இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களை கிராமங்கள் வரை கொண்டு சென்றதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினர் கூறிக்கொண்ட போதிலும் அந்த அபிவிருத்திகள் பல கிராமங்களை சென்று சேரவில்லை என்பதே உண்மையானது என தெரியவருகிறது.
வட, கிழக்கு பகுதிகளில் மாத்திரமல்ல தென் பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் அடிப்படையான உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேற்கொள்ளப்படாத நிலைமையை காணமுடிகிறது.
இதற்கு மாத்தளை மாவட்டத்தில் உள்ள கலேவல பள்ளயாய கிராம் ஒரு உதாரணமாகும். இந்த கிராமத்து மக்கள் ஊரை கடந்து செல்ல ஆற்றை கடக்க பாலம் ஒன்றில்லாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கிராமத்தில் மரணங்கள் ஏற்படும் போது உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்வதிலும் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன் ஆற்றை கடந்தே சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
பாலம் இல்லாத காரணத்தினால், கிராமத்தில் வாழும் சுமார் 50 குடும்பங்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால், தற்போதைய அரசாங்கம் தமது கிராமத்தின் அடிப்படை தேவையான இந்த பாலத்தை நிர்மாணித்து தரும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.