தனது மைத்துனனை வீட்டுக்கு அழைத்துச் சென்று அவரை கோடாரியால் கொத்திய சம்பவம் குப்பிளான் வடக்கில், வியாழக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த சீவரத்தினம் ஜீவராஜ் (வயது 38) என்பவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், தனது மனைவியின் தங்கையின் அலைபேசியிலிருந்து தனக்கு அழைப்பொன்று வந்ததாக மனைவியின் தங்கையின் கணவரிடம் தெரிவித்துள்ளார். எனினும் அதனை மறுத்த அவர் அழைப்பு வந்ததைக் காட்டுமாறு கூறியுள்ளார்.
அலைபேசியில் இருக்கும் அழைப்பைக் காட்டுவதற்காக மனைவியின் தங்கையையும், அவருடைய கணவரையும் அவர்; தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மனைவியின் தங்கையின் கணவரை கோடாரியால் கொத்தியுள்ளார்.
இது தொடர்பில் கொத்து வாங்கியவரின் மனைவி, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில்லறைப் பொருட்களை விற்று பிழைப்பு நடத்திவரும் நடத்திவரும் இளம்பெண் மீது வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வெள்ளிக்கிழமை (22) கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதில் பெண் தலையில் படுகாயமடைந்தார்.
வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வந்தவர்களிடம் மேற்படி பெண் வியாபாரம் செய்தபோது, பெண்ணை வெளியில் செல்லுமாறு கூறி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விரட்டினர்.
வெளியில் சென்ற பெண் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக நின்றுகொண்டிருந்த பொதுமக்களுக்கு பொருட்களை விற்பனை செய்துள்ளார்.
இதன்போது, அங்கு வந்த வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பெண் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் பெண் காயமடைந்தார்.