சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடத்திற்காக காத்துள்ள வெளிநாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் அறிமுகம் இல்லாத பெண்கள் மற்றும் ஆண்களை தொட்டு பேசக்கூடாது என்ற புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸின் லூசேன் மாகாண அரசு தான் புலம்பெயர்ந்தவர்களுக்கு இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
’ஒன்றாக பழகுவதற்கான அடிப்படை விதிமுறைகள்’ என்ற தலைப்பில் மாகாண அரசு சுமார் 4,000 விளம்பர தாள்களை அச்சடித்து புலம்பெயர்ந்தவர்களுக்கு விநியோகம் செய்து வருகிறது.
லூசேன் மாகாணத்தில் மட்டும் 1,800 புலம்பெயர்ந்தவர்கள் தங்கி வருகின்றனர். இவர்களது முகாம்களுக்கு நேரடியாக சென்று இந்த விளம்பர தாள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில், ‘ஏற்கனவே நன்கு அறிமுகமான நபர்கள் மட்டுமே அவர்களின் சம்மதத்தின் பேரில் ஒருவரை ஒருவர் தொட்டு பேசிக்கொள்ளலாம். அறிமுகமில்லாத நபர்கள் தொட்டு பேசிக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல், பாலியல் ரீதியாக நடந்துகொள்வது, பெண்களின் அந்தரங்க பகுதிகளை தொடுவது உள்ளிட்ட அநாகரீகமான செயல்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கும்.
இந்த கட்டுப்பாடுகள் வயது மற்றும் மதம் என எந்த பாகுபாடும் பார்க்காமல் அனைவருக்கும் பொருந்தும்.
மேலும், பொது இடங்களில் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளும் அந்த விளம்பர தாள்களில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
தற்போது இதன் வாசகங்கள் ஜேர்மன் மொழியில் இருப்பதாகவும், விரைவில் இதனை மற்ற மொழிகளிலும் மொழிபெயர்த்து புலம்பெயர்வர்களுக்கு வழங்க உள்ளதாகவும் லூசேன் மாகாண அரசு தெரிவித்துள்ளது.
http://www.20min.ch/ro/news/suisse/story/20028166