ஜேர்மனிய கோலொன் பிராந்தியத்தில் கடந்த புது வருட தினத்தில் குழுவொன்றால் பெண்கள் பாலியல் ரீதியில் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அந்தப் பெண்கள் நறுமணத்தைலங்களை பூசியிருந்தமையே காரணம் எனத் தெரிவித்து அந்தப் பிராந்திய இமாம் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த புது வருட தினத்தில் கோலொன் நகரில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
அன்றைய தினம் மட்டும் அந்நகரில் 3 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் உட்பட 521 பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து மேற்படி சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்த குற்றச்சாட்டில் வட ஆபிரிக்காவைச் சேர்ந்த 21 குடியேற்றவாசிகளிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கோலொன் நகரிலுள்ள அல் தவ்ஹீத் பள்ளிவாசலைச் சேர்ந்த இமாமான சமி அபு யூஸுப் அந்தப் பள்ளிவாசலில் இடம்பெற்ற போதனையின் போது, மேற்படி பாலியல் தாக்குதல்களுக்கு அந்தப் பெண்கள் நறுமணத் தைலங்களைப் பூசியிருந்தமையே காரணம் எனவும் அந்தத் தைலங்களே ஆண்களை தவறான எண்ணத்தால் தூண்டப்பட்டு தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தூண்டியிருந்தன எனவும் தெரிவித்துள்ளார்.