யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்புறம் பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் யாழ். கல்விச் சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்றுக்காலை யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு இடங்களிலும், பௌத்த மாணவர் ஒன்றியத்தினால் இதுபற்றிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுவரொட்டி ஒட்டப்பட்ட விவகாரம், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சமூகத்திடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

போர்க்காலத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மட்டும் கல்வி கற்று வந்தனர். இந்தக் காலகட்டங்களில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டங்களில் யாழ். பல்கலைக்கழகம் மையமாகவும் விளங்கி வந்தது.

எனினும், போர் முடிவுக்கு வந்த பின்னர், படிப்படியாக சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு, தற்போது யாழ். பல்கலைக்கழகத்தில் பெருமளவு சிங்கள மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

jaffna-uni-poster-2

சில பீடங்களுக்கு, தமிழ் மாணவர்களை விடவும் அதிகமானளவு சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

போருக்குப் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்திலுள் திட்டமிட்டு சிங்கள மாணவர்கள் அதிகளவில் புகுத்தப்பட்டதுடன்,  சிறிலங்கா அரச புலனாய்வுப் பிரிவின் வழிகாட்டலில், 2011ஆம் ஆண்டு இங்கு 32 மாணவர்களுடன் பௌத்த மாணவர் ஒன்றியமும் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பின்னர், ஆண்டு தோறும் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சிறிலங்கா படைகளின் உதவியுடனும், யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆதரவுடனும் வெசாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில் தற்போது, பௌத்த விகாரையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை சிங்கள மாணவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போருக்குப் பின்னர், வடக்கில் அதிகளவு பௌத்த விகாரைகள் திட்டமிட்டு அமைக்கப்பட்டு வரும் நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தில் விகாரை அமைக்க வேண்டும் என்று எழுப்பப்பட்டுள்ள கோரிக்கை, மாணவர்கள், மற்றும் பல்கலைக்கழக சமூகத்திடையே சந்தேகங்களையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply