ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் இஸ்ரேலிய பெண் ஒருவரை பலஸ்தீனர் ஒருவர் வீடு புகுந்து கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.
ஹெப்ரூன் நகருக்கு அருகில் இருக்கும் சட்டவிரோத யூத குடியேற்றப் பகுதியிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கத்திக்குத்து நடத்திய பலஸ்தீனரை இஸ்ரேலிய படையினர் தீவிரமாக தேடி வருகிறன்றனர்.
ஞாயிறன்று இடம்பெற்ற பிறிதொடு சம்பவத்தில் கத்திக்குத்து தாக்குதலுக்கு முயன்றதாக பலஸ்தீன இளைஞர் ஒருவர் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் தொடக்கம் நீடித்துவரும் பதற்ற சூழலில் பலஸ்தீனர்கள் அல்லது இஸ்ரேலிய அரபிகள் நடத்திய கத்திக்குத்து, துப்பாக்கிச் சூடு அல்லது காரை மோதவிட்டு நடத்தும் தாக்குதல்களில் 27 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மறுபுறம் இஸ்ரேல் இராணுவம் மற்றும் சிவிலியன்கள் நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் 150க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் தனது 30 வயதுகளில் இருக்கும் தப்னா மெயிர் என்ற தாய் ஒருவரே கொல்லப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
தனது மூன்று குழந்தைகளும் பார்த்திருக்கவே இந்த பெண் தாக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் ஹெலிகொப்டர்கள் மற்றும் இராணுவ வாகனங்களை பயன்படுத்தி தாக்குதல்தாரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
முன்னதாக நப்லூஸ் நகரில் கத்திக்குத்து தாக்குதலுக்கு முயன்றதாக பலஸ்தீனர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த முயன்றதாலேயே பலஸ்தீனர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டபோதும் இந்த சம்பவத்தில் எந்தவொரு இஸ்ரேலியருக்கும் காயம் ஏற்படவில்லை.
அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான வஸ்ஸாம் மர்வான் கஸ்ராவா என்ற இளைஞனே கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையும் காசா எல்லைப்பகுதியில் இடம்பெற்ற மோதலின் போது இரு பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 19 வயது மற்றும் 26 வயது இளைஞர்களே இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.