சாப்தமொன்றை சிறையில் கழித்து விட்டேன். மீண்டுமொரு தசாப்தத்தை சிறையில் கழித்தாகவேண்டுமென உத்தரவிட்டுள்ளாள் நீதிதேவதை. பிறிதொரு வழக்கு ஆறாண்டுகளாக கிடப்பில் இருக்கின்றது.
எனது எதிர்காலம் என்னாகப்போகின்றது? நமக்கு மட்டும் ஏன் தான் இந்த நிலையோ? இந்தப்பிறப்பில் வாழ்வும் சாவும் எனக்கு இங்கேதான்…! மேன்முறையீடு செய்யலாமா? எவ்வாறு செய்வது? யாரை பார்ப்பது? நடப்பது நடக்கட்டும்…! ஆயிரம் கேள்விகளும் பதில்களும் மனதுக்குள்.
ஜனவரி ஐந்தாம் திகதி. அன்றும் வழமைபோன்றே எனது மனதில் அதே கேள்விகளும் பதில்களும். வழமையான கடமைகளை நிறைவு செய்து விட்டு சிறைக்கூடத்தில் அமர்ந்திருந்தபோது, ஜெனீவன் உங்களுக்கு விடுதலை கிடைக்கப்போகின்றது. ஜனாதிபதி பொதுமன்னிப்பளிக்கவுள்ளார். தயாராகவிருங்கள்.
அவ்வார்த்தைகள் நிறைவுக்குவந்த அந்தவொரு நொடி…! கனவிலும் நினைக்காத விடயம்…! அளவற்ற மகிழ்ச்சி…!
எதிர்பார்க்காத தருணத்தில் அனைத்துமே மாறியது.
என்னுடைய சிறைக்கூடத்தில் இருந்தவர்கள் தமது பிரச்சினைகளை மறந்து ஆரத்தழுவினார்கள். மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
நண்பா சென்றுவா. எமக்கும் என்றோ ஒருநாள் விடியல் பிறக்கும் என்றார்கள்.உனது விடுதலை நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றதென உறுதியுடன் கூறினார்கள்.
தசாப்தமொன்றில் ஏற்பட்ட நட்புகளை, என்னைப்போன்றே குடும்பத்துடன் வாழத்துடிக்கும் நெஞ்சங்களை பிரிந்து நான் மட்டும் செல்கின்றேனே என்னசெய்வது? மட்டற்ற மகிழ்ச்சி ஒருபுறம் மறக்கமுடியாத வேதனைகள் மறுபுறம் மனதுக்குள் குழப்பங்கள் ஆயிரம். நடப்பதெல்லாம் நன்மைக்கேயென்று உணர்ந்தேன்.
ஜனவரி எட்டாம் திகதி. ஆயிரமாயிரம் கேள்விகளை என்னை நானே கேட்டுக்கொண்டிருக்கையில் சிறைச்சாலை அதிகாரிகள் வந்தார்கள்.
தம்முடன் அழைத்துச் சென்றார்கள். பலர் கூடியிருந்த அரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டேன். எனக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அவர் அறிவித்தார்.
நாட்டின் தலைவராக உயரிய மனப்பான்மையுடன் எனக்கு பொது மன்னிப்பளிப்பது ஜனாதிபதியின் பெருந்தன்மை. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
சுதந்திர மனிதனாக யாழ்ப்பாணத்திலுள்ள எனது வீட்டுக்கு திரும்பினேன். என்னை எதிர்பார்த்துக் காத்திருந்த அம்மா, அப்பாவுடன் மீண்டும் இணைந்து கொண்டேன்.
ஆம்இ எப்படியிருக்கிறீர்கள் என்ற வினாவுடன் ஆசனத்தில் அமர்ந்தபோது புன்முறுவலுடன் கடகடவென மேற்கண்டவாறு கூறிவிட்டு அமைதியானார் யாழ்ப்பாணம் அச்சுவேலி வல்லைவீதியில் வசித்துவரும் சிவராஜா ஜெனீவன்.
சிவராஜா, புஷ்பராணி தம்பதிகளுக்கு மூன்று ஆண்பிள்ளைகள். இரண்டாவது மகனாக 1978ஆம் ஆண்டு பிறந்தவர் ஜெனீவன்.
மக்கள் சேவையை பிரதானமாகக் கொண்ட ஒரு தாதியாக செயற்பட்டு வந்தவர் சிவராஜா. அளவான வருமானம். அமைதியான குடும்பம். மூன்று ஆண் பிள்ளைகளையும் கல்வியில் சிறந்தவர்களாக்க வேண்டுமென்ற பேரவா ஏனைய பெற்றோரைப்போன்றே சிவராஜா தம்பதியினருக்கும் இருந்தது.
அவ்வாறிருக்கையில் 90களில் அசாதாரண நிலைமைகள் ஏற்பட்டன. குறிப்பாக அச்சுவேலிப் பகுதியில் ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றன. படை முன்னகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்தருணங்களில் வீட்டை விட்டு வெளியேறுவதும்இ சில நாட்கள் கழித்து வீட்டுக்குச் செல்வதும் இவர்களுக்கு வழமையாகிவிட்டது.
எனினும் அச்சுவேலி மகாவித்தியாலத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த புதல்வர்களின் படிப்பு பாதிக்கப்படப்போகின்றது என்பதால் தற்காலிகமாக யாழ்.நகரத்தில் மையத்தில் குடியேறினர்.
இரண்டாவது புதல்வனை யாழ்.செங்குந்தான் பாடசாலையில் இணைக்கப்பட்டார். ஒருவருடம் கழிந்த நிலையில் யாழ்.மத்திய கல்லூரிக்கு மாற்றப்பட்டார். சாதாரணமாக வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்தது. கல்வியில் சிறந்தவராக விளங்கியவர் ஜெனீவனுக்குள் போராட்ட குணம் ஏன்வந்தது?
ஆழமான பாதிப்பு
அச்சுவேலியில் வசிக்கும்போது அவ்வப்போது ஷெல்களும், விமானத்தாக்குதல்களும் நடைபெறுவது வழமையாகி விட்டது. இதனால் வீட்டை விட்டுச் செல்வதும் மீண்டும் வருவதும் வழமையாகி விட்டபோதும் நிம்மதியாக இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஜெனீவனுக்கு ஏற்பட்டது.
அவ்வாறொருநாள் ஷெல்கள் சரமாரியாக வந்தபோது அயல்வீட்டில் வசித்த நண்பனின் தாயார் உணவு சமைத்துக்கொண்டிருந்த தருணத்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக நவாலி ஆலயத்தில் நடைபெற்ற தாக்குதலில் ஏற்பட்ட இழப்புக்கள். இவை அனைத்தும் ஜெனீவனை வெகுவாக பாதித்தன. இதனை நிறுத்துவதற்கு ஏதாவது செய்யவேண்டுமென்ற எண்ணம் துடிப்பு மிக்க இளம் வயதில் எழுவது இயல்பானது.
அதற்கமைய தன்னையொரு விடுதலை வீரனாக கருதி சரியான தீர்மானம் எடுக்கமுடியாத அந்த வயதில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் 1994ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அந்த அமைப்பில் இணைந்துகொண்ட ஜெனீவனுக்கு ஆயுதமேந்திப் போராடுவதற்கான வாய்ப்புக்கள் பெரிதாகக் கிட்டியிருக்கவில்லை.
தந்தை தாதியென்பதால் அரைகுறையாக தந்தையின் தொழிலை அறிந்திருந்தமையால் விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பே ஏற்பட்டது.
எவ்வாறு கைது செய்யப்பட்டார்
2006ஆம் ஆண்டு மட்டக்களப்பிலிருந்து வவுனியா நோக்கி பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்தபோது மின்னேரியா பகுதியில் திடீரென பஸ் நிறுத்தப்படுகின்றது.
சிவில் உடையில் திடீரென வருகை தந்தவர்கள் ஜெனீவனை தம்மோடு வருமாறு கூறுகின்றனர். ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை கேட்பதற்கு கூட காலக்கெடு வழங்கப்படாத நிலையில் ஜெனீவன் அழைத்துச் செல்லப்படுகின்றார்.
மூன்று, நான்கு தினங்கள் எங்கிருக்கின்றோம் என்று கூட தெரியாத நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் பொலன்னறுவையில் தான் இருக்கின்றேன் என்பதை உணர்ந்துகொண்டார். பகலில் பொலிஸ் நிலையத்திலும் இரவில் பிறிதொரு இடத்திலும் விசாரணைகள் தொடர்ந்தவண்ணம் இருந்தன.
சிறிது காலத்தில் நான்காம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் நடைபெற்றன. விசாரணைகள் அனைத்துமே உண்மையைக் கூறு என்ற கோணத்திலேயே அமைந்திருந்தன.
எத்தனையோ தடவைகள் சொன்னதையே திரும்பத்திரும்ப கூறிக்கொண்டிருந்தபோதும் அதனை ஏற்பதற்கு விசாரணையாளர்கள் தயாராகவில்லாமையானது இன்றும் ஜெனீவனுக்கு கவலையளிப்பதாகவே உள்ளது.
நீதிமன்றமும் சிறைச்சாலையும்
2006ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் திகதி முதற்தடவையாக நீதிமன்றில் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டார் ஜெனீவன். அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை (தற்போதைய ஜனாதிபதி) கொலைசெய்வதற்கான சதித்திட்டத்துடன் தொடர்பு பட்டுள்ளார்.
ஆகவே விசாரணைகள் தொடரவேண்டியிருப்பதால் மேலதிக கால அவகாசம் மன்றில் கோரப்பட்டது. அதற்கான அனுமதி வழங்கப்படவும் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார்.
சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அனுராதபுரம் நீதிமன்றில் இரண்டு வழக்குகளும் பிறிதொரு வழக்கு யாழ்.நீதிமன்றிலும் தொடரப்பட்டிருந்தது.
அதன் பின்னர் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதியிருந்து பதினான்கு தினங்களுக்கு ஒருதடவை நீதிமன்றின் முன்னால் ஆஜர்படுத்தப்படுவதும் மீண்டும் தடுத்துவைக்கப்படுவதுமாக இருந்தது.
இவ்வாறான நிலைமையில் மீண்டும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி மன்றில் ஆஜர் படுத்தப்பட்டு ஒருவழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
அதன் பின்னர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென்ற காரணத்திற்காக 2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் 8ஆம் திகதி மீண்டும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது. அதற்கமைவாக அனுராதபுரம் நீதிமன்றில் 2014ஆம் ஆண்டு ஜுலை மாதம் மூன்றாம் திகதி தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விவசாய அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அவரைக் கொலை செய்வதற்காக சதிமுயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு பத்துவருட சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
பத்துவருடங்கள் சிறையில் காலத்தைக் கழித்த பின்னர் மீண்டுமொரு பத்துவருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றதே. தனது வாழ்க்கை சிறையிலேயே நிறைவடையப்போகின்றது.
மேன்முறையீடு செய்வதா இல்லையா என்ற தீர்மானத்தை எடுக்கமுடியாத நிலையில் அழுத்தங்களுடன் இருந்தார் ஜெனீவன்.
பிறிதொரு வழக்கு யாழ்.நீதிமன்றில் நிலுவையில் காணப்பட்டது. அந்த வழக்கின் மீதான விசாரணைக்காக யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டபோது சாட்சியாளர்களாக குறிப்பிட்டவர்கள் மன்றிற்கு சமுகமளிப்பதே பெரும் பிரச்சினையாக இருந்தது. ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாக அவர்கள் சமுகம் தந்திருக்காத நிலையில் தனக்காக தானே போராட ஆரம்பித்தார் ஜெனீவன்.
டிசம்பர் 7ஆம் திகதியிலிருந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். தனது வழக்கை விசாரணைக்கு எடுக்கவேண்டுமெனக் கோரினார். விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்ற வாக்குறுதியுடன் உண்ணாவிரதம் தற்காலிகமாக கைவிடப்படவேண்டியதாயிற்று.
என்றுமே மறக்கமுடியாதவை
மறுபட்ட விசாரணைகள், தீர்ப்புக்கள் என்பன குறித்து தற்போதும் விமர்சிக்கவோ பேசவோ விரும்பாத ஜெனீவனுக்கு நான்கு சுவர்களுக்குள் ஐந்து முதல் ஆறுபேருடன் இயற்கை உபாதைகளைக் கூட மட்டுப்படுத்தப்பட்ட காலத்தில் கழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமையும், இரவுநேரங்களில் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக எதிர்கொண்டிருந்த நெருக்கடிகளையும் என்றுமே மறக்கமுடியாததாகவுள்ளது.
அது மட்டுமன்றி சிறைக்கூடத்தில் இருக்கும் ஏனையவர்கள் எந்த மனநிலையுடன் இருப்பார்கள். அவர்களுடன் என்னபேசுவது என்பதைக் கூட நினைக்கமுடியாததொரு நிலைமையே இருந்தது.
ஆகவே ஒருவரையொருவர் எவ்வாறு அணுகுவது என்ற மனநிலையில் அமைதியாகவே நீண்ட பொழுதுகள் கழிந்துகொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் உளரீதியான ஆலோசனைகளை பெறுவதற்கு கோருவோமா என்ற மனோநிலை கூட எழுந்த சந்தர்ப்பங்களுமுண்டு.
இதற்கும் மேலாக விசாரணைகளின் போதும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போதும் மொழி ரீதியான பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தமையும் அதனை பயன்படுத்தி சில ஏமாற்று வார்த்தைகள் மூலம் கையொப்பங்கள் பெறப்பட்டமையும் இன்றும் ஆழ் நெஞ்சில் உறைந்துபோயுள்ளன.
நானே சாட்சியம்
தற்போது அரசியல் கைதிகளாக உள்ளவர்களை விடுதலை செய்யக்கூடாது. அவர்கள் விடுவிக்கப்பட்டால் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கிவிடும் என்றொரு கருத்து பிரதானமாக தென்னிலங்கையில் கூறப்பட்டு வருகின்றது.
நான் விடுதலைப்புலிகள் அமைப்பில் செயற்பட்டிருந்தேன் என்பதனை மறுதலிக்கவில்லை. ஆனால் தற்போது அனைவரினதும் மனநிலை மாறுபட்டுவிட்டது.
சிறைச்சாலையிலிருந்து வெளியில் வந்து மீண்டும் போராடவேண்டுமென்ற எண்ணமில்லை. உறவுகளுடன் எஞ்சிய காலப்பகுதியை தொடரவே அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். இதனை புரிந்துகொள்ளவேண்டும்.
அதற்கு நானே சாட்சியமாகவுள்ளேன் என வலியுறுத்தும் ஜெனீபன் யுத்தத்துடன் நேரடியாக தொடர்பு கொண்ட 12 ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளார்கள்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்களான கருணா அம்மான், கே.பி போன்றவர்கள் இலங்கையின் அத்தனை சட்டங்களுக்குள்ளிருந்தும் எவ்வாறோ காப்பற்றப்பட்டிருக்கும் நிலையில் திட்டமிடாது ஏதேவொரு காரணத்தால் விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள், சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டும் தொடர்ந்து சிறைகளில் இருப்பது எந்த அடிப்படையில் நியாயமானது என்ற வினாவையும் முன்வைத்தார்.
புரியாத வலிகள்
எனக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படுகின்றேன் என்ற தக-வல் சிறைச்சாலையெங்கும் பரவியது. விடுதலை செய்யப்படுவதற்காக என்னை சிறை அதிகாரிகள் அழைத்தனர். அவர்களுக்கு பின்னால் நான் சென்றேன்.
எனது காலடிகள் ஒவ்வொரு சிறைக்கூடங்களையும் கடந்தபோது கம்பிகளுக்கு நடுவில் புன்முறுவலுடனும், ஆனந்தக் கண்ணீருடனும் என்னை வழி-யனுப்பி உறவுகளின் உள்ளத்தில் இருக்கும் வலிகளையும் ஏக்கங்களையும் கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை… பெருமூச்சோடு நிறுத்திக்கொண்டார் ஜெனீவன்.
நான் சாதாரண ஒரு பொது மகன். எனக்கு அதிகாரங்கள் இல்லை. எனினும் அந்த வலிகளையும், ஏக்கங்களையும் முழுமையாக உணர்ந்தவன் என்ற அடிப்படை-யில் அவர்களின் விடுதலைக்காக குரல்கொடுப்பதற்கோ அல்லது எந்தவிதமான செயற்பாடுகளை முன் னெடுப்பதற்கோ சந்தர்ப்பமொன்று ஏற்படுமாயின் நான் முழுமையான மனதுடன் ஈடுபடுவேன் என்பதில் மாற்-றுக்க-ருத்தில்லையென உறுதியாக கூறிவிட்டார்.
நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக பெருந்தன்மையுடன் எனக்கு மன்னிப்ப-ளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நெஞ்சங்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும் என்ற கோரிக்கை-யையும் அவர் முன்-வைக்க தவறவில்லை.
புதிய சூழலும் அடுத்த கட்டமும்
ஒருதசாப்த இடைவெளியில் மீண்டும் சமூகத்துடன் இணைந்துகொண்டுள்ளேன். எனக்கு நண்பர்கள் யாருமில்லை. முன்னேற்ற-கரமான சமுதாயத்தில் பத்தாண்டுகள் பின்னிலையடைந்திருக்கின்றேன்.
சுயமுயற்சியால் சிங்களமொழியை கற்றுக்கொண்ட எனக்கு தற்போது 38 வயதாகின்றது. வேலைதேடுவதானால் கல்வி சான்றிதழ்கள் தேவை.
கல்வியை தொடருவதென்றால் பாடசாலைக் கல்வியை பாதியில் விட்டுச் சென்ற நான் எங்கிருந்து ஆரம்பிப்பதென்றொரு கேள்வி-யெ-ழுகின்றது. வெளிநாடு செல்லும் எண்ணமுமில்லை. அடுத்த-கட்டம் என்ன-செய்வ-தென்று இது-வரையில் சிந்தி-க்க-வில்லை. நம்பிக்கையுள்ள-தென்கிறார் ஒரு-மணிநேரம் கடந்தும் மீண்டும் அதே புன்முறு-வல் பூத்த முகத்துடன்…!
கசப்பான அனுபவங்களுடன் கடி-ன–மான பதையினை கடந்து வந்த ஜெனீவனின் எதிர்காலம் சிறப்பானதாக அமை-வற்கு வாழ்த்துக்கள். கடல்நீந்திக் கரையேறியவரை கைகொடுத்து தரையுயர்த்துவதே சாலச்சிறந்தது.
( ஆர். ராம் )