளை அழைத்து வரவில்லை?” என்பதுதான்! நான் விழிக்க, என் மனைவியை பார்த்த எம்.ஜி.ஆர், “உங்க வீட்டுக்காரருக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்காது. நீங்கதாம்மா குழந்தைகளையும் அழைச்சிட்டு வந்திருக்கணும்” என்றார்.
குழந்தைகளையும் நேசிக்கும் அவர் அன்பு புரிந்தது. பேச வார்த்தை வராமல் நின்றோம். அவரே, “அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா குழந்தைகளையும் அழைச்சிட்டு வரணும். சரியா?” என்று எங்கள் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அடுத்து அவர் கேட்ட கேள்வி இன்னும் பாசப்பிணைப்பானது.
“ஏன் இத்தனை நாளா வரலை?” என்பதே அவர் கேள்வி.
“அண்ணே! எப்படி திடீர்னு வர்றது? ஒருவேளை நான் வந்து கேட்டைத்தாண்டி உள்ளே விடமாட்டேன்னுட்டாங்கன்னா தமிழ்நாடு முழுக்க தெரிஞ்சிடுமே” என்றேன்.
நான் இப்படிச் சொன்னதை எம்.ஜி.ஆர். சார் ரொம்பவே ரசித்தார். என் தோளில் தட்டி சிரித்தார். பிறகு அவரே, “அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்க” என்றார்.
பிறகு என் குடும்பம் பற்றியெல்லாம் ஆர்வமாக விசாரித்தார். வாஷிங்டனில் இருக்கும் தமிழர்கள் எனக்கு கொடுத்த சிறப்பான வரவேற்பு பற்றி அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.
“தொடர்ந்து படப்பிடிப்பு படப்பிடிப்புன்னு இருந்ததுக்கு ஒரு மாத ஓய்வு பயனுள்ளதாக இருந்திருக்குமே” என்றார், ஜானகி அம்மாள்.
உடனே எம்.ஜி.ஆர், “எங்கே ஓய்வெடுக்கிறது! அமெரிக்காவிலும் தமிழ்ச்சங்கம் வரவேற்பு அது இதுன்னு போய் வந்ததுல ஓய்வு எப்படி எடுக்க முடியும்?” என்று என் சார்பில் ஜானகி அம்மாளுக்கு பதில் கூறினார்.
தொடர்ந்து என் படங்களையெல்லாம் பார்த்ததாகவும், சிறப்பாக நடிக்கிறேன் என்றும் சொன்னபோது சந்தோஷத்தில் இறக்கையில்லாமல் பறந்தேன்.
திடீரென்று, “சத்யராஜ்! நீங்க எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படத்தில் நடிக்கிறீங்களா?” என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.
“நீங்க இப்படி கேட்டிருக்க கூடாதுண்ணே! உத்தரவே போட்டிருக்கணும். அப்படி உங்க எம்.ஜி.ஆர். பிக்சர்சில் நடிக்கிற வாய்ப்பு அமைந்தால் அது என் பாக்கியம்” என்றேன்.
இப்போது ஜானகி அம்மாள், “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மூலமா நாலைந்து படம் எடுத்திருக்கிறோம்” என்றார்கள்.
நான் உடனே, “3 படம்தான் எடுத்திருக்கீங்க. 1958-ல் “நாடோடி மன்னன்”, 1969-ல் “அடிமைப்பெண்”, 1973-ல் “உலகம் சுற்றும் வாலிபன்” என 3 படம்தான் எடுத்திருக்கீங்க” என்றேன்.
நான் இப்படி புள்ளி விவரங்களுடன் சொன்னது எம்.ஜி.ஆர் சாரை ஆச்சரியப்படுத்தி விட்டது. “சரி! எங்க கம்பெனிக்கு எப்ப நடிக்கிறே?” என்று கேட்டார்.
“நாளையில் இருந்தே ஷூட்டிங் வைத்தாலும் நான் ரெடி” என்றேன்.
உடனே எம்.ஜி.ஆர். சார் என் வார்த்தையை பிடித்துக்கொண்டார். “அப்ப, இப்போது உன்னை வெச்சு படம் எடுக்கிறவங்க கதி? அவங்க படத்தை முடிச்சிட்டு அப்புறமா நடி” என்றார்.
தயாரிப்பாளர்களை `முதலாளி ஸ்தானத்தில்’ வைத்து மரியாதை செய்யும் அவரது வார்த்தைகளில் தயாரிப்பாளர்கள் மீது எத்தனை கரிசனம் என்று எண்ணி வியந்தேன்.
“கண்டிப்பாக நடிக்கிறேன். ஆனால் நீங்களே டைரக்ட் பண்ணணும்” என்றேன்.
பதிலுக்கு அவர், “எனக்கும் விருப்பம்தான். ஆனால் `சி.எம்’ ஆயிட்டேனே!” என்றார். பிறகு அவரே, “படத்துக்கு நல்ல டைரக்டராக போட்டு விடுவோம். நான் எடிட்டிங் சமயத்தில் வந்து விடுகிறேன்” என்றார். சினிமாவை அப்போதும் அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது.
விடைபெறும் நேரம் வந்தபோது கன்னத்தில் முத்தமிட்டு என்னை வாழ்த்தினார். அடுத்த தடவை குழந்தைகளோடுதான் வரணும் என்று அன்புக் கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்.
வீட்டுக்கு வந்த பிறகும் கூட எனக்கு எம்.ஜி.ஆர். சாரின் அந்த அன்பே கண்ணுக்குள் நின்றது. என் மனைவி என்னிடம், எம்.ஜி.ஆர். சார் கொடுத்த முத்தத்தை நினைவுபடுத்தி, “10 நாள் நீங்கள் உடம்புக்கு மட்டும்தான் குளிப்பீங்க. முத்தம் கிடைச்ச சந்தோஷத்துல முகம் கழுவப் போறதில்லை” என்று கிண்டல் செய்தார்.”
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
தொடரும்…