“நடிகன்” படத்தில் வயோதிகர், இளைஞன் என 2 வேடங்களிலும் மாறி மாறி வரும் சத்யராஜ், வயோதிக தோற்றத்தில் நடிகை மனோரமாவின் ஜோடியாக நடித்தார்.
“நடிகன்” படத்தில் கிடைத்த அனுபவங்கள் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-
“நடிகன் படத்தில் இளைஞனான நான் வயோதிக தோற்றத்துக்கும் மாறி, காமெடி பண்ணுவேன்.
இளைஞன் வேடத்தில் எனக்கு ஜோடியாக குஷ்பு நடிக்க முடிவாயிற்று. “சின்னத்தம்பி” படத்துக்குப் பிறகு குஷ்பு ரொம்பவும் புகழ் பெற்று விளங்கினார். இந்த வகையில், குஷ்பு என்னுடன் ஜோடி சேர்ந்த முதல் படமும் இதுதான்.
ஆனால் வயதான கெட்டப்புக்குத்தான் யாரை ஜோடியாகப் போடுவது என்று தீவிரமாக பரிசீலனை நடந்தது. சீனியர் நடிகைகளில் ரசிகர்களிடம் பிரபலமாக பேசப்பட்ட வைஜயந்திமாலா, பத்மினி, சரோஜாதேவி, ஷீலா ஆகியோரில் யார் என்னுடன் முதிய கேரக்டருக்கு சரியாக இருப்பார்கள் என்று பரிசீலனை தொடர்ந்தது.
ஆனால், இவர்களெல்லாம் தங்கள் தனித்துவ நடிப்பால் சாதித்தவர்கள். காமெடிப் படத்தில் எனது ஜோடியாக இவர்களில் யாரைப் போட்டாலும் கதையின் காமெடித்தன்மை விலகிப் போக வாய்ப்பு உண்டு என்பது பலருடைய கருத்தாக இருந்தது.
முடிவில் நடிப்பில் காமெடி சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருக்கும் மனோரமா ஆச்சியை போடலாம் என்று முடிவு செய்தார்கள். எனக்கும் இந்த யோசனை சரியாகப்பட்டது.
மனோரமா ஆச்சி காமெடியில் கரை கண்டவர். அவர் நடிகர் திலகம் சிவாஜியுடன் ஜோடி சேர்ந்த ஒரே படமான “ஞானப் பறவை”யில் கூட காமெடி செய்யவில்லை. குணசித்ரமாகவே மின்னினார். அதற்குப் பிறகு ஆச்சியுடன் ஜோடி சேர வாய்ப்புக் கிடைத்த ஒரே ஹீரோ
காட்சியை டைரக்டர் பி.வாசு விளக்கிக் சொல்லும்போதே எங்களுக்கு சிரிப்பு பிய்த்துக் கொள்ளும். அதிலும் கவுண்டமணி அண்ணன் காமெடியில் ரகளையே பண்ணினார்.
நான் குஷ்புவை கதைப்படி ஏற்கனவே பார்த்திருந்தாலும், அப்போதுதான் பார்ப்பது போல காதல் பார்வை பார்ப்பேன்.
இந்தக் காட்சியில் கவுண்டமணி அண்ணன் நடிக்கும்போது, “அடேய்! அடேய்! அது எப்படிடா உன் முகத்தை இப்படி குழந்தையாட்டம் மாத்திக்கிடறே? இந்த மூஞ்சை இப்பத்தான் பார்க்கிறேன்னு சொல்றியே, அது எப்படிடா?
நான் இதுக்கு முன்னாடி கேப்மாரி, மொள்ளமாரி, முடிச்சவிக்கி அப்படீன்னு பல பேரை பார்த்திருக்கிறேன். ஆனா இவனுங்க அத்தனை பேரையும் மொத்தமா உன் முகத்துல தாண்டா பார்க்கிறேன்” என்று சொல்லும்போது டைரக்டர் உட்பட அத்தனை பேருமே சிரித்து விட்டோம்.
முதலில், இந்த `கேப்மாரி’ வசனத்தைப் பேச கவுண்டமணி அண்ணன் மறுத்து விட்டார். நான் அவரிடம், “அண்ணே! இது நீங்கள் என்னைப் பார்த்தா பேசுகிறீர்கள்? நான் நடிக்கிற கேரக்டரை பார்த்து பேசுவதாக நினைத்துக் கொள்ளுங்கள்.
அப்படியே நீங்கள் திட்டுவதாக வருகிற அந்த பாராட்டு முழுக்க என் நடிப்புக்கு கொடுக்கிற கிரடிட் மாதிரி தானே” என்றேன். அதன்பிறகே அந்த வசனத்தை பேசி நடித்தார்.
ஒரு முறை `நடிகன்’ படத்தின் படப்பிடிப்பை பார்க்க நடிகை சாரதா வந்திருந்தார். நாங்கள் நடித்த பல காட்சிகளை பார்த்து விட்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தார்.
நடிப்புக்காக 3 முறை தேசிய விருது பெற்ற நடிகை, அவரே சிரிக்கும்போது, எங்களால் மட்டும் எப்படி சிரிப்பை அடக்க முடியும்! பல காட்சிகளில் வசனம் பேசும் போதே சிரித்து விடுவோம்.
மூன்று பேர் நடிக்கிற ஒரு காட்சியில் இப்படி மாற்றி மாற்றி மூன்று பேருமே சிரித்து வைத்தால் என்னாகும்? இப்படி ஒரு காட்சிக்கு 10 டேக் வரை எடுத்தார், டைரக்டர் பி.வாசு. அவரும் சிரித்துக் கொண்டேதான் காட்சிகளை இயக்கினார் என்பது இதில் கூடுதலான தகவல்.
படத்தின் பெரும்பகுதிக் காட்சிகளின் படப்பிடிப்பு ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்தான் நடந்தது. அங்கே படப்பிடிப்பு நடத்த நாள் வாடகையெல்லாம் கிடையாது.
மணி வாடகை. அதாவது ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு வாடகை என்று ஒரு பெரிய தொகையை நிர்ணயித்து இருந்தார்கள். ஆனாலும் தயாரிப்பாளர் ராமநாதன் செலவை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.
இந்தியில் நடிகர் ஷம்மி கபூர் நடித்த `புரொபசர்’ என்ற படத்தை தழுவிதான் இந்தப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.
என்றாலும் இந்தியை விட தமிழ்ப்படம் நன்றாக ஓடியது. காமெடிக் காட்சிகளுடன், இளையராஜாவின் பாடல்களும் “நடிகன்” வெற்றிக்கு காரணமாய்அமைந்தன.
படத்தின் வெற்றி விழாவில் கமலஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “படத்தில் இரண்டு குளுமையான விஷயங்கள், ஒன்று: கொடைக்கானல். அடுத்தது: குஷ்பு” என்று சொல்லி கைதட்டல் வாங்கினார்.
`நடிகன்‘ படத்தின் வெற்றிச் சூட்டோடு எனக்கு அமைந்த படம் `மல்லுவேட்டி மைனர்’, முதல் வசந்தம் படத்தில் கதை எழுதி என்னை அந்தப்படத்தின் மூலம் `குங்குமப் பொட்டு கவுண்டராக’ திரை அறியச் செய்த கலைமணி, இந்தப்படத்தின் கதை வசனத்துடன் தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றிருந்தார்.
மனோபாலா டைரக்டு செய்தார். மைனர், குடும்பத் தலைவன் என இரண்டு மாறுபட்ட கேரக்டர்களில் நான் நடித்தேன். நடிகை ஷோபனாவும், சீதாவும் என் ஜோடியாக நடித்தார்கள். பி.ஆர்.விஜயலட்சுமி கேமராவை வித்தியாசமான கோணங்களில் கையாண்டர்.
முழுப்படத்தையும் 35 நாட்களில் எடுத்து முடித்து விட்டார், மனோபாலா. இதுவும் வெற்றிப்படமானது. மனோபாலா பற்றி சொல்லும்போது, “ஆலிவுட்டில் புகழ் பெற்ற `பென்ஹர்’ படத்தைக் கூட 40 நாளில் எடுத்து முடித்து விடுவார்” என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு டைரக்ஷனில் வேகமானவர் மனோபாலா.
இந்தப்படத்தில் எனக்கும் ஷோபனாவுக்கும் ஒரு போட்டி நடனம் வருகிற மாதிரி காட்சி இருந்தது. கதை சொல்லும்போதே அதைச் சொல்லி விட்டார்கள் என்றாலும், நடனத்துக்கென்றே பிறந்த ஷோபனா எங்கே… நடனமே தெரியாமல் நடிக்க வந்த நானெங்கே?
போகப்போக சினிமாவுக்கேற்ற நடனங்களை, மாஸ்டர்கள் கற்றுத் தருவதை வைத்து ஆடிக் கொண்டிருந்தேன். அதாவது ஓரளவுக்கு நடனத்தில் தேர்ந்திருந்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இதில் பெரிய கூத்து, இந்த நடனப் போட்டியில் நான்தான் ஷோபனாவை ஜெயிக்கிறேன்! மல்லு வேட்டியை மடித்துக் கட்டியபடி `அடிவாடி’ என்று நான் பாடுகிற பாடல் கூட இளையராஜா இசையில் தயாராகி விட்டது.
படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது. ஷோபனாவுக்கும் எனக்குமான நடன போட்டியை படமாக்கும் நாள் நெருங்க நெருங்க, என் மனம் `திக்..திக்..’ என்று அடித்துக் கொண்டது.
கோபியில் உள்ள எமரால்டு ஓட்டலில் தான் படப்பிடிப்பு குழுவினர் தங்கியிருந்தோம். நான் டான்ஸ் மாஸ்டர் புலிïர் சரோஜாவிடம், “என்ன மாஸ்டர்! நான் ஷோபனாவை நடனப் போட்டியில் ஜெயிக்க வேண்டும்! இது எப்படி முடியும்?” என்றேன்.
அவரோ, “கவலைப்படாதீங்க. டான்ஸ் எடுக்கிறதுக்கு மூணு நாளைக்கு முன்னாடியே உங்களுக்கு ஸ்பெஷல் டிரெயினிங் கொடுத்து விடுகிறேன்” என்றார்.
சொன்னது போலவே ஓட்டலின் மொட்டை மாடியில் பயிற்சி கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்தபின், இரவு வேளையில் முட்டி பெயர்ந்து போகும் அளவுக்கு நடனப் பயிற்சி கொடுத்தார்!
நடனப் போட்டி படமாக்கப்படும் நாளும் வந்தது. கோபியில் உள்ள பாரிïர் கோவில் முன்பாக பக்தர்கள் நடுவில் இந்த நடனக் காட்சியை எடுத்தார்கள்.
படப்பிடிப்புக்கு வந்ததும் என்னைப் பார்த்து சிரித்தபடியே தலையில் அடித்துக் கொண்ட ஷோபனா, “பாருங்க சார்! உங்ககிட்ட நடனமாடி நான் தோற்கிற மாதிரி ஆகப் போகுதே!” என்றார்.
நான் அவரிடம், “உங்க அத்தை பத்மினி நாட்டியப் பேரொளின்னு பட்டம் வாங்கினவங்க. அவங்க புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருடன் நடித்த `மன்னாதி மன்னன்’ படத்தில் நடனப் போட்டியில் தோற்கிற மாதிரி தானே நடித்தார்கள்” என்றேன். பதிலுக்கு அவர், “எம்.ஜி.ஆரும் நீங்களும் ஒன்றா?” என்று கிண்டலை தொடர்ந்தார்.
இதெல்லாம் காமிரா முன் நிற்கிற வரைதான். நடனப் போட்டி ஆரம் பமானபோது, ஏற்கனவே நடனத்தில் மிகத் திறமைசாலியான ஷோபனா அற்புதமாக ஆட, நான் புலிïர் சரோஜா மாஸ்டரின் கடினப் பயிற்சியில் பெற்ற அனுபவத்தில் ஆடினேன்.
இந்த போட்டி நடனக் காட்சியை கொளுத்தும் வெயிலில் எடுத்தார்கள். வெறும்காலில்தான் ஆட வேண்டும். அப்படி ஆடினால் பாதம் வெந்து போகும். அதனால் பிளாஸ்டரை கட் பண்ணி, காலில் கட்டிக் கொண்டு ஆடினேன். இப்படி ஆடும்போது இரண்டு வசதி. ஒன்று: காலில் வெயில் சூடு ஏறாது. அடுத்தது: வெறும் காலுடன் ஆடியது போலவே தெரியும்.
நடனக் காட்சி சிறப்பாக அமைந்தது! அதைவிடச் சிறப்பு, காட்சி படமாக்கி முடிந்ததும் நடனத்தில் மேதையான ஷோபனா என்னை என் `ஆட்டத்துக்காக’ பாராட்டியது தான்!”
தொடரும்..