ஐந்து ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்காக கள்ளக் காதலனுடன் இணைந்து கணவரை கைக்குண்டு வீசி கொலை செய்ய முயன்ற பெண்ணை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கள்ளக் காதலன் கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட அன்று இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு ஸ்ரீ விக்கிரமராஜசிங்க மாவத்தையைச் சேர்ந்த 42 வயது என்ற பெண்ணே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபராவார்.
கடந்த மூன்றாம் திகதி இரவு நீர்கொழும்பு குரணை பிரதேசத்தில் இடம்பெற்ற கைக்குண்டு வீச்சுத் தாக்குதலில் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சந்தேக நபரின் கணவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
சந்தேக நபரான பெண்ணும் அவரது கணவரும் அவர்களது இரண்டு பிள்ளைகளுடன் இத்தாலியில் தொழிலுக்காக சென்று வசித்து வந்துள்ளனர்.
அங்கு வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த நபருடன் அவர்களுக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபரான பெண்ணுக்கும் குறித்த நபருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அந்தக் குடும்பத்தினர் இலங்கை திரும்பிய பிறகும் இந்தத் தொடர்பு தொடர்ந்துள்ளது. கைக்குண்டு தாக்குதலுக்கு உள்ளான கணவருக்கு மாதம்பை பிரதேசத்தில் ஐந்து ஏக்கர் காணி ஒன்று உள்ளது.
அவர் காணிகளை விற்பனை செய்யும் வர்த்தகராவார். அந்த காணியை அபகரிக்கும் நோக்கில் தனது கள்ளக் காதலனுடன் இணைந்து மனைவி திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி இத்தாலியிலிருந்து ரவி சம்பத் இலங்கை வந்துள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து கணவனை கொலை செய்வதற்கு இரண்டு நபர்களுக்கு கொந்தராத்து வழங்கியுள்ளனர்.
இரண்டு இலட்சம் ரூபா பணம், இரண்டு வீடுகள், இத்தாலியில் தொழில்வாய்ப்பு என்பவைகளே அந்த ஒப்பந்தமாகும்.
பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் பட்டுவெல்லேகமை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் என இரு சந்தேக நபர்களுக்கே கணவனை கொலை செய்யும் கொந்தராத்து வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் கணவனுக்கு சொந்தமான காணியில் உள்ள மரங்கள் சிலவற்றைத் தறித்து அவற்றை தாங்கள் வாங்குதாக அவருடன் பேசியுள்ளதோடு ஒரு தொகை பணத்தையும் முற்பணமாக வழங்கியுள்ளனர்.
மிகுதிப்பணத்தை வழங்குவதற்காக கட்டுநாயக்க, குரணை பராக்கிரம வீதி அருகில் வருமாறு கூறியுள்ளனர். அவ்வாறு பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த மூன்றாம் திகதி இரவு வந்தபோதே மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் இருவரும் கைக்குண்டொன்றை கணவரின் மீது வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தின்போது காயமடைந்த கணவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கைகுண்டு வீச்சினால் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சிலவற்றுக்கும் சேதம் ஏற்பட்டது.