பாகிஸ்தானில் பல்கலைக்  கழகத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள், 20 மாணவர்களை சுட்டுக் கொன்றனர். 3 ஆயிரம் மாணவர்கள், பேராசிரியர்களை தீவிரவாதிகள் சிறைப்பிடித்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

பாகிஸ்தானின் சர்சட்டா பகுதியில் அமைந்துள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்திற்குள் இன்று காலை தீவிரவாதிகள் துப்பாக்கியுடன் புகுந்தனர்.

அப்போது, கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 மாணவர்கள் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். தகவல் அறிந்து ராணுவத்தினரும், பாதுகாப்பு படையினரும் அந்த பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அப்போது, நடந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. 3 ஆயிரம் மாணவர்கள், பேராசிரியர்களை தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்துள்ளனர்.

அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ராணுவமும், பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பள்ளி வளாகத்திற்குள் 8ல் இருந்து 10 தீவிரவாதிகள் வரை இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தினுள் 4 வெடிகுண்டுகள் வெடித்துள்ளதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply