தமிழ் மக்கள் தங்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தமிழ் அரசியல் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற பிரதான மூன்று கட்சிகளினூடாக போராடியிருக்கின்றனர்.
தமிழ்க் கூட்டமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ,குறைபாடுகள் முன்வைக்கப்பட்டாலும், மக்களின் ஏகபிரதிநிதிகளாகவும், மக்களின் ஆதரவு பெற்றதும் தமிழ் மக்களின் சுயநிர்ணம் பற்றிய அரசியல் விடயங்களில் நேரடிக் களம் இறங்கிக் கொண்டிருப்பதும் தமிழ் கூட்டமைப்பேயாகும்.
தந்தை செல்வா தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைகளைக் கோரி அஹிம்சை வழிப் பயணம் மேற்கொண்டார். போராட்டங்கள் எல்லாம் உடனடியாக பயன் தராது போனாலும் பேரினவாத அரசுக்கு தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிய நடவடிக்கைகளை அவர் மரணிக்கும் வரைக்கும் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் முன்னெடுத்து வந்தார்.
இதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளளை அமிர்தலிங்கம் தலைவராக இருந்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கப் பாடுபட்டார்.
இவர் 1977 ஆம் ஆண்டு அப்போதை அரச தலைவராக இருந்த ஜே. ஆர். ஜெயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தும் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தை பெற முடியாது போனதால் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
1976 இல் வட்டுக்கோட்டை மகாநாட்டில் தந்தை செல்வா தலைமையில் நிறைவேற்றப்பட்ட தனித் தமிழ் ஈழம் என்ற தீர்மானமானது தமிழ் மக்களின் விடுதலை உணர்வை மேலும் உற்சாகப்படுத்தி அவர்களுக்கு தனிநாட்டுக்காக போராடும் உத்தியைக் கொடுத்தது.
இதன் பின்னணியைத் தொடந்து தமிழ்த் தரப்பினர் அரசுக்கு எதிராகப் போராடி வந்த அஹிம்சை வழியினை விடுத்து ஆயுத ரீதியான போராட்டத்தை ஆரம்பித்தனர்.
ஆனால் அந்தப் போராட்டம் 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்தது. தற்போது தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாகவும் தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் உள்ளது எனலாம்.
தமிழர் தரப்பின் ஆயுதப் போராட்டத்தின் போது புலிகளின் கெடுபிடிக்கும் அரசாங்கப் படைகளின் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் வயதான பருவத்திலும் தளராமலும் மனம் அஞ்சாமலும் செயற்படும் தலைவராகவும் தமிழ் மக்களின் குரலாகவும் இன்று உள்ளவர் இரா. சம்பந்தன் ஆவார்.
சில விமர்சனங்கள் வருகின்றன. அவற்றைத் தவிர்க்க முடியாது. சில குறைபாடுகள் இருக்கலாம். உச்சக்கட்ட யுத்தத்தின் போது இன்றைய வடக்கு முதலமைச்சர் கொழும்பில் தான் இருந்தார்.
உயிர்தப்பி ஓடியவர்கள் தான் புலம் பெயர் தமிழர்கள். அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பவர்களாக இன்று தங்களைக் காண்பித்துக் கொள்கின்றனர்.
சகல தேசத்திற்கும் தமிழர்களின் பிரச்சினையைக் கொண்டு சென்றவர்கள் புலிகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டணியினர்.
அத்துடன் புலம் பெயர் தமிழர்கள் போன்றவர்கள் மூலமாகத் தான் இன்று சர்வதேசத்திற்கு இந்தப் பிரச்சினை போயுள்ளது.
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மட்டும் தான் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர தமிழர்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் இன்றும் ஓயவில்லை.
காரணம் அஹிம்சைப் போராட்டம் ,ஆயுதப் போராட்டம் எல்லாம் தமிழர்களின் அரசியல் உரிமைக்காக மேற்கொள்ளப்பட்டவையே ஆகும்.
இன்று சர்வதேசம் தமிழர்களின் போராட்டத்தில் கூறப்பட்ட விடயங்களை , உரிமையை தமிழ் மக்களுக்கு வழங்கும்படி ஆயுதப் போராட்டக்காரர்கள் இல்லாத சமயத்தில் கூட அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆயுதப் போராட்டத்தின் விளைவாக உருவான சூழ்நிலையே இதுவாகும்.
இக்கோரிக்கையை வென்றெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே உண்டு. தமிழ் மக்களில் 95 வீதமானோர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களிக்கின்ற இன்றைய சூழ்நிலையில் மக்கள் பேரவை ஆற்றப் போகும் காரியம் எதுவுமில்லை. பாராளுமன்றம் செல்வதே அவர்களது இலக்காக இருக்கலாம்.
95 வீதமான மக்கள் தமிழ்க் கூட்டமைப்புடன் இருக்கின்ற போது பேரவை சாதிக்கப் போவது என்ன? தமிழ் மக்களின் பலத்தை சிதறடிக்கச் செய்யும் கருமம் என்பதிலும் எமக்கு நம்பிக்கை இல்லை.
தமிழ்க் கூட்டமைப்பே விக்னேஸ்வரனை வட மாகாணத்திற்கு முதல்வராக்கியது. தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவாளர்களே அவருக்கு வாக்களித்தார்கள்.
இவ்வாறான நிலையில் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
கடந்த பொதுத் தேர்தலின் போது தமிழ்க் கூட்டமைக்கு எதிராக கஜேந்திரகுமார் தனது கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட போது தமிழ்க் கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்பட வேண்டிய விக்னேஸ்வரன் நடுநிலைமை வகிப்பதாகக் கூறிக் கொண்டார். எனினும் தமிழ் மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளித்து கூட்டமைப்பை வெற்றி பெற வைத்தனர்.
சைக்கிள் சின்னக்காரருக்கு அந்த சைக்கிள் கம்பிகளின் எண்ணிக்கை அளவே வாக்குகள் கிடைத்ததாக மக்கள் பரிகாசம் செய்தனர். இப்போது இந்தக் கட்சிக்காரர்களையும் அரவணைத்துக் கொண்டு மக்கள் பேரவையை வடக்கு முதலமைச்சர் அமைத்துள்ளார்.
தந்தை செல்வா தமிழரசுக் கட்சி ஊடாக தமிழ் மக்களுக்கென முன்வைத்த சமஷ்டி, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எல்லாம் பேரினவாதம் அலட்சியம் செய்தது.
அமிர்தலிங்கம் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த போது தான் பயங்கரவாதத் தடைச் சட்டம், ஆறாவது திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்து பிரிவினை கோருபவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க முடியாது ,ஒற்றையாட்சி தான் என்று சத்தியப் பிரமாணம் செய்யவேண்டும் என்று அரசு கூறியது.
2009 இல் யுத்தம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றவுடன் தமிழர்களின் உரிமைகள் இனிமேல் வழங்கப்பட மாட்டாது என்று அன்றைய அரசு முடிவு செய்தது.
தமிழர்களுக்கு எந்த விதமான தீர்வும் வழங்கக் கூடாது என்பதற்காகவே வடக்கிலிருந்து கிழக்கு மாகாணத்தைப் பிரித்தார்கள். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்.
அப்படி இருந்த போதிலும் தமிழ் மக்களுக்கு கடைசியில் மிஞ்சிய ஆயுதம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் தான். தமிழ்க் கூட்டமைப்பை மாத்திரம்தான் இன்றும் அரசாங்கத்தால் பேரினவாதிகளால் உடைக்க முடியாமல் உள்ளது.
ஒன்றுபட்டு ஒரு அமைப்பாக தமிழரின் குரலை வெளிப்படுத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வது மட்டும் தான் இப்போதுள்ள தெரிவு ஆகும். அதற்கான பணிகளை தமிழ்த் தரப்பு இரண்டுபட்டு நின்று முன்னெடுக்க முடியாது.
புதிய தமிழர் பேரவையைக் கண்டு அஞ்சுகிறதோ என்று சிங்கள அரசியல் சக்திகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை குறைத்து மதிப்பிடும் ஆபத்து இருப்பதையும் மறுக்க முடியாது.
யூ. எல். ஏ. கபூர் ஜின்னா