தஜிகிஸ்தானில் மதவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி சுமார் 13 ஆயிரம் பேரின் தாடியை அந்த நாட்டு பொலிஸார் மழித்துள்ளனர்.
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.
அதன் அண்டை நாடான ஆப்கானிஸ் தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அண்மைக்காலமாக தலிபான்களின் கொள்கைகள் தஜிகிஸ்தானில் பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் ஐ.எஸ். தீவிரவாதிகளும் தங்கள் அமைப்புக்கு தஜிகிஸ்தானில் இருந்து இளைஞர்களை இழுத்து வருகின்றனர். சுமார் 2000 தஜிகிஸ்தான் இளைஞர்கள் ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே மதவாத நடவடிக் கைகளைக் கட்டுப்படுத்த அந்நாட்டு ஜனாதிபதி இமோமாலி ரகுமான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதிபரின் அறிவுரைப்படி பொதுமக்களிடம் பொலிஸார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
‘நடை, உடை, பாவனையில் மதத்தை வெளிப்படுத்தக் கூடாது, ஆண்கள் தாடி வளர்க்கக் கூடாது, பெண்கள் பர்தா அணிய வேண்டாம்’ என்று மக்களிடம் பொலிஸார் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்காக சிறப்பு கலந்து ரையாடல் நிகழ்ச்சிகளையும் பொலிஸார் நடத்தி வருகின் றனர்.
தஜிகிஸ்தான் முழுவதும் பொலிஸாரின் தீவிர முயற்சியால் சில வாரங்களில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேரின் தாடி மழிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய உடைகள் விற்கப்படும் 160 கடைகள் மூடப்பட்டுள்ளன.
தஜிகிஸ்தான் இஸ்லாமிய மறுமலர்ச்சி கட்சி மதவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த செப்டம்பரில் அந்த கட்சிக்கு தடை விதித்தது.
மேலும் ஆப்கானிஸ்தான், அரபு நாடுகளைப் பின்பற்றி குழந்தைகளுக்கு இஸ்லாமிய பெயர்களை சூட்டக்கூடாது என்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சட்டம் இயற்றப்பட்டது.
சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த தஜிகிஸ்தானில் வறுமை இன்னமும் முக்கிய பிரச்சி னையாக நீடிக்கிறது. எனவே மதவாத நடவடிக்கைகளைப் புறக்கணித்து நாட்டின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துமாறு அதிபர் இமோமாலி ரகுமான் அறிவுறுத்தி யுள்ளார்.