ஔியிழந்த கண்களுடன் பிள்ளைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்காய்ப் போராடும் முன்னாள் போராளி

யுத்தத்தின் வடுக்களுடன் தினமும் போராடும் பலர் எம்மத்தியில் இருக்கின்றார்கள்.

இரு கண்களையும் இழந்தும், தன்னம்பிக்கையே இழக்காது வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றியைத் தேடுகிறார் கனசபை லவகுமாரன்.

மட்டக்களப்பு – அம்பிளாந்துறை பகுதியில் வசித்துவருகின்றார் இவர்.

முன்னாள் போராளியான கனசபை லவகுமாரன் 1995 ஆம் ஆண்டு யுத்தகளத்தில் இருகண்களையும் இழந்தார்.

கண்களை இழந்த இவருக்கு காதலியே மனைவியாக வாழ்வளித்தாள்.

மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தினை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தனது மனைவியே வழிநடத்துவதாக லவகுமாரன் குறிப்பிட்டார்.

ஜீவனோபாயத்திற்காக பெட்டிக்கடை ஒன்றினை நடத்தி குடும்பத்தினை வறுமையிலிருந்து மீட்கும் முயற்சியில் கணவன், மனைவி இருவரும் ஈடுபட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வாழங்கப்படுகின்ற 3000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவுடன், சில்லறைக் கடையில் கிடைக்கின்ற ஒரு சிறு வருமானமே குடும்பத்தினரின் பசியைப் போக்குகின்றது.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டினைக்கூட நிறைவு செய்ய முடியாத நிலையில் வாழ்கின்றனர்.

மூன்று பிள்ளைகளையும் சிறப்புறக் கற்பித்து அவர்களின் வாழ்வில் ஔியோற்ற வேண்டும் என்ற இலட்சியத்துடன் போராடி வருகின்றார் லவகுமாரன்.

தன் கண்கள் ஔியிழந்தாலும் பிள்ளைகளின் எதிர்காலம் பிரகாசிக்க வேண்டும் எனும் இந்தத் தந்தையின் பிரார்த்தனை ஈடேறவேண்டும்!

Share.
Leave A Reply