பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சாப்பொதியுடன் மன்னார் பாலியாற்றுப்பகுதியில் வைத்து இன்று (22) வெள்ளிக்கிழமை அதிகாலை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.யூ.ஹேரத் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபல்யூ.எ;.எம்.விக்கிரம சிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக உப பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.யூ.ஹேரத் தலைமையில் 9 பேர் அடங்கிய பொலிஸ் குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பாலியாற்று பிரதான வீதியில் வைத்து மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்த குறித்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்
.
குறித்த நபரிடம் இரண்டு கஞ்சாப்பொதிகள் காணப்பட்டதாகவும் அவை 4 கிலோ 160 கிராம் எடை கொண்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியானது என மன்னார் மாவட்ட விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் தற்போது மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றார்.
-குறித்த நபர் விசாரனைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.