சிரியாவில், “இஸ்லாமிய தேசம்” என்ற ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் என்ன நடக்கிறது? நெதர்லாந்து புலனாய்வுத்துறையான AIVD, கடந்த ஒன்றரை வருடங்களாக ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

ஐரோப்பாவில் இருந்து ஐ.எஸ். இயக்கத்தில் சேரவேண்டுமென்ற அவாவுடன் செல்லும் இளைஞர்களுக்கு உண்மை நிலையை எடுத்து சொல்லி, அவர்களை சேர விடாமல் தடுப்பதே அந்த அறிக்கையின் நோக்கம்.

அந்த அறிக்கையில் இருந்து சில பகுதிகள்:

e84e96886
– ஐ.எஸ். பிரதேசத்தில் புதிதாக வரும் ஒவ்வொருவரும், தேசியத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதிக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும்.

– ஐரோப்பாவில் இருந்து செல்பவர்கள் தமக்கு அங்கே வசதியான வீடுகள் கிடைக்கும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஐ.எஸ். பரப்புரைகளுக்கு மாறாக, எந்த வசதியும் இல்லாத வீடு தான் கிடைக்கிறது.

அங்கிருக்கும் குப்பை, கூளங்களை அவர்களே அப்புறப் படுத்திக் கொள்ள வேண்டி இருக்கும். மேலும், சில மணி நேரமே மின்சாரம் கிடைக்கின்றது.

– ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள், உளவாளிகள் ஊடுருவலாம் என்ற அச்சம் பரவலாக உள்ளது. எல்லோரும் சந்தேகிக்கப் படுகின்றனர், கண்காணிக்கப் படுகின்றனர்.

உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் பலர் கைது செய்யப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அது மட்டுமல்ல அங்கிருந்து யாரும் தப்ப முடியாது. ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள் என்றாலும் மரணதண்டனையில் இருந்து விதிவிலக்கு கிடையாது.

– ஐ.எஸ். படையினர் யுத்தத்தில் ஒரு கிராமத்தை கைப்பற்றினால், அங்கு கொலைகள், சித்திரவதைகள்,பாலியல் வன்புணர்ச்சிகள் நடத்துவது சாதாரணமாக நடக்கிறது.

– ஐரோப்பாவில் இருந்து புதிதாக சேரும் ஒருவர், ஏற்கனவே ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் ஒருவரைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த நபர் பொறுப்பு நிற்க வேண்டும். புதிதாக சேருவோர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப் படுகின்றனர். மேலும் அவர்களின் பாஸ்போர்ட், அடையாள அட்டைகளை வாங்கி வைத்துக் கொள்வார்கள்.

– கல்வித் தகைமை கொண்டவர்களுக்கு உடனடியாகவே வேலை கிடைக்கிறது. உதாரணத்திற்கு, தொழில்நுட்ப பொறியியலாளர்கள், மருத்துவர்கள், பல்வேறு மொழிகளில் புலமை கொண்டவர்களுக்கு வேலை நிச்சயம். ஏனையோர் படைகளில் சேர்க்கப் படுகின்றனர்.

– குடும்பமாக பிள்ளைகளோடு செல்பவர்கள் கூட, ஆண்கள் வேறு, பெண்கள் வேறு என்று பிரித்து வைக்கப் படுகின்றனர். ஆண்கள் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு செல்ல வேண்டும்.

– பெண்கள் இராணுவ சேவையில் ஈடுபடுத்தப் படுவதில்லை. ஆனால், கலாச்சாரப் பொலிஸ் (அல் கண்சா படையணி) வேலைக்கு சேர்க்கிறார்கள். தெருக்களில், பொது இடங்களில், பெண்கள் ஐ.எஸ். கட்டுப்பாடுகளை பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிக்கும் பணி அவர்களுடையது.

– பிள்ளைகள் பாடசாலைக்கு அனுப்பப் பட்டாலும், அங்கு அவர்களுக்கு ஐ.எஸ். கொள்கைகளை கற்பிக்கிறார்கள். ஆயுதங்களை கையாள்வது எப்படி என்று சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். வருங்கால கணவனுக்கு என்னென்ன பணிவிடைகள் செய்ய வேண்டுமென்று சிறுமிகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.

– பெண் பிள்ளைகள் ஒன்பது வயதானால் உடலை மூடும் ஆடை அணியுமாறு நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். ஆண் பிள்ளைகள் ஒன்பது வயதானால், இலகுவான இராணுவ பயிற்சிக்கு அழைக்கப் படுகின்றனர். மேலும் பொது இடங்களில் நடக்கும் மரண தண்டனைக் காட்சிகளைப் பார்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.

– பெண்கள் அதிகமான பிள்ளைகளை பெறுவதற்கு ஊக்குவிக்கப் படுகின்றனர்.

– தனியாக வாழும் இளம் பெண்களும், விதவைகளும் பெண்கள் விடுதி ஒன்றுக்கு அனுப்பப் படுகின்றனர். அங்கு நிலவும் வசதிக் குறைபாடுகள் வாழ்க்கையை கடினமாக்குகின்றன.

ஊத்தை, குப்பை, கரப்பான் பூச்சிகள் ஊரும் இடங்களில் தங்க வைக்கப் படுகின்றனர். இந்தக் கஷ்டம் காரணமாக, பல பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர்.

போராளிக் கணவனை போரில் பலி கொடுத்த விதவைகள் கூட, இன்னொரு போராளியை மறுமணம் செய்கின்றனர். தமது குழந்தைகளின் தகப்பனை நினைத்துக் கவலைப் பட்டாலும் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்கிறார்கள்.

– குறைந்த தொகையாக இருந்தாலும், போராளிகளுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால், அண்மைக் காலத்தில் ஐ.எஸ். நடத்தி வந்த எண்ணைக் கடத்தல் வியாபாரம் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக, சம்பளம் ஒழுங்காக கொடுக்க முடிவதில்லை.

– ஐ.எஸ். பிரதேசத்தினுள் எந்த நேரமும் விமானக் குண்டு வீச்சு நடக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. பொது மக்கள் அடிக்கடி குண்டுவீச்சுகளுக்கு பலியானாலும், யாரும் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாது. இரகசியமாக தப்பியோடி பிடிபட்டால் மரண தண்டனை நிச்சயம்.

– மருத்துவ மனைகளில் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. வைத்தியர்களும் குறைவு. குறிப்பாக பெண் மருத்துவர்கள் மிக மிகக் குறைவாக இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப் படுகின்றனர். பிரசவம் பாரசவம் பார்ப்பதற்கு மருத்துவர்களோ, தாதியரோ இல்லாத நிலையில் சிசு மரணவீதம் அதிகமாக உள்ளது.

Share.
Leave A Reply