திருப்புளி, திருகாணியின் உதவியுடன் பூட்டிய வீட்டின் யன்னல், கதவு, கிறில்களை கழற்றி வீடுகளைக் கொள்ளையடித்து வந்த 21 வயது திருமணமான நபர் ஒருவரை நவகமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரணால பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர், பிலிமத்தலாவையில் திருமணம் முடித்து வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பெருளுக்கு அடிமையான குறித்த நபர், தினமும் ரூபா 15,000 – 20,000 பெறுமதியான போதைப்பொருளை பயன்படுத்தி வந்துள்ளார். பகல் வேளையில் விடுதிகளில் தங்கியிருந்து வந்துள்தோடு, நள்ளிரவு முதல் அதிகாலை 5.00 மணி வரையான காலப்பகுதியில் தனது கைவரிசையைக் காட்டி வந்துள்ளார்.
இவருக்கு எதிராக உச்சநீதிமன்றில் 33 பிடியாணைகளும், திறந்த பிடியாணைகள் 16 உம் காணப்படுவதோடு, ஹங்வெல்லை பொலிஸில் 13 வழக்குகளும் நவகமுவ பொலிஸில் 03 வழக்குகளும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இது வரை, இராஜகிரிய, வெல்லம்பிட்டிய,  கடுவலை, முல்லேரியாவ, கிரிபத்கொடை, கடவத்தை, ஹங்வெல்லை, நவகமுவ, சபுகஸ்கந்தை, களனி, பிலிமத்தலாவ, உள்ளிட்ட  சுமார் 50 இற்கும் மேற்பட்ட வீடுகளைக் கொள்ளையடித்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிரிபத்கொடையிலுள்ள வீடொன்றைக் கொள்ளையடித்த குறித்த சந்தேகநபர், அங்கிருந்த வெளிநாட்டு பணம், நகைகள் போன்றவற்றை விற்பனை செய்து, தனது மனைவியின் ஊரான பிலிமத்தலாவையில் வீடொன்றையும் கொள்வனவு செய்துள்ளார்.
கொள்ளையிட்ட தங்க நகைகளின் பெறுமதி கணக்கிடப்படவில்லை என்பதோடு, சில நகைகளை உருக்கி விற்பனை செய்துள்ளதோடு ஏனையவற்றை பல்வேறு பிரதேசங்களிலுமுள்ள பிரபலமான அடகுக் கடைகளில் வைத்து பணத்தை பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர், தனது மோட்டார் சைக்கிளில் சென்று, பொம்ரிய பிரதேசத்திலுள்ள கடையொன்றில் திருகாணி (Screwdriver) ஒன்றை வாங்கிய காட்சி, CCTVயில் பதிவாகியுள்ளமை தெரியவந்ததை அடுத்து, குறித்த நபரை தொடர்ந்த பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
Share.
Leave A Reply