கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ்களில் பெரும்பாலானவை சீனத்தயாரிப்புக்களாகும். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு பஸ்களே பெரும்பாலும் இலங்கையில் பாவனையில் உள்ளது.
இந்தியன் கம்பனிகளால் உருவாக்கப்படும் பஸ்களை விட சீன பஸ்கள் கவர்ச்சிகரமானதாகவும் சொகுசான ஆசன அமைப்பு மற்றும் தரமான கட்டுமானம் போன்றவற்றால் அவற்றை விரும்புகின்றனர் பேரூந்து முதலாளிகள்.
பேரூந்துகளை வாங்கும் முதலாளிகளுக்கு பஸ்களை விற்பனை செய்வதில் இந்திய, சீன பஸ் கம்பனிகள் கடும் பிரயத்தனங்களைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான கம்பனிகளின் போட்டித் தன்மையை தனக்கு வரப்பிரசாதமாக ஆக்கிக் கொண்டார் பிரபல தமிழ் வர்த்தகர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பயணிகள் சேவையில் ஈடுபடும் சொகுசு பேரூந்துகள் பயணிகளிடமிருந்து 1300 ரூபா கட்டணமாக அறவிடுகின்றன.
ஒரு பேரூந்தில் 50 பயணிகள் பயணம் செய்தால் ஒரு வழிக்கட்டணமாக அந்தப் பேரூந்துக்கு 65 ஆயிரம் ரூபா வருமானத்தை பேரூந்து முதலாளி பெறுகின்றார்.
எரிபொருள், சாரதி. பேரூந்துத் தேய்மானங்கள் என்பவற்றைக் கழித்து விட்டு தேறிய லாபமாக ஒரு வழிப் பிரயாணத்தில் 8 மணித்தியாலத்தில் 40 ஆயிரம் ரூபா கிடைக்கின்றது பஸ் முதலாளிக்கு.
இப்படி இலாபம் பெற்றாலும் பேரூந்து முதலாளிகளுக்கு ஆசை அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பச்சைத் தண்ணியில் பலகாரம் சுடும் நமது தமிழ் முதலாளிகளின் குணம் தெரியாது இவ்வாறான பேரூந்து வைத்திருக்கும் முதலாளியை ஒரு சீன பஸ் கம்பனி தனது பஸ்சை விற்பனை செய்வதற்காக அணுகியுள்ளது.
முதலாளிக்கு உடனடியாக குறுக்கு மூளை வேலை செய்யத் தொடங்கியது. தன்னிடம் வந்த கம்பனி தொழில்நுட்பவியலாளர்களிடம் ‘உங்களது பேரூந்தை பரீட்சாத்த ஓட்டம் ஒன்றை ஓடிப் பார்த்த பின் வாங்குவது பற்றி யோசிக்கின்றேன்.
இது உங்களுக்கு சம்மதமா?‘ என கேட்டுள்ளார் முதலாளி. அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டும். அதுவும் பயணிகளை நிரம்ப ஏற்றிச் செல்ல வேண்டும். அதன் பின்னர் பயணிகளிடம் கருத்துக் கேட்டு அவர்கள் சொல்வதை வைத்து குறித்த பேரூந்தை வாங்குவது பற்றி சிந்திப்பேன்‘ என்றுள்ளார் முதலாளி. பேரூந்து கம்பனி தொழில்நுட்பவியலாளர்கள் முதலில் அதற்கு தயக்கம் காட்டினர்.
‘கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு குறைந்தது 20 ஆயிரம் ரூபா பெறுமதியான டீசல் தேவை. பரீட்சார்த்த ஓட்டமாக ஆகக் கூடியது 50கி.மீ ஓட்டிக் காட்டலாம்.
ஆனால் முதலாளி 500கி.மீ ஓட்டிக் காட்டச் சொல்கிறாரே‘ என தயங்கினர். இருந்தும் நீண்ட நேர ஆலோசனையின் பின்னர் அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
பரீட்சாத்த ஓட்டம் ஓட வந்த பஸ்சில் தனது பேரூந்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை ஏற்றி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் கொண்டு சென்றுள்ளார் முதலாளி.
அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்தும் கொழும்புக்கு பயணிகளைக் கொண்டு சென்றுள்ளார். இதனால் எந்தவித செலவும் இல்லாது சீனக்காரனின் முதுகில் சவாரி செய்து 1 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவை 24 மணித்தியாலத்தில் பெற்றுவிட்டார் குறித்த முதலாளி.
ஆனால் பேரூந்தை அவர் வாங்கவில்லை. சீனக் கம்பனி தொழில்நுட்பவியலாளர்கள் இதனால் பெரும் விசனம் அடைந்தாலும் பின்னர் முதலாளியின் செய்கை பற்றி அவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை.
கடந்த 30 வருடங்களுக்கு மேல் நடைபெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்களின் முதுகில் ஏறிச் சவாரி புரிந்த இவ்வாறான வர்த்தகர்களைச் சாரும்.
இவ்வாறான ஏமாற்று வேலைகளைச் செய்து பணம் சம்பாதிப்பதிலும் அடுத்தவன் முதுகில் குத்தி அவனைக் கவிழ்த்து முன்னேறுவதிலுமே தமிழர்கள் இருக்கின்றார்களே தவிர தனது தீவிர உழைப்பால் முன்னேறுவதில் அவர்கள் அக்கறை கொள்ளவில்லை.
ஆனால் தமிழனாகிய நாம் என்ன செய்கின்றோம். இலங்கைத் தமிழ்த் தலைமைகளில் ஒரு பகுதியினர் தமிழ்த்தேசியத்தை வைத்துப் பிழைப்பு நடாத்துவதும் மறு பகுதியினர் அதற்கு எதிராக அரசியல் நடாத்தி பிழைப்பு நடாத்துவதும் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் சினிமாவை நினைத்து வாழ்வதும் அந்த நடிகர்களேயே தலைவர்களாக்கி மகிழ்வதுமான கேவலங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறன.
அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் கள்ளமட்டை அடிப்பதும், மோசடிகள் செய்வதுமாக வெள்ளைக்காரர்களின் வைரசாக உருவாகியிருக்கின்றார்கள்.
இவ்வாறு தமிழர்கள் தொழிற்பட்டுக் கொண்டிருந்தால் இறுதியில் தமிழர்கள் என்ற இனமே இல்லாது போய்விடும்.