கூட்டு எதிரணி உறுப்பினர்கள் குழுவினால் உருவாக்கப் படவுள்ளதாக கூறப்படுகின்ற புதிய முன்னணிக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த முன்னணியின் தலைமை பொறுப்பை, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வதற்கு மறுக்கும் பட்சத்திலேயே, அப்பதவியை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
புதிய அரசியலமைப்பு 13ஆவது திருத்தச்சட்டத்தை தாண்டக் கூடாது – என்கிறார் மகிந்த
18-01-2016
புதிய அரசியலமைப்பு எந்தக் காரணத்தைக் கொண்டும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரப் பகிர்வு முறையைக் கொண்டதாக இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.
நாரஹேன்பிட்டி அபேராம விகாரையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச,
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு முழுமையான ஆதரவை வழங்கப்படும்.
ஆனால் அரசியலமைப்பை மாற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
புதிய அரசியலமைப்பில், அதிகாரப் பகிர்வு, எந்தக் காரணத்தைக் கொண்டும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்வதாக இருக்கக் கூடாது.
மாகாணங்களை இணைப்பதற்கு அனுமதிக்கும் ஏற்பாடுகளுக்கும் இடமளிக்கக் கூடாது. காவல்துறை அதிகாரங்களை எந்தக் காரணம் கொண்டும் மாகாணங்களுக்கு வழங்க முடியாது.
இந்தியா போன்ற பெரிய நாடுகளில் காவல்துறை அதிகாரங்களைப் பகிர்வது சாத்தியமானதாக இருக்கும்.
சிறிலங்காவை விடப் பல மடங்கு பெரியதான தமிழ் நாட்டிலேயே ஒரு காவல்துறையே காணப்படுகிறது. அதனால் இந்திய முறைமை, எந்த வகையிலும் இலங்கைக்கு ஏற்புடையதல்ல” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.