பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தும்படி, ஹோமகம நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு ஹோமகம நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது அங்கு வந்த ஞானசார தேரர், சந்தியா எக்னெலிகொடவை தகாத முறையில் திட்டியதுடன், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் அதன் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டார்.
இந்த விடயம் நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, ஞானசார தேரரை மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்தமை, நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை, கெட்ட வார்த்தைகளால் நீதிமன்ற அதிகாரிகளை திட்டியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளும் ஞானசார தேரர் மீது சுமத்தப்பட்டுள்ளன.