பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக விரி­வாக்கம் செய்யும் திட்­ட­மொன்று தம்­மிடம் சமர்ப்பிக்கப்­பட்­டுள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராசா அண்மையில் கூறி­யி­ருந்தார்.

வடக்கில் இருப்­ப­வர்கள் வெளி­நாட்டுப் பயணம் எதனையும் மேற்­கொள்ள வேண்­டு­மாயின், கட்­டு­நா­யக்க விமான நிலையத்­துக்கே செல்ல வேண்­டிய நிலைமை காணப்­ப­டு­கி­றது.

வெளி­நா­டு­க­ளுடன் தமி­ழர்­க­ளுக்கு அதிக தொடர்­புகள் இருப்­பதால், வடக்கில் சர்­வ­தேச விமான நிலை­ய­மொன்றை அமைத்தால் அது பெரும் பய­னு­டை­ய­தாக இருக்கும் என்ற கருத்து நீண்­ட­கா­ல­மா­கவே தமி­ழர்­க­ளிடம் காணப்­ப­டு­கி­றது.

ஏற்­கெ­னவே, பலாலி விமான நிலையம் சர்­வ­தேச விமான நிலை­ய­மாக தொழிற்­ப­டாது விட்­டாலும், இந்­தி­யாவின் திருச்சி உள்­ளிட்ட சில நக­ரங்­க­ளுக்­கான விமானப் பய­ணங்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஒன்று தான்.

1970களின் இறு­தி­யுடன் அத்­த­கைய பய­ணிகள் சேவைகள் அனைத்தும் நிறுத்­தப்­பட்­டன. மீண்டும் இந்­தி­யாவின் திருச்சி, சென்னை உள்­ளிட்ட நக­ரங்­க­ளுக்­கான சேவைகள் தொடங்­கப்­பட்டால், அது வடக்­கி­லுள்ள மக்­களின் பய­ணங்­களை இல­கு­ப­டுத்தும் என்­பதில் ஐய­மில்லை.

அதனைத் தாண்டி, வேறு நாடு­க­ளுக்கோ நக­ரங்­க­ளுக்கோ சேவை­களை மேற்­கொள்ளும் வகையில், பலாலி விமான நிலையம் ஒரு சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்றம் பெறு­வ­தற்கு இப்­போ­தைக்கு வாய்ப்­புகள் அரிது.

மஹிந்த ராஜபக் ஷவினால், அம்­பாந்­தோட்­டையில் அமைக்­கப்­பட்ட இலங்­கையின் இரண்­டா­வது சர்­வ­தேச விமான நிலை­ய­மான, மத்­தள விமான நிலையம், விமா­னங்­களோ, பய­ணி­களோ வரு­கை­யின்றிக் கிடக்­கி­றது.

அத­னால்தான் விமான நிலைய களஞ்­சி­யத்தை நெல் களஞ்­சி­யப்­ப­டுத்­தவும் தற்­போ­தைய அர­சாங்கம் பயன்­ப­டுத்திக் கொண்­டது.

பெரிய துறை­முகம், சுற்­றுலாப் பய­ணி­களைக் கவரும் இடங்கள், மற்றும் அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளுக்­காக வெளிநாட்டவர்கள் அதிகம் வரும் இடங்­க­ளுக்கு நெருக்­க­மாக இருந்தபோதும், மத்­தள விமான நிலை­யத்­துக்­கான வாய்ப்­புகள் குறை­வா­கவே இருந்­தன.

இப்­ப­டி­யான நிலையில், அம்­பாந்­தோட்­டைக்கு அருகில் உள்­ளதைப் போன்று வெளி­நாட்­ட­வர்­களைக் கவ­ரு­கின்ற இடங்க­ளையோ, வெளி­நாட்டுப் பய­ணி­களின் வருகை வாய்ப்­பு­க­ளையோ அதிகம் கொண்­டி­ராத வடக்கில், ஒரு சர்­வ­தேச விமான நிலையம் தாக்குப் பிடிக்க முடி­யுமா? என்ற சந்­தே­கங்கள் உள்­ளன.

எனினும், பிராந்­திய விமான நிலை­ய­மாக பலாலி விமான நிலையம் உரு­வெ­டுக்கும் வாய்ப்­புகள் இருப்­பதை மறுப்பதற்கில்லை.

பிராந்­திய விமான நிலை­ய­மான பலாலி விமான நிலை­யத்தை விரி­வாக்கும் திட்டம் அர­சாங்­கத்­திடம் இருப்­பதை, பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் உறுதி செய்­தி­ருக்­கிறார்.

யாழ்ப்­பா­ணத்தில் நடந்த தைப்­பொங்கல் விழாக் கொண்­டாட்­டங்­களில் உரை­யாற்­றி­ய­போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பலா­லியில் பிராந்­திய விமான நிலையம் ஒன்று உரு­வாக்­கப்­ப­டு­வது, வடக்கில் சுற்­றுலா உள்­ளிட்ட தொழில்கள் அதிகரிப்­ப­தற்கும், வடக்கின் அபி­வி­ருத்­திக்கும் வழி­ய­மைக்­கலாம்.

நாட்டின் பிற இடங்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில், சுற்­றுலா மற்றும் கைத்­தொழில் துறை­களில் வடக்கு மாகாணம் பின்தங்கிய நிலையில் தான் இருக்­கி­றது.

போரினால் பாதிக்­கப்­பட்ட கிழக்கு மாகா­ணத்தில் சுற்­றுலா மற்றும் கைத்­தொழில் துறை­களில் முன்­னேற்­றங்கள் ஏற்பட்டி­ருந்­தாலும், வடக்கு இன்­னமும் கீழ்­மட்­டத்தில் தான் இருக்­கி­றது.

வடக்கில் சுற்­றுலாத் தொழி­லையோ கைத்­தொழில் துறை­யையோ விரி­வாக்கும் வகையில் உள்­நாட்டு அல்­லது வெளநாட்டு முத­லீ­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டது மிகக்­கு­றைவே.

பலாலி விமான நிலையம் பிராந்­திய விமான நிலையமாக விரி­வாக்­கப்­பட்டால், இந்த முத­லீட்டு வாய்ப்­பு­களை அதிகரிக்க முடியும்.

அதே­வேளை, பலாலி விமான நிலை­யத்தை பிராந்­திய விமான நிலை­ய­மாக விரி­வாக்கும் திட்­டத்­துக்குப் பின்னால் சில வேண்­டாத விளை­வு­க­ளையும் எதிர்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­ப­டலாம்.

பலாலி விமான நிலை­யத்தை விரி­வாக்கும் திட்டம் தொடர்­பாக முதலில் தகவல் வெளி­யிட்­டி­ருந்த பாரா­ளு­மன்ற உறுப்பினர் மாவை சேனா­தி­ராசா, இந்த திட்­டத்­துக்­காக காணிகள் தேவைப்­படும் என்­றாலும், பொது­மக்­களின் காணிகள் சுவீ­க­ரிப்­ப­தில்லை என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதற்­கான நிலத்தை, கடற்­க­ரை­யோ­ரத்தில் மண்ணை நிரப்பி பெற்றுக் கொள்ளும் யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி­யி­ருந்தார்.

ஆனால், அவ­ரது அந்தக் கருத்­துக்கு முர­ணான வகையில், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கருத்து அமைந்திருக்கிறது.

பலாலிப் படைத்­த­ளத்தில், தைப்­பொங்கல் நாளன்று நடத்­தப்­பட்ட உயர் மட்டப் பாது­காப்பு மாநாட்டில், மயி­லிட்டி மீன்பிடித் துறை­மு­கத்தை விடு­விக்­கு­மாறு இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் முன்­வைத்த கோரிக்கை பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தாக ஆங்­கில வார­இதழ் ஒன்று கடந்த வாரம் தகவல் வெளியிட்டி­ருந்­தது.

அவ்­வாறு அவர் நிரா­க­ரித்­த­மைக்கு கூறிய காரணம், பலாலி விமா­னப்­படைத் தளத்தை பிராந்­திய விமான நிலை­ய­மாக விரி­வாக்­க­வுள்­ளதால், அதன் பாது­காப்­புக்­காக மயி­லிட்டி துறை­மு­கத்தை விடு­விக்க முடி­யாது என்­ப­தே­யாகும்.

மயி­லிட்டி துறை­முகப் பகு­தியில் உள்ள காணிகள் விடு­விக்­கப்­ப­டாது என்­பதும் இதன் மூலம் உறு­தி­யா­கி­யுள்­ளது.

பலாலி விமான நிலையம் பிராந்­திய விமான நிலை­ய­மாக உரு­வாக்­கப்­ப­டு­கி­றதோ இல்­லையோ அதனைக் காரணம் காட்டி தமி­ழர்­களின் காணி­களை நிரந்­த­ர­மாக அப­க­ரிப்­ப­தற்கு முயற்­சிகள் நடக்­கின்­றன என்­பதை இதன் மூலம் உறுதி செய்து கொள்ள முடி­கி­றது.

பலாலி விமான நிலைய ஓடு­பா­தைக்கு அருகில் இருப்­பதால், விமா­னங்­களை தரை­யி­றங்­கவும், மேற்­கி­ளம்­பவும், பயன்ப­டுத்தக் கூடிய பகு­தி­யாக இது இருக்கும் என்றும், அதனால் அந்தப் பகு­தியை விடு­விக்க முடி­யாது என்றும் கடற்படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் ரவி விஜே­கு­ண­வர்­தன நியாயம் கூறி­யி­ருக்­கிறார்.

கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தின் பாது­காப்­புக்­காக, கட்­டு­நா­யக்க பகு­தியில் உள்ள கட­லே­ரியில் மீன்­பி­டிக்கத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தையும் அவர் நினை­வு­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

விமான நிலை­யங்கள் போன்­ற­வற்றின் பாது­காப்பு முக்­கி­யமே என்­றாலும், இலங்­கையில் போர் முடிந்து 7 ஆண்­டு­க­ளாகி விட்­டன. போருக்குப் பிந்­திய வன்­மு­றை­களோ ஆயுத மோதல்­களோ எதுவும் இடம்­பெ­ற­வில்லை.

ஆனாலும், இத்­த­கைய தடை­களும் பாது­காப்பு வல­யங்­களும் அவ­சி­யமா என்­பது குறித்து பாது­காப்புத் தரப்பு மீளாய்வு செய்­வ­தாகத் தெரி­ய­வில்லை.

விமான நிலை­யங்­களின் பாது­காப்பு என்ற பெயரில் பொது­மக்­களின் வளங்­களும், சுதந்­தி­ரமும் முடக்­கப்­ப­டு­வது எவ்வளவு காலம் தொடரப் போகி­றது என்ற கேள்வி இருக்­கி­றது.

இது பலா­லிக்கும் பொருந்தும் கட்­டு­நா­யக்­க­வுக்கும் பொருந்தும்.

தற்­போ­தைய அர­சாங்கம் பத­விக்கு வந்து ஒரு ஆண்­டா­கி­யுள்ள நிலையில், தளர்த்­தப்­பட்­டி­ருந்த பாது­காப்புக் கெடு­பி­டிகள் இப்­போது அதி­க­ரிப்­ப­தான ஒரு கருத்து வடக்கில் காணப்­ப­டு­கி­றது.

ஒரு பக்­கத்தில் இரா­ணுவ மய­நீக்கம் வலி­யு­றுத்­தப்­பட்டு வரும் சூழலில், இப்­போ­தைய அர­சாங்கம் அத்­த­கைய நிலையை ஊக்­கு­விக்­கி­றதோ என்ற சந்­தே­கத்தை மக்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆரம்­பத்தில் யாழ்ப்­பாணம் வந்த போது இருந்­ததை விட, இப்­போது அவ­ருக்­கான பாது­காப்பு என்ற பெயரில், மேற்­கொள்­ளப்­படும் கெடு­பி­டிகள் அதிகம்.

தேசிய பொங்கல் விழா­வுக்கு அவர் வரு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், குவிக்­கப்­பட்­டி­ருந்த அதி­க­ளவு படையினர் போர்க்­கா­லத்­தையே பொது­மக்­க­ளி­டத்தில் நினை­வு­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

அத்­த­கைய உணர்வை தமிழ் மக்­க­ளிடம் ஏற்­ப­டுத்தும் அள­வுக்கு வடக்­கிலோ இலங்­கையின் வேறெந்த பகு­தி­யிலோ பாது­காப்பு நிலை­மைகள் ஒன்றும் மோச­மாகி விட­வில்லை.

பாது­காப்­புக்கு குந்­தகம் ஏற்­படும் நிகழ்­வுகள் ஏதும் நடக்­கவும் இல்லை.

இப்­ப­டிப்­பட்ட நிலையில் தான், பலாலி விமான நிலை­யத்தை விரி­வாக்கம் செய்யும் திட்டம் குறித்தும் மக்கள் சந்­தேகம் கொள்­வது இயல்பு.

அதா­வது, பலாலிப் படைத்­தளப் பகுதி நிலங்­களை தொடர்ந்தும் தமது வசம் வைத்­தி­ருப்­ப­தற்­கான ஒரு உத்­தி­யா­கவே பலா­லியில் சர்­வ­தேச விமான நிலை­யத்தை அமைக்கப் போவ­தான திட்­டத்தை அர­சாங்கம் முன்­மொ­ழிந்து தமிழ் மக்களின் கவ­னத்தை திசை திருப்ப முனை­கி­றதா என்ற கேள்­விகள் இருக்­கின்­றன.

முப்­ப­தாண்டுப் போர் தமிழ் மக்­களின் பொரு­ளா­தா­ரத்­தையும் வடக்கின் அபிவிருத்தியையும் பின்தள்ளி விட்டது.

அதிலிருந்து மீள்வதற்கு துரிதமான திட்டங்கள் அவசியம்.

அரசியல் தீர்வுக்கான முயற்சிகளுடன், அபி்விருத்திக்கான திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியம் வலுவாகவே உணரப்படுகிறது.

அபிவிருத்தி, முதலீட்டு வாய்ப்புகளை வடக்கில் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதால், வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகளும் அதனால் சமூக பிரச்சினைகளும் வடக்கில் தீவிரம் பெறத் தொடங்கியுள்ளன.

எனவே அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுப்பது அவசியம் என்ற போதும், அத்தகைய அபிவிருத்தித் திட்டங்கள், தமிழரின் நிலங்களை அபகரிப்பதற்கான அல்லது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கான கருவிகளாகி விடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பலாலி விமான நிலைய விரிவாக்க விடயத்தில் நன்மை அதிகமா தீமைகள் அதிகமாக என்பதை ஆராயாமல் முடிவுகள் எடுக்கப்பட்டால், பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம்.

சத்­ரியன்-

Share.
Leave A Reply