தனது ‘60 ‘ வயது பிறந்த நாளை, பாகிஸ்தான் நாட்டின் கிளிப்டன் நகரில் முக்கியமான உறவுகளுடன் முடித்த தாவூத், அடுத்த இரண்டே நாட்களில் தனக்கு நெருக்கமான ‘ஐந்து’ நண்பர்களுடன் மெக்காவிற்கு சென்றான்.
அங்கு பிரார்த்தனையை முடித்த கையோடு சோட்டா ஷகீலை அழைத்து, மீடியாக்களிடம் பேச வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘தாவூத் ஓய்வு பெற்று விட்டான். இனி முன்பை போல ‘டி’ கம்பெனி ஆதிக்கம் செலுத்த முடியாது. அதன் கிளைகள் மெல்ல மெல்ல முறிய ஆரம்பித்து இன்னும் கொஞ்ச நாட்களில் ‘டி’ கம்பெனியின் வேர்கள் அழுகிப்போய் அதன் பிரம்மாண்டத்தை இழந்து வீழ்ந்து விடும்’ என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இந்த செய்திகள் வந்த அடுத்த நாளே, இதனை தாவூத்தின் கவனத்திற்கு அனீஸ் கொண்டு சென்றதால் உடனடியாக ஷகீலை அழைத்த தாவூத், மீடியாக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேட்டி கொடுக்க சொல்லி இருக்கிறான்.
சோட்டா ஷகீல் அந்த பேட்டியில், “மீடியாக்களில் சொல்வது போல எங்கள் பிசினஸ் படுக்கவில்லை. முன்பை விட இப்பொழுது அதிக பலமாக நடந்து வருகிறது.
1993 ல் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்களில் இருந்து உளவுத்துறை உள்பட நாட்டின் மிக முக்கியமான துறைகள் எங்களை கண்காணித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான்.
ஆனாலும் முன்பை விட ‘டி’ கம்பெனி விருட்சத்துடன் வளர்ந்து செல்கிறது. தாவூத் ஒரு இஸ்லாமியராக ஐந்து வேலைகள் தொழுவதும், ஹஜ் யாத்திரை செல்வதும் என்று இருக்கிறார்.
எங்களை பற்றி வரும் வதந்திகளை நாங்களும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ’டி’ கம்பெனியை யாராலும் அசைக்க முடியாது. அது பயங்கர பலத்துடன் இருக்கிறது” என்று பட படவென பொரிந்து தள்ளி உள்ளான்.
சோட்டா ஷகீல் இந்த பேட்டியை அளித்து கொண்டிருந்தபோதே, பாகிஸ்தானில் தாவூத், ‘டி’ கம்பெனியின் உயர்மட்ட குழுவில் உள்ள ஆட்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசிக்கொண்டும், புதிய ஆட்களை போடவும், அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்த ஆலோசனைகளை செய்து கொண்டும் இருந்தான்.
தாவூத் வெளியே ஓய்வு பெற்றதாக அறிவித்து கொண்டு இருந்தாலும்ம் உள்ளுக்குள் நடக்கும் அனைத்து சம்பவங்களும் தாவூத் காதுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தாவூத்தின் எண்ணம், செயல் என்று எல்லாமே ‘டி’ கம்பெனியை சுற்றியே இருக்கிறது. அதனால்தான் தாவூத் அவனது ஓய்வு குறித்து அறிவித்து இருந்தாலும், அவனது தினசரி நடவடிக்கைகளில் மறக்காமல் ‘டி’ கம்பெனி பற்றி தினசரி நிலவரங்களை கேட்டு தெரிந்து கொள்வதாக சோட்டா ஷகீல், அவனுக்கு நெருக்கமான வட்டாரங்களில் தெரிவித்து இருக்கிறான்.
களமிறங்கிய புதிய படைகள்
தாவூத்தின் தொடர்புகள் உலகம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கிறது. அவனது தொடர்புகள் இருக்கும் இடங்களில் கடந்த பத்து நாட்களாக புதிய கூட்டங்கள் நடந்து கொண்டே வருகிறது. எல்லாக்கூட்டங்களிலும் சோட்டா ஷகீல் பேசி வருவதாக தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது.
இதுவரை நிழல் உலக தாதாவாக வலம் வந்த பல்வேறு தாதாக்கள் கூட, இந்த கூட்டங்கள் பற்றியும், ‘டி’ கம்பெனியில் என்ன மாதிரியான கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகிறது என்பது குறித்தும் அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.
பல்வேறு நாடுகளில் இவர்களின் தொழில்கள் பேரம் பேசியும், ஒரு சில நாடுகளில் அவர்களின் அரச கொள்கை முடிவுகளில் தலையிட்டு, பொருளாதார உடன்படிக்கைகள் போடப்பட்டுள்ளதாகவும் சொல்லுகிறார்கள்.
மிகச்சிறிய நாடுகளை, அவர்களின் பொருளாதார வளர்ச்சியை மையமாக வைத்து, அந்த நாடுகளின் அதிபர்களை வளைத்து போட்டு, இவர்களின் பிசினஸ் மையங்களின் முக்கிய மையங்களாக மாற்றியது இப்பொழுதுதான் தெரிய வந்திருக்கிறது.
ஒரு சில நாடுகள், இதுபோன்ற தொழில்களை அவர்களின் நாட்டிற்குள் வரவிடாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது.
ஆனாலும் தாவூத்தின் போதைப்பொருள் சாம்ராஜ்யம் காற்று போல எல்லா இடங்களிலும் புகுந்து இருக்கிறது. ஆயுதங்கள் விற்பது குறித்த பேச்சு வார்த்தைகளும், ஆயுத வியாபாரிகளின் கூட்டமும் சமீபத்தில் ரஷ்யாவிலும், ருமேனியா நாட்டிலும் நடந்தது.
அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தாவூத்தின் ஆட்கள், “ஆசியாவின் மிகப்பெரிய சந்தை இந்தியாதான். இந்தியாவில் அரசிடம் இருக்கும் துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற ஆயுதங்கள் எல்லாமே மிகவும் பழமையான ரகத்தை சேர்ந்தவைகளாக இருக்கிறது.
ராணுவம், மத்திய மாநில அரசுகளுக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் அரசின் ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள், உங்களை தொட முடியாத தூரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
உங்களிடம் ஆயுதம் வாங்கி விற்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று ருமேனியா நாட்டை சேர்ந்த பிரபல ஆயுத வியாபாரிகளிடத்தில் பேசி இருக்கிறார்கள்.
இந்த சம்பவங்களைக்கூட சமீபத்திய மீட்டிங்கில் சொல்லி இருக்கிறார்கள். அதோடு மார்க்கெட்டில் அப்டேட்டாக இருக்கும் புதிய இளைஞர்களை ‘டி’ கம்பெனி இறக்குமதி செய்து இருக்கிறது.
இவர்கள் அனைவரும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை, குறிப்பாக அஸ்ஸாம், ஒடிசா, அருணாசல பிரதேஷ், போன்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களை அதிக சம்பளத்திற்கு கொண்டு வந்ததாக சோட்டா ஷகீல் சொல்லி இருக்கிறான்.
இது தவிர ஆயுதங்களை வாங்கிக்கொண்டு கூலிக்கு கொலை செய்ய மத்தியபிரதேசம், பிகார், போன்ற இடங்களில் இருந்தும் ஆட்களை கொண்டு வந்து இறக்கி இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது போல செய்வது இல்லை. இவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு மூலையில் இருப்பார்கள். அவர்களை பயன்படுத்தும்பொழுது அவர்களுக்கான வேலையை மட்டும் சொல்லுவார்கள், வேலையை அவர்கள் செய்து முடித்து விட்டு போய் விடுவார்கள்.
இந்த நெட்வொர்க் ஆரம்பகாலம் முதல் இருந்து வந்தாலும், சோட்டா ஷகீல் இப்பொழுது பல்வேறு புதுமைகளை புகுத்தி இருக்கிறான்.
அனைத்தும் ஹைடெக் ஆக இருக்கிறதாம். அணியும் ஆடைகள், பயன்படுத்தும் பொருட்கள், செல்போன்கள், லேப்டாப், கார் என்று அனைத்தும் மார்க்கெட்டில் முன்னணி பொருளாக இருக்கிறது.
அதனால்தான் தாவூத்தின் சகோதரர் அனீஸ் இப்ராஹிமும் சோட்டா ஷகீலும், ” ‘டி’ கம்பெனி புதிய வெர்சனில் வந்து இருக்கிறது. யாரும் எதுவும் செய்ய முடியாது.
அதன் வேலைகள் முன்பை விட நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது” என்பதை சொல்லமால் சொல்லி இருக்கின்றனர்.
அச்சத்தின் பிடியில் சோட்டா ராஜன்
சோட்டா ராஜனுக்கும் வயது ஐம்பதை தாணடிவிட்டதால், சிறு நீரக பிரச்னை, இரைப்பை கோளாறு என்று பல்வேறு நோய்களில் இருக்கிறான்.
பலத்த பாதுகாப்பில் இருக்கும் சோட்டா ராஜனுக்கு, சிறையிலேயே இரண்டு முறை டயாலிசஸ் செய்து இருக்கிறார்கள்.
அவனுக்கு வழங்கப்படும் உணவுகளில் பெரும்பாலும் கோதுமை ரொட்டிகள், பால், வாழைப்பழம் என்று கொடுக்கப்படுகிறது.
அதுவும் அனைத்து உணவுகளையும் பரிசோதித்த பிறகே கொடுக்கிறார்கள். சோட்டா ராஜன் சிறைக்குள் இருப்பதை பாதுகாப்பாக உணர்ந்தாலும், சோட்டா ராஜனின் ஆட்கள், தாவூத் ஆட்களின் பிடியில் இருக்கிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்று இருக்கும் சோட்டா ஷகீல், சோட்டா ராஜனின் பிசினஸ்களை கருவறுக்கும் வேலைகளில் இறங்கி விட்டதாக சோட்டா ராஜனுக்கு தகவல்கள் போய்க்கொண்டே இருப்பதால்,
சோட்டா ராஜன் உள்காய்ச்சலில் இருப்பதாகவும், மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தவிர்த்து, தாவூத்தின் பின்னனணியில் நடந்த மேலும் சம்பவங்களை தொகுத்து இந்திய அரசின் கைகளில் கொடுத்து, தாவூத்தை பாகிஸ்தானில் இருந்து இந்தியா கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சோட்டா ராஜன் இந்திய அரசின் கைகளில் சிக்கி இருப்பதால், மந்திரவாதியின் உயிர் கிளியின் உடலில் இருப்பதுபோல தாவூத்தின் பிடி, சோட்டா ராஜனிடம் இருப்பதை உணர்ந்த ‘தாவூத்’ அவனது ‘டி’ கம்பெனியின் ரூட்டை மாற்றி, இப்பொழுது புதிய வெர்சனில் இயங்கி கொண்டு இருப்பதாக தெரிகிறது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் தாவூத்தின் 60 வது பிறந்தநாளில்தான் வெளியே வந்தது. இல்லையென்றால் 80 களில் பார்த்த அதே தாவூத்தைதான் நாம் இன்னமும் நினைத்துக்கொண்டு இருக்க முடியும்.
குடும்பம், பிசினஸ், செல்வாக்கு, பாதுகாப்பு போன்ற எல்லாவற்றையும் பத்திரப்படுத்திய தாவூத்தின் ஒரு நாள் வாழ்க்கை எப்படி போகிறது தெரியுமா? அடுத்தவாரம் பார்க்கலாம்…
– சண்.சரவணக்குமார்
எதிர்த்தால் துப்பாக்கி… மறுத்தால் வெடிகுண்டு! ( தாதா தாவூத் இப்ராஹிம்- தொடர்)