ஹோட்டல்கள் முதல் முதல் சுற்றுலாதளங்கள் வரை அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய களஞ்சியமே ‘ட்ரிப் எட்வைசர்’ இணையத்தளமாகும்.
சுற்றுலாப் பயணிகளால் மிகவும் விரும்பப்படும் , பயனாளிகளே தாங்கள் விஜயம் செய்த ஹோட்டல்கள் , பயன்படுத்திய சுற்றுலா சேவைகள் தொடர்பாக கருத்துக்கள் , பரிந்துரை மற்றும் விமர்சனம் செய்யும் வசதிகளைக் கொண்டது இத்தளம்.
இத்தளமானது வருடா வருடம் சிறந்த ஹோட்டல்களை தெரிவு செய்கின்றது. பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த ஹோட்டல்கள் தெரிவுசெய்யப்படுகின்றன.
அங்கு விஜயம் செய்யும் பயணிகளின் பரிந்துரைக்கு அமையவே சிறந்த ஹோட்டல்கள் பெயரிடப்படுகின்றன.
அந்த வகையில் இம்முறை 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஹோட்டலாக இந்தியாவின், ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ‘உமைட் பவன் பெலஸ்’ தெரிவுசெய்யப்படுகின்றது.
மன்னர் எ.ச்.எச். உமைட் சிங்கி ஜி இற்காக கட்டப்பட்ட அரண்மனையின் பகுதியொன்றே இவ்வாறு ஹோட்டலாக செயற்பட்டு வருகின்றது.
இவ் ஹோட்டலை தாஜ் குழும ம் நிர்வகித்து வருகின்றது. மிகப் பெரிய வரலாற்றைக் கொண்ட து இவ் அரண்மனை. இது மணற்கல்லால் நிர்மாணிக்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிட த்தக்க அம்சமாகும்.
மேலைத்தேய மற்றும் கீழத்தேய கட்டிடக்கலை செல்வாக்கினை பிரதிபலிக்கின்றது. இதன் இரு பகுதி நூதனச்சாலையாகவும் , மற்றைய பகுதி அரச வம்சத்தினரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகவும் உள்ளது.
இவ் அரண்மனை 1928- 1943 வரையான காலத்தில் கட்டப்பட்டதாகும். சுமார் 26 ஹேக்கர் தோட்டத்தின் நடுவே அமைந்துள்ள இவ் அரண்மனை, 347 அறைகளைக் கொண்டது. இவ் அரண்மைனையில் 64-70 அறைகள் ஹோட்டல் அறைகளாக செயற்படுகின்றன.
உலகப் பிரபலங்கள் பலரின் தெரிவாக உள்ள மேற்படி ஹோட்டலில் எலிசபெத் ஹேர்லி , அருண் நாயர் ஆகியோரின் திருமணங்களும் நடைபெற்றுள்ளன.
சாதாரண அறைகளுக்கான கட்டணம் , இரவொன்றுக்கு 660 அமெரிக்க டொலர்களில் ஆரம்பிப்பதுடன் , ‘சுயிட்’ களுக்கான கட்டணம் 1748 அமெரிக்க டொலர்களிலிருந்து ஆரம்பிக்கின்றது.
ஒவ்வொரு அறையும் தனிப்பட்ட ‘ஸ்பா’ வினைக் கொண்டிருப்பது இங்கு சிறப்பம்சமாகும். தனிப்பளிங்கு அறைகள் , கண்கவர் சிற்பங்கள் என பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியது இவ் ஹோட்டல்.