புல்லாங்குழலின் நாதத்தையும் யாழின் ஓசையையும் விட மழலைச் சொல் இனிமையானது என பொய்யாமொழியான திருக்குறள் எடுத்துரைக்கிறது.
தனது பிஞ்சு மழலையைப் பிரிந்து சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் பெற்றோரின் கதை இது.
தர்ஷன் ஆசையாக ஏறி வீட்டை வலம் வந்த சைக்கிள், பாடசாலைக்கு அணிந்து சென்ற சீருடை,
அவனை களிகொள்ளச் செய்த விளையாட்டுப் பொருட்களைக் காண முடிந்தவர்களுக்கு துள்ளித் திரிந்த சுட்டிப் பையன் தர்ஷனை இன்று காண முடியவில்லை.
தர்ஷனின் வருகைக்கான அவனது நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் காத்திருப்பு நீண்டபோதிலும் அவர்களின் எதிர்பார்ப்பு ஈடேறவில்லை.
தர்ஷன் இனிவரப்போவதில்லை என்பதை உணர்த்திய அவனது தாயின் ஒப்பாரி அனைவரது இதயங்களையும் கனக்கச் செய்தது.
திருகோணமலை சம்பூர் 7 ஆம் வட்டாரத்தில் வசித்த 6 வயதான குகதாஸ் தர்ஷன், அன்று தனது தந்தையின் நெஞ்சில் கண் அயர்ந்து கண்விழித்தவன், இனி கண் திறக்கப்போவதில்லை என்பதை அவனது தந்தை கண்ணீர் மல்க விபரித்தார்.
கடைக்குச் சென்று திரும்பிய பின்னர் தம்பியைக் காணவில்லை எனத் தெரிவித்த அண்ணனின் முகத்திலும் சோகத்தின் ரேகைகள் அரும்பு விட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
சமத்துப்பிள்ளையான தர்ஷன் வீட்டைவிட்டு அங்குமிங்கும் அலைவதில்லை என பாட்டியார் தெரிவித்தார்.
தர்ஷனின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுக்கள் ஏராளம்!!!
மரணத்தின் சாட்சியாகவுள்ள பாழடைந்த கிணறு எப்போது மௌனம் கலைக்கும்?
மலர்வதற்கு முன்னர் இந்த மொட்டு கசக்கி எறியப்பட்டது எவ்வாறு?