புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப் புலிகளின் தனித் தமிழீழக் கனவு ஒருபோதும் நிறைவேறாது. இதனை தகர்த்தெறிவதற்கான சர்வதேசத்தின் முழுமையான ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கான தனது கடப்பாட்டை ஒருபோதும் புறந்தள்ளமாட்டாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்திடிய மிஹிதுசெத் மெதுறவில் நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இராணுவ வீரர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தொடர்ந்தும் இங்கு உரையாற்றுகையில்,
2009 மே மாதம் 19 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் யுத்த களத்தில் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டது. அவ்வாறு பயங்கரவாதிகள் ஆயுதரீதியாக தோற்கடிக்கப்படச் செய்த போதும் விடுதலைப் புலிகளின் தமிழீழத்தை உருவாக்குவதற்கான சித்தாந்தம் தோல்வியடையச் செய்யப்படவில்லை.
எனவே யுத்த ரீதியில் தோல்வியடையச் செய்த பயங்கரவாதிகளை அரசியல் சித்தாந்த ரீதியில் தோல்வியடையச் செய்யும் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு புதிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு நாட்டுக்காக அரசு தனது கடப்பாடுகளை மேற்கொள்ளும் சூழ்நிலையில் நாட்டின் தேசியப் பாதுகாப்பினை பலவீனமடையச் செய்து, இராணு வீரர்களின் மன வலிமையை இல்லாமல் செய்வதற்கு அரசு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறு குற்றம் சாட்டுபவர்கள் “தேசிய பாதுகாப்பினை” தமது அரசியலின் இருப்புக்காகவே பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு உண்மையிலேயே நாட்டின் மீது “பற்று” கிடையாது மாறாக அரசியல் இலாபமே அவர்களுக்கு இருக்கின்றது. எனவே இவர்களது குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றேன்.
புதிய அரசாங்கம் ஒருபோதும் தேசிய பாதுகாப்பிற்கான தனது கடப்பாட்டை கைவிடுவதற்கோ, தாமதப்படுத்துவதற்கோ நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. கடந்த காலங்களை விட தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் மிக அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றது.
புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் காணும் கனவான தமிழீழக் கோரிக்கை ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. அக் கனவை தகர்த்தெறிவதற்காக சர்வதேசத்தின் சகல விதமான ஒத்துழைப்புகளும் இன்று இலங்கைக்கு கிடைத்துள்ளது.
எனவே எமது தாய்நாட்டுக்கு எதிராக எமது இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் சாவால் விடுத்து நாட்டுக்கு வெளியே செயல்படும் அனைத்து செயற்பாடுகளையும் இல்லாதொழிப்பதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் தனது செயற்பாடுகளை முன்னகர்த்தும்.
யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் சில சம்பவங்கள் காரணமாக இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கு வெளிநாடுகளில் வழங்கப்பட்ட பயிற்சிகள் நிறுத்தப்பட்டன, தொழில்நுட்ப உதவிகளும் நிறுத்தப்பட்டன இவ்வானதொரு சூழ்நிலையில் நான் ஜனாதிபதியாக தெரிவான பின்னர் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து நாட்டின் தற்போதைய நல்லாட்சி தொடர்பாக தெளிவுபடுத்திய பின்னர் உலக நாடுகள் மீண்டும் இலங்கையின் பாதுகாப்பு படைக்களுக்கு பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளதோடு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
நாட்டில் மீண்டுமொரு யுத்தம் உருவாகுவதை தடுத்து நிறுத்தி நிலையான சமாதானத்தை நிலவச் செய்தவதே அன்று யுத்தத்தின் போது உயிரை தியாகம் செய்து, உடல் உறுப்புக்களை இழந்த அனைத்து வீரர்களுக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயர் பாராட்டாகும். இதன் மூலமே நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படும்.
வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொண்டு இலங்கைப் படையினரை மீள் மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
வெளிநாடுகளுக்கு தேவையான விதத்தில் எமது படையினர் மீள் மறுசீரமைப்புக்கு உள்ளாக்கப்படமாட்டார்கள்.
இது தொடர்பில் எந்தவொரு வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் நாம் அடி பணியவில்லை. எந்தவொரு நாடும் எமக்கு ஆலோசனைகளை வழங்கவும் இல்லை அதனை ஏற்க நாம் தயாரும் இல்லை.
நான் பதவியேற்று ஒரு வருட காலத்தில் நாட்டின் ஒருமைப்பாடு, இறையான்மை, தேசிய பாதுகாப்பு அனைத்தும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் யுத்தம் ஆரம்பமான 80 களுக்கு முன்பதாகவும் 50, 60,70 கால தசாப்தங்களிலும் யுத்த காலத்திலும் இன்றும் எமது படையினரை பலப்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சியை வழங்க உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் நட்பு நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
இந் நாடுகள் நீண்ட காலம் எமது படையினருக்கு பயிற்சிகளை வழங்கின. ஆனால் யுத்தத்தின் இறுதிக் கட்டதில் ஏறபட்ட சில சம்பவங்கள் தொடர்பில் குற்றச் சாட்டுக்களை முன்வைத்து பல நாடுகள் பயிற்சி வழங்குவதை நிறுத்திக் கொண்டன.
ஆனால் நான் பதவியேற்ற பின்னர் இந்நிலை மாறி மீண்டும் அந்நாடுகள் எமக்கு உதவ ஆரம்பித்துள்ளன.
புலிப் பயங்கரவாதத்தினை எமது நாட்டுக்குள் ஆயுத ரீதியாக எமது படையினர் தோல்வியடையச் செய்தனர்.
பயங்கரவாதிகளின் வேட்டுச் சத்தங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. பயங்கரவாதிகளின் போர்குணம் செயற்பாட்டுத் திறன் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டது.
இதற்காக உயர் அர்பணிப்புடன் செயற்பட்ட எமது படையினருக்கு நாம் என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்.
விடுதலைப் புலிகளை கருத்து ரீதியாக அரசியல் ரீதியாக தோல்வியடையச் செய்ய வேண்டும். இது மிகவும் நெருக்கடியான பிரச்சினை இதனை புத்திக் கூர்மையுடன் அணுகி வெற்றிக் கொள்ள வேண்டும்.
எனவே புலம் பெயர்ந்து வாழும் புலிகளின் தனித் தமிழீழ கனவை தகர்த்து தவிடுபொடியாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
எமது படையினரை பலப்படுத்தி அங்கவீனமுற்ற படையினரின் நலன்புரிகளுக்கான அனைத்து திட்டங்களையும் துரிதப்படுத்தி நாட்டின் தேசியப் பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.