ஆமதாபாத்: குஜராத்தில் திருமணத்தின் போது மணமேடைக்கு புல்லட் பைக்கில் வந்து உறவினர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் மணப்பெண் ஒருவர்வழக்கமாக திருமணத்தின் போது தோழிகள் மற்றும் உறவினர்கள் புடைசூழ, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டி அல்லது காரில் மணமகள் ஊர்வலமாக வருவது வழக்கம்.

ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு, வித்தியாசமாக புல்லட் ராணியாக மணமேடைக்கு வந்து சேர்ந்துள்ளார் ஆமதாபாத்தைச் சேர்ந்த ஆயிஷா உபாத்பாய் என்ற 26 வயது பெண்.

பேராசிரியை…
கல்லூரி ஒன்றில் கம்யூட்டர் சயின்ஸ் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் ஆயிஷா. சமீபத்தில் இவரது திருமணம் நடைபெற்றது. மணமகள் எப்போது வருவார் என அனைவரும் ஆவலுடன் வாயிலைப் பார்த்தபடி காத்திருந்தனார்.

 

ஷாக்கான உறவினர்கள்…

அப்போது மண்டபத்தின் வாசலில் திடீரென ஒரு புல்லட் பைக் வரும் சத்தம் கேட்டது. யாரது மண்டபத்திற்குள் பைக்கில் வருவது எனப் பார்த்த உறவினர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

புல்லட் ராணி…

காரணம் மணமகள் உடையில் கம்பீரமாக புல்லட்டை ஓட்டியபடி புன்னகையுடன் வந்தது ஆயிஷா தான். சினிமா பாணியில் இதற்கு தகுந்தாற்போல் பின்னணி இசையும் இசைக்கப்பட்டது.

பெற்றோரின் சம்மதம்…

ஆயிஷாவிற்கு புல்லட் ஓட்டுவது மிகவும் பிடிக்குமாம். தனது 13 வயதில் இருந்தே அவர் பைக் ஓட்டி வருகிறாராம். அதனால் தான் திருமணத்தின் போது ஒரு அலங்கார சிலையைப் போல் வராமல், புல்லட்டில் வந்து அனைவரையும் அசர வைக்க முடிவு செய்தாராம். ஆயிஷாவின் இந்த விருப்பத்திற்கு அவரது பெற்றோரும் குறுக்கே நிற்கவில்லை.

கணவரோடு ஒரு ரவுண்ட்…
இதில் என்ன காமெடி என்றால் புல்லட் ராணியாக வலம் வரும் ஆயிஷாவின் கணவருக்கு புல்லட் ஓட்டத் தெரியாதாம். இதனால், திருமண அரங்கிற்குள்ளேயே தனது கணவரையும் புல்லட்டில் அமர வைத்து வலம் வந்துள்ளார் ஆயிஷா.

வைரல்…

இப்படி, புல்லட் ஓட்டியபடி ஆயிஷா திருமணத்திற்கு வந்த போட்டோக்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைப் பார்ப்பவர்கள் அனைவரும் ஆயிஷாவை புல்லட் ராணி என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

Share.
Leave A Reply