குருவிட்ட, பரடைஸ் பிரதேசத்தில் நடாத்திச் சென்ற சீட்டாட்டம் விளையாடும் இடமொன்றை சுற்றி வளைத்ததில், அங்கு சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த ஆறு பேரில் நால்வர் பெண்கள் எனவும் ஏனைய இருவர் ஆண்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சீட்டாட்டம் வெகுநாட்களாக இரகசியமாக இடம்பெற்று வந்துள்ளதோடு, குறித்த பெண்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய பின்னர் குறித்த இடத்தில், சீட்டாட்டத்தில் ஈடுபடும் வழக்கத்தைக் கொண்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்களில் ஒருவர் திருமணமாகாதவர் எனவும், அவர் அன்றைய தினம் பகல் வரை ரூபா 75 ஆயிரத்தை சீட்டாடத்தில் இழந்திருந்ததாகவும், அன்றைய தினம் பெறப்பட்ட சீட்டாட்டத் தொகை ரூபா 10 இலட்சம் எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சீட்டாட்டத்தை நடாத்திச் சென்ற வீட்டு உரிமையாளரான பெண், அப்பிரதேசத்தை விட்டு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதோடு, பொலிஸார் இது குறித்தான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் குருவிட்ட, தெவிபஹல மற்றும் பரடைஸ் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். குறித்த ஆறு பேரும் இரத்தினபுரி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒவ்வொருவரையும் தலா 25 மணித்தியாலங்கள் சமூகசேவையில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது..