பிரித்தானியாவில் புகலிடம் கோரி வரும் புலம்பெயர்ந்தவர்கள் ஆங்கில மொழித்திறனை வளர்த்துக்கொள்ளாவிட்டால், அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் வகையில் புதிய திட்டங்கள் அறிமுகமாக உள்ளதாக பிரதமர் டேவிட் கமெரூன் அறிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் பிரதமர் கமெரூன் இவ்வாறு கூறியுள்ளார்.
அதில், இது பிரித்தானியா நாடு. இங்குள்ள மக்களிடம் எளிய முறையில் பழகவும், வேலைவாய்ப்பினை அமைத்துக்கொள்ளவும் ஆங்கில மொழியை வளர்த்துக்கொள்வது மிக அவசியம்.
ஆங்கில மொழியை பேச தவறும் புலம்பெயர்ந்தவர்களுக்காக 20 மில்லியன் பவுண்ட் மதிப்பீட்டில் பயற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன.
இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற பிறகும், ஆங்கில மொழியை கற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படலாம் என கூறியுள்ளார்.
அதே சமயம், பிரித்தானியாவிற்கு வரும் இஸ்லாமிய தாயார்களை குறித்தும் பிரதமர் கமெரூன் பேசியுள்ளார்.
பிரித்தானிய நாட்டில் இஸ்லாமிய பெண்கள் எப்படி வாழலாம்? என்ன உடை உடுத்தலாம்? யாரை விரும்பலாம் என்ற தனிப்பட்ட உரிமைகளை அவர்களே தெரிவு செய்துக்கொள்ளலாம்.
அதே சமயம் இஸ்லாமிய தாயார்கள் உள்நாட்டு மக்களிடம் நெருங்கி பழகி சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக, இஸ்லாமிய தாயார் மற்றும் அவரது மகன்களுக்கு உள்ள இடைவெளியை குறைத்து விட்டு அவர்களிடம் நெருங்கி பழகுவதன் மூலம், இளம் இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு தூண்டப்பட மாட்டார்கள் என பிரதமர் கமெரூன் வலியுறுத்தியுள்ளார்.