தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஒவ்வொரு தரப்பினரும் தங்களின் விரும்பங்களுக்கேற்ப கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒரு தரப்பினர் இவ்வாறு கூறுகின்றனர் – “தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் ‘திம்பு’ கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்” என்று.

திம்பு கோட்பாடுகள் என்றால் என்ன? ஒரு சில அரசியல் விமர்சகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இதனை உச்சரித்துக் கொண்டாலும் கூட, இது தொடர்பில் ஏதேனும் புரிதல் தமிழ் சமூகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் இது தொடர்பில் ஏதும் தேடல்கள் இருப்பதாகவும் இப்பத்தி கற்பனை செய்யவில்லை.

ஆகக் குறைந்தது கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட பிரதேச சபை, மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியிலாவது இது தொடர்பில் ஏதும் புரிதல்கள் இருக்குமா என்பதும் சந்தேகமே! அந்தளவிற்கு இது மறந்துபோனதொரு விடயம்.

1985ஆம் ஆண்டு சார்க் நாடுகளில் ஒன்றான பூட்டான் தலைநகர் திம்புவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், அன்றைய சூழலில் இயங்கிய பிரதான தமிழ் அரசியல் அமைப்புக்களுக்கிடையில் காணப்பட்ட பொது உடன்பாடுதான், பின்னர் திம்பு கோட்பாடுகள் என்று பிரபலமானது.

43இதில் அன்று பிரதான ஆயுதப் போராட்ட அமைப்புக்களாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் (எல்.ரி.ரி.ஈ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) மற்றும் ஈழப் புரட்சிகர மாணவர் அமைப்பு (ஈரோஸ்) ஆகிய போராட்ட அமைப்புக்களும், அன்றைய சூழலின் மிதவாத தலைமையான தமிழர் விடுதலைக் கூட்டணியும் (ரி.யுல்.எல்.எப்) இதில் பங்கு கொண்டிருந்தன.

புளொட் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் அனைத்தும் ஈழத் தேசிய விடுதலை முன்னணி (Eelam National Liberation Front (ENLF) என்னும் பொதுப் பெயரிலேயே மேற்படி பேச்சுவார்த்தையில் பங்குகொண்டிருந்தன.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் அனைவரும் பின்வரும் நான்கு விடயங்களில் ஒன்றுபட்டனர்.

ஒன்று, தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதை அங்கீகரித்தல்.

இரண்டு, தமிழ் மக்களுக்கென அடையாளம் காணப்பட்ட ஒரு தாயகம் உண்டு என்பதை அங்கீகரித்தல்.

மூன்று, ஒரு தேசம் என்னும் வகையில் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்.

நான்கு, இலங்கையை தங்களின் நாடாக கருதும் அனைத்து தமிழ் மக்களினதும் அடிப்படை மற்றும் குடியுரிமையை அங்கீகரித்தல்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மேலே குறிப்பிடப்பட்ட நான்கு அம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும் என்று சிலர் இன்று வாதிடுகின்றனர்.

அவ்வாறானவர்கள் ஓப்பீட்டடிப்படையில் சிறுபான்மை தரப்பாகவே இருக்கின்றனர். மேற்படி நான்கு விடயங்களை வலியுறுத்துபவர்களும் ஜக்கிய இலங்கைக்குள் தீர்வை தேடுபவர்கள்தான்.

ஏனெனில், மேற்படி கோட்பாடுகள் அன்றைய சூழலில் பிரிவினைக்கு மாற்றாகவே முன்வைக்கப்பட்டன. ஆனால், பிரபாகரன் ஏனைய இயக்கங்கள் அனைத்தையும் தடைசெய்துவிட்டு தனித்து இயங்கியபோது, அவரின் அரசியல் இலக்கிற்கு முன்னால், திம்பு கோட்பாடுகள் பெரியளவில் முக்கியத்துவம் உடையதாக இருந்திருக்கவில்லை.

எனவே, இந்த இடத்தில் மீண்டும் திம்பு கோட்பாடுகள் உயிர்பெறுவதற்கு ஒரேயொரு காரணமே இருந்தது. அதாவது, தமிழீழம் பற்றி இலங்கைக்குள் பேச முடியாது.

எனவே, அதற்கு மாற்றாக, ஆனால், முன்னர் பிரபாகரனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று பற்றி பேச வேண்டும் என்று சிலர் விரும்பியபோது, அவர்கள் தங்களின் தெரிவாக்கிக் கொண்டதே திம்பு கோட்பாடுகள்.

திம்புப் பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட சிலர் இப்போதும் இருக்கின்றனர். அவர்களில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒருவர். பிறிதொருவர் புளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆவார்.

திம்பு கோட்பாடுகள் என்பது அனைவரும் ஒன்றுபட்டு முன்வைத்த நிலைப்பாடுகள் என்பது உண்மைதான். ஆனால், அப்போதைய ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம் இவற்றை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது என்பதையும் இந்த இடத்தில் குறித்துக் கொள்வது அவசியம்.

ஒரு தரப்பினரின் நிலைப்பாடு திம்பு கோட்பாடுகள் என்றால், இன்னொரு தரப்பினர் ஜக்கிய இலங்கைக்குள் நியாயமானதொரு அரசியல் தீர்வு பற்றி பேசுகின்றனர்.

அது எவ்வாறு அமைந்திருக்கும் என்பதைப் பற்றி வெளிப்படையான கலந்துரையாடல்கள் இன்மையால், இவர்களது நிலைப்பாடு தொடர்பில் ஒரு தெளிவற்ற நிலைமையே காணப்படுகிறது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இவ்வாறானதொரு நிலைப்பாட்டுக்கே தலைமை தாங்கிவருகின்றார். அவரது உள்மனதில் என்ன இருக்கிறது என்பது தொடர்பில் மற்றவர்களுக்கு கேள்விகள் இருப்பினும் கூட, கூட்டமைப்பின் பெரும்பான்மை சம்பந்தனது முயற்சிகளுக்கு ஆதரவாகவே இருக்கிறது.

பிறிதொரு தரப்பினர் இலங்கையின் உள்ளக நிலைமைகள் மற்றும் சர்வதேச தலையீட்டின் எல்லைக் கோட்டை தெளிவாக விளங்கிக் கொண்டு, அதன் தளத்தில் நின்று, தீர்வு பற்றி பேசுவதே சரியானதாக இருக்கும் என்கின்றனர்.

இவ்வாறானவர்கள் தமிழர் தரப்பின் விருப்பங்கள், முன்மொழிவுகள் எப்படியிருந்தாலும், ஒரு எல்லைக்கு மேல் இலங்கையில் எதுவும் நடக்கப் போவதில்லை என்கின்றனர்.

கூட்டமைப்புக்கு வெளியில் இருக்கும் ஒரு சிரேஸ்ட அசியல் தலைவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, அவர் இவ்வாறு கூறினார் – “முன்னர் நாங்கள் சில விடயங்களை அழுத்திக் கூறினோம். ஆனால், அவற்றை தமிழ் சமூகம் கேட்கத் தயாராக இருக்கவில்லை.

இறுதியில், எங்களை வேண்டாதவர்களாக்கிவிட்டு, அதீத கற்பனைகளுக்குப் பின்னால் போகும் ஆபத்தான முடிவொன்றுக்கே தமிழ் சமூகம் ஆதரவளித்தது. பின்னர் ஒப்பாரி வைத்தது.

இப்போதும் நாங்கள் கூறுவதை எவரும் கேட்கப் போவதில்லை. வேகக் கூடிவைதான் வேகும்” என்று. இவ்வாறான அபிப்பிராயங்களை வலியுறுத்துவோர் 13ஆவது திருத்தச் சட்டம் எந்த இடத்தில் தோற்றுப் போனது என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டு, புதிய அரசியல் யாப்பில் அவற்றை கழைவதற்கு எவ்வாறான விடயங்களை முன்வைக்க வேண்டும் என்று சிந்திப்பதே இன்றைய சூழலுக்கு உகந்தது என்கின்றனர்.

இதற்கு மேல் சிந்திக்கக் கூடாது என்பதல்ல பொருள். ஆனால், எல்லாவற்றிலும் ஒரு மாற்று திட்டம் தொடர்பான சிந்தனை இருப்பது அவசியம் என்பதே அவ்வாறானவர்களது நிலைப்பாடு.

மேற்படி தரப்பினர் தங்களின் விருப்பங்களை இவ்வாறு கூறினாலும், அவற்றை அடைவதற்கான வழிகள் தொடர்பில் குறைவாகவே பேசுகின்றனர். நான் இறுதியாக குறிப்பிட்ட தரப்பினரை தவிர, ஏனைய இரு தரப்பினரிடமும் சர்வதேச சமூகம் தொடர்பான நம்பிக்கை நிலவுகிறது.

2009இல் யுத்தம் நிறைவுற்ற பின்னணியில் ‘சர்வதேசம்’ என்னும் சொல் பெருமளவிற்கு மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு சொல்லாகிவிட்டது.

அரசியல் விமர்சகர் மற்றும் அரசியல்வாதிகள் மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்த சொல்லை, சாமானிய தமிழரும் உச்சரிக்குமளவிற்கு சர்வதேசம் தமிழ் அரசியல் சந்தையில் மலிந்துபோனது.

ஆனால், சர்வதேச சமூகம் தொடர்பில் தெளிவான புரிதல் தமிழ் சூழலில் மிகவும் குறைவாகே இருக்கிறது. இங்கும் ஒரு வகையான கற்பனையே மேலோங்கியிருக்கிறது.

பொதுவாக கற்பனைகள் மேலோங்கும் போது அங்கு யதார்த்தம் பற்றிய தேடல் குறைந்து, உல்லாச அனுபவமொன்றே மேலோங்கும்.

அந்த அனுபவமே போதும் என்று ஒரு சமூகம் எண்ணிக் கொள்ளுமானால், அங்கு புதிய சிந்தனைக்கான தேவை இருக்கப் போவதில்லை. உண்மையில் இங்கு சர்வதேசம் என்று அனைவரும் உச்சரித்துக் கொண்டாலும் அதன் உண்மையான பொருள் அமெரிக்கா என்பதாகும்.

இன்றைய சூழலில் இலங்கையின் மீது இரண்டு நாடுகள் மட்டுமே முதன்மையான அவதானத்தை செலுத்திவருகின்றது. அதில் ஒன்று அமெரிக்கா மற்றையது இந்தியா.

இதில் தமிழ் மக்களுக்கான அரசியல் பிரச்சினையை ஒரு அரசியல் விவகாரமாக மட்டும் அணுகும் ஒரேயொரு நாடு இந்தியா மட்டுமே! அதற்கும் அது இலங்கையின் உடனடி அயல்நாடாக இருப்பதே காரணம்.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அது, இலங்கையின் பிரச்சினையை முதலில் ஒரு மனித உரிமைசார் விவகாரமாவே நோக்கும்.

இலங்கை தொடர்பான அமெரிக்க அணுகுமுறையை உற்று நோக்குபவர்களுக்கு நான் சொல்லுவது புதிய விடயமாகவும் இருக்காது.

ஏனெனில், அமெரிக்காவின் வெளியுலக தலையீடு என்பது மனித உரிமைகள் சார் கரிசனையின் வெளிப்பாடாகவே காண்பிக்கப்படுகிறது.

அவ்வாறானதொரு கரிசனையின் வெளிப்பாடாகவே யுத்தத்திற்கு ஆதரவளித்த அமெரிக்க, யுத்தம் முடிவுற்றதன் பின்னர் பொறுப்பு கூறல் என்னும் அடிப்படையில் மஹிந்த ஆட்சியின் மீது அழுத்தங்களை பிரயோகித்தது.

இதன் விளைவுதான் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மீது கொண்டுவரப்பட்ட பிரேணைகள்.

கடந்த ஆண்டு, செப்டெம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட பிரேரணையை தற்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டதால் அமெரிக்க அழுத்தத்தின் வீக்கம் சடுதியாக குறைந்தது.

இறுதியா ஏற்றுக்கொண்ட பிரேரணையில் இணக்கம் காணப்பட்டிருக்கும் விடயங்களை அமுல்படுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கின்றது.

தற்போது அவ்வாறு உறுதியளிக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளிலும் அரசாங்கம் ஈடுபட்டுவருகிறது. ஆனால், இந்தப் பிரேரணையில் அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை கூட்டமைப்பும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இந்தப் பிரேரணையின் 16ஆவது பந்தி பின்வருமாறு கூறுகிறது, அதாவது, தேவையான அரசியல் யாப்பு ஏற்பாடுகளை எடுப்பதன் மூலம், அரசியல் தீர்வை காணும் நோக்கில் அரசாங்கம் காண்பிக்கும் ஈடுபாட்டை இப்பிரேரணை வரவேற்கிறது அத்துடன், நல்லிணக்கம், மக்கள் தொகையின் அனைத்து உறுப்பினர்களும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு (Full enjoyment of human rights by all members of its population) ஏற்றவாறான, அரசியல் அதிகாரத்தை பகிரும்பொருட்டு (devolution of political authority) அரசாங்கம் காண்பித்துவரும் ஈடுபாட்டையும் இப்பிரேரணை ஊக்குவிக்கின்றது, மேலும், 13ஆவது திருத்தச்சட்டத்தில் குறிப்பிட்டவாறு மாகாண சபைகள் வினைத்திறனுடன் இயங்குவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் இப்பிரேரணை ஊக்குவிக்கிறது.

Encourages the Government of Sri Lanka to ensure that all Provincial Councils, are able to operate effectively, in accordance with the 13th amendment to the Constitution of Sri Lanka).

அதிகாரப்பகிர்வு தொடர்பில் அமெரிக்க ஆர்வத்தின் எல்லை இவ்வளவுதான். இந்த அடிப்படையில் நோக்கினால் நான் மேலே குறிப்பிட்ட மூன்றாவது தரப்பினர் கூறுவது போன்று முதலில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்று சிந்திப்பதுதான் சரியான வழியாக இருக்குமா?

ஏனெனில், இறுதியான பிரேரணையில் 13ஆவது திருத்தச் சட்டம்தான் அதிகாரப்பகிர்விற்கான ஒரு அடிப்படையாகக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆனால், 13இற்கு அப்பால் செல்வதா, அப்படிச் சென்று சமஸ்டியை தொடுவதா, அப்படித் தொடும்போது வடக்கு கிழக்கையும் இணைத்து தொடுவதா, இதெல்லாம் அரசாங்கமும் கூட்டமைப்பும் பேசி இணக்கம் காணவேண்டிய விடயமேயன்றி, இது அமெரிக்காவினது அல்லது இந்தியாவினது தலையீட்டுக்குரிய விடயமல்ல.

இதில் ஒப்பீட்டளவில் மாகாண சபை அனுபவங்களின் தோல்வி தொடர்பில் இந்தியாவுடன் பேசலாம். ஆனால், அதற்கும் முதலில் 13ஆவதின் ஓட்டைகள் தொடர்பில் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விடயம் எந்தளவு தூரம் அரசியல் விமர்சகர்களாலும் அரசியல் வாதிகளாலும் உற்று நோக்கப்படுகிறது? இந்த பிரேரணையின் அடிப்படையில் நோக்கினால், அமெரிக்காவோ அல்லது நல்லாட்சி அரசாங்கமோ மாகாண சபைகளை பலப்படுத்துவதை தாண்டி எந்தவொரு அதிகாரப்பகிர்வு முறைமை தொடர்பிலும் வாக்குறுதியளிக்கவில்லை.

இதனைக்கூட வாக்குறுதியாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், இந்தப் பிரேரணையை தயாரித்தது அமெரிக்கா என்பதால் இதனை அமெரிக்காவின் கரிசனையாக எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறானதொரு சூழலில், கூட்டமைப்பும் எந்தவொரு வாக்குறுதியும் வெளியுலகிலிருந்து பெறவும் இல்லை. நிலைமை இவ்வாறிருக்க தீர்வுத் திட்ட நகலொன்றை வரைந்து இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் கொடுப்பதன் மூலம் என்ன விளைவு வந்துவிடப் போகிறது என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

அவ்வாறு கொடுப்பது பிழையல்ல. ஆனால், அவர்களது எல்லையை விளங்கிக் கொண்டு கொடுப்பது முக்கியம். அரசியல் தீர்வு இலங்கைக்குள் இல்லை என்று கிளிப்பிள்ளையாக இருப்பது எவருடைய பிரச்சினை?

எனவே, இப்பொழுது தமிழ் அரசியல் தலைமைகள் உண்மை நிலைமைகளை மக்களுக்கு தெளிவுபடுத்துவதன் மூலம் மட்டுமே, இந்த விடயங்களை கையாள முடியும். விடயங்களை மக்கள் மத்தியில் பூடகமாக பேணிக்கொள்ள முயல்வதால்தான் உண்மையான நிலைமைகள் திரிபுபடுத்தப்படுகின்றன.

-யதீந்திரா-

Share.
Leave A Reply