பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும் திட்டமொன்று தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அண்மையில் கூறியிருந்தார்.
வடக்கில் இருப்பவர்கள் வெளிநாட்டுப் பயணம் எதனையும் மேற்கொள்ள வேண்டுமாயின், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கே செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகிறது.
வெளிநாடுகளுடன் தமிழர்களுக்கு அதிக தொடர்புகள் இருப்பதால், வடக்கில் சர்வதேச விமான நிலையமொன்றை அமைத்தால் அது பெரும் பயனுடையதாக இருக்கும் என்ற கருத்து நீண்டகாலமாகவே தமிழர்களிடம் காணப்படுகிறது.
ஏற்கெனவே, பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தொழிற்படாது விட்டாலும், இந்தியாவின் திருச்சி உள்ளிட்ட சில நகரங்களுக்கான விமானப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒன்று தான்.
1970களின் இறுதியுடன் அத்தகைய பயணிகள் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. மீண்டும் இந்தியாவின் திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கான சேவைகள் தொடங்கப்பட்டால், அது வடக்கிலுள்ள மக்களின் பயணங்களை இலகுபடுத்தும் என்பதில் ஐயமில்லை.
அதனைத் தாண்டி, வேறு நாடுகளுக்கோ நகரங்களுக்கோ சேவைகளை மேற்கொள்ளும் வகையில், பலாலி விமான நிலையம் ஒரு சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெறுவதற்கு இப்போதைக்கு வாய்ப்புகள் அரிது.
மஹிந்த ராஜபக் ஷவினால், அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான, மத்தள விமான நிலையம், விமானங்களோ, பயணிகளோ வருகையின்றிக் கிடக்கிறது.
அதனால்தான் விமான நிலைய களஞ்சியத்தை நெல் களஞ்சியப்படுத்தவும் தற்போதைய அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது.
பெரிய துறைமுகம், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்கள், மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக வெளிநாட்டவர்கள் அதிகம் வரும் இடங்களுக்கு நெருக்கமாக இருந்தபோதும், மத்தள விமான நிலையத்துக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன.
இப்படியான நிலையில், அம்பாந்தோட்டைக்கு அருகில் உள்ளதைப் போன்று வெளிநாட்டவர்களைக் கவருகின்ற இடங்களையோ, வெளிநாட்டுப் பயணிகளின் வருகை வாய்ப்புகளையோ அதிகம் கொண்டிராத வடக்கில், ஒரு சர்வதேச விமான நிலையம் தாக்குப் பிடிக்க முடியுமா? என்ற சந்தேகங்கள் உள்ளன.
எனினும், பிராந்திய விமான நிலையமாக பலாலி விமான நிலையம் உருவெடுக்கும் வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.
பிராந்திய விமான நிலையமான பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உறுதி செய்திருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் நடந்த தைப்பொங்கல் விழாக் கொண்டாட்டங்களில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பலாலியில் பிராந்திய விமான நிலையம் ஒன்று உருவாக்கப்படுவது, வடக்கில் சுற்றுலா உள்ளிட்ட தொழில்கள் அதிகரிப்பதற்கும், வடக்கின் அபிவிருத்திக்கும் வழியமைக்கலாம்.
நாட்டின் பிற இடங்களுடன் ஒப்பிடுகையில், சுற்றுலா மற்றும் கைத்தொழில் துறைகளில் வடக்கு மாகாணம் பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறது.
போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் கைத்தொழில் துறைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், வடக்கு இன்னமும் கீழ்மட்டத்தில் தான் இருக்கிறது.
வடக்கில் சுற்றுலாத் தொழிலையோ கைத்தொழில் துறையையோ விரிவாக்கும் வகையில் உள்நாட்டு அல்லது வெளநாட்டு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டது மிகக்குறைவே.
பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கப்பட்டால், இந்த முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.
அதேவேளை, பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் திட்டத்துக்குப் பின்னால் சில வேண்டாத விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.
பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டம் தொடர்பாக முதலில் தகவல் வெளியிட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, இந்த திட்டத்துக்காக காணிகள் தேவைப்படும் என்றாலும், பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கான நிலத்தை, கடற்கரையோரத்தில் மண்ணை நிரப்பி பெற்றுக் கொள்ளும் யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
ஆனால், அவரது அந்தக் கருத்துக்கு முரணான வகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து அமைந்திருக்கிறது.
பலாலிப் படைத்தளத்தில், தைப்பொங்கல் நாளன்று நடத்தப்பட்ட உயர் மட்டப் பாதுகாப்பு மாநாட்டில், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை விடுவிக்குமாறு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முன்வைத்த கோரிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நிராகரிக்கப்பட்டதாக ஆங்கில வாரஇதழ் ஒன்று கடந்த வாரம் தகவல் வெளியிட்டிருந்தது.
அவ்வாறு அவர் நிராகரித்தமைக்கு கூறிய காரணம், பலாலி விமானப்படைத் தளத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கவுள்ளதால், அதன் பாதுகாப்புக்காக மயிலிட்டி துறைமுகத்தை விடுவிக்க முடியாது என்பதேயாகும்.
மயிலிட்டி துறைமுகப் பகுதியில் உள்ள காணிகள் விடுவிக்கப்படாது என்பதும் இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக உருவாக்கப்படுகிறதோ இல்லையோ அதனைக் காரணம் காட்டி தமிழர்களின் காணிகளை நிரந்தரமாக அபகரிப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன என்பதை இதன் மூலம் உறுதி செய்து கொள்ள முடிகிறது.
பலாலி விமான நிலைய ஓடுபாதைக்கு அருகில் இருப்பதால், விமானங்களை தரையிறங்கவும், மேற்கிளம்பவும், பயன்படுத்தக் கூடிய பகுதியாக இது இருக்கும் என்றும், அதனால் அந்தப் பகுதியை விடுவிக்க முடியாது என்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணவர்தன நியாயம் கூறியிருக்கிறார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக, கட்டுநாயக்க பகுதியில் உள்ள கடலேரியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதையும் அவர் நினைவுபடுத்தியிருக்கிறார்.
விமான நிலையங்கள் போன்றவற்றின் பாதுகாப்பு முக்கியமே என்றாலும், இலங்கையில் போர் முடிந்து 7 ஆண்டுகளாகி விட்டன. போருக்குப் பிந்திய வன்முறைகளோ ஆயுத மோதல்களோ எதுவும் இடம்பெறவில்லை.
ஆனாலும், இத்தகைய தடைகளும் பாதுகாப்பு வலயங்களும் அவசியமா என்பது குறித்து பாதுகாப்புத் தரப்பு மீளாய்வு செய்வதாகத் தெரியவில்லை.
விமான நிலையங்களின் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களின் வளங்களும், சுதந்திரமும் முடக்கப்படுவது எவ்வளவு காலம் தொடரப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது.
இது பலாலிக்கும் பொருந்தும் கட்டுநாயக்கவுக்கும் பொருந்தும்.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு ஆண்டாகியுள்ள நிலையில், தளர்த்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் இப்போது அதிகரிப்பதான ஒரு கருத்து வடக்கில் காணப்படுகிறது.
ஒரு பக்கத்தில் இராணுவ மயநீக்கம் வலியுறுத்தப்பட்டு வரும் சூழலில், இப்போதைய அரசாங்கம் அத்தகைய நிலையை ஊக்குவிக்கிறதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் வந்த போது இருந்ததை விட, இப்போது அவருக்கான பாதுகாப்பு என்ற பெயரில், மேற்கொள்ளப்படும் கெடுபிடிகள் அதிகம்.
தேசிய பொங்கல் விழாவுக்கு அவர் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குவிக்கப்பட்டிருந்த அதிகளவு படையினர் போர்க்காலத்தையே பொதுமக்களிடத்தில் நினைவுபடுத்தியிருந்தனர்.
அத்தகைய உணர்வை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தும் அளவுக்கு வடக்கிலோ இலங்கையின் வேறெந்த பகுதியிலோ பாதுகாப்பு நிலைமைகள் ஒன்றும் மோசமாகி விடவில்லை.
பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் நிகழ்வுகள் ஏதும் நடக்கவும் இல்லை.
இப்படிப்பட்ட நிலையில் தான், பலாலி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் திட்டம் குறித்தும் மக்கள் சந்தேகம் கொள்வது இயல்பு.
அதாவது, பலாலிப் படைத்தளப் பகுதி நிலங்களை தொடர்ந்தும் தமது வசம் வைத்திருப்பதற்கான ஒரு உத்தியாகவே பலாலியில் சர்வதேச விமான நிலையத்தை அமைக்கப் போவதான திட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்து தமிழ் மக்களின் கவனத்தை திசை திருப்ப முனைகிறதா என்ற கேள்விகள் இருக்கின்றன.
முப்பதாண்டுப் போர் தமிழ் மக்களின் பொருளாதாரத்தையும் வடக்கின் அபிவிருத்தியையும் பின்தள்ளி விட்டது.
அதிலிருந்து மீள்வதற்கு துரிதமான திட்டங்கள் அவசியம்.
அரசியல் தீர்வுக்கான முயற்சிகளுடன், அபி்விருத்திக்கான திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியம் வலுவாகவே உணரப்படுகிறது.
அபிவிருத்தி, முதலீட்டு வாய்ப்புகளை வடக்கில் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதால், வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகளும் அதனால் சமூக பிரச்சினைகளும் வடக்கில் தீவிரம் பெறத் தொடங்கியுள்ளன.
எனவே அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுப்பது அவசியம் என்ற போதும், அத்தகைய அபிவிருத்தித் திட்டங்கள், தமிழரின் நிலங்களை அபகரிப்பதற்கான அல்லது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கான கருவிகளாகி விடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
பலாலி விமான நிலைய விரிவாக்க விடயத்தில் நன்மை அதிகமா தீமைகள் அதிகமாக என்பதை ஆராயாமல் முடிவுகள் எடுக்கப்பட்டால், பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம்.
–சத்ரியன்-