சவூதி அரேபிய அரச குடும்பத்தில், 33 வருடகாலமாக சாரதியாக பணியாற்றிய இலங்கையர் ஒருவருக்கு அரச குடும்பத்தினர் விமரிசையான பிரியாவிடை அளித்துள்ளனர்.
மேற்படி சாரதி 76 வயதான “வத்தி” என இனங்காணப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் சப்க் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இவர் முஸ்லிம் அல்லாத ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரச குடும்பத்தினர் அவரை சமி என செல்லமாக அழைக்கின்றனர்.
அரச குடும்பத்தில் 33 வருடங்களாக பணியாற்றி ஓய்வு பெறும் அவரை கௌரவிக்கும் வகையில் மாபெரும் விருந்துபசார வைபவமொன்று நடத்தப்பட்டது.
தலைநகர் ரியாத்திலுள்ள, இளவரசர் அப்துல் ரமன் பின் பர்ஹான் அல் சௌத்தின் மாளிகையில் கடந்த வியாழக்கிழமை இரவு இப் பிரியாவிடை நடைபெற்றது.
அரச குடும்ப முக்கியஸ்தர்கள் பலர் இவ்வைபவத்தில் பங்குபற்றினர். அரச குடும்பத்தினருக்காக பணியாற்றியபோது, அக் குடும்பத்தின் ஓர் அங்கத்தவராகவே தான் உணர்ந்ததாகவும் இதுவே நீண்டகாலம் இப் பணியில் நீடிப்பதற்கு உந்துதலாக இருந்தது எனவும் சமி தெரிவித்துள்ளார்.
“எனது மனைவிக்கு நான் அனுப்பிய 10,000 சவூதி றியால்களை எனது உறவினர் ஒருவர் திருடிக்கொண்டபோது இளவரசர் மேற்கொண்ட மனிதாபிமான செயற்பாட்டை என்னால் மறக்க முடியாது.
இவ்விடயம் குறித்து இளவரசர் அறிந்தவுடன் என்னை அழைத்து மேற்படி பணத்தை எனக்கு அவர் கொடுத்தார்” என சமி தெரிவித்துள்ளார்.
“இங்கு எனக்கு அரவணைப்பு, பாசம், மரியாதை அனைத்தும் கிடைத்தன. நல்ல விதமாக நான் நடத்தப்பட்டேன்.
இளவரசர் என்னை எப்போதும் இளவரசர் சமி என வேடிக்கையாக அழைப்பார்” என சமி தெரிவித்துள்ளார்.
இளவரசர் அப்துல் ரஹ்மானின் பேரனும், சவூதி தொழிற்துறை திட்டமிடல் அபிவிருத்தி நிதியத்தின் திட்டமிடல் பணிப்பாளருமான எமிர் மன்சூர் பின் சௌத் அல் சௌத் கூறுகையில், “நான் இங்கேயே பிறந்து வளர்ந்தேன். சமி இல்லாதிருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
இக்குடும்பத்தில் ஒருவராகவே அவரை எப்போதும் நான் கருதினேன்” எனக் கூறியுள்ளார்.
பல்கலைக்கழக பேராசிரியரான யூசுப் அல் ஹதிதி கூறுகையில், “நீண்ட காலம் சேவையாற்றிய நிலையில் தான் ஓய்வு பெற விரும்புவதாக சமி கூறியதையடுத்து, முழுக் குடும்பத்தினரும் கவலையடைந்தோம்.
அவரை இக்குடும்பத்தில் ஒருவராகவே நாம் கருதினோம். விசுவாசமும் அர்ப்பணிப்பும் கொண்ட அவரின் சேவையைப் பாராட்டி அவருக்கு விருந்துபசாரமொன்றை நடத்த நாம் தீர்மானித்தோம்” என்றார்.
சிலர் எண்ணுவதைப் போலல்லாமல், சவூதி அரேபியாவிலுள்ள நாம் அனைத்து மதங்கள், நாடுகளுக்கு மதிப்பளிக்கிறோம் என்பதை இது வெளிப்படுத்துகிறது. சமி ஒரு முஸ்லிம் அல்லர்.
அவரை நாம் பாராட்டி, மதிப்பளித்து நடத்தாமல் இருந்தால் அவர் 33 வருடங்கள் எம்முடன் இருந்திருக்க மாட்டார்” எனவும் பேராசிரியரான யூசுப் அல் ஹதிதி கூறினார