இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம விபூஷன் விருது, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் தொடர்பான அறிவிப்பு இன்று திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. பத்ம விபூஷன் விருது பெறுவோர் பட்டியலில், நடிகர் ரஜினிகாந்த், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஜக்மோகன், தொழிலதிபர் மற்றும் பத்திரிகையாளர் ராமோஜி ராவ், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், முன்னாள் இந்திய கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய், குச்சிப்புடி நடனக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான மறைந்த திருபாய் அம்பானி, அடையார் கான்சர் இன்ஸ்டியூட்டின் தலைவர் டாக்டர் வி, சாந்தா உள்ளிட்டோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அதற்கு அடுத்தப்படியான பத்ம பூஷன் விருது பட்டியலில், நடிகர் அனுபம் கேர், இந்திய விளையாட்டு வீராங்கனைகளான சானியா மிர்சா மற்றும் சய்னா நெஹ்வால் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலுல் இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் டி பிளாக்வெல் மற்றும் டைம்ஸ் குழுமத்தின் தலைவர் இந்து ஜெயின் ஆகியோர் பெயரும் பத்ம பூஷன் விருதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
நடிகர் அஜய் தேவ்கான், நடிகை பிரியங்கா சோப்ரா, மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் ஆஜாராகி வாதாடிய வழக்கறிஞர் உஜ்ஜல் நிக்கம் உள்ளிட்டோரது பெயர்கள் பத்ம ஸ்ரீ விருது பெறுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.