‘காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே! அட மூளை கூட இல்லையென்று சொன்னேன் நானே!….. ‘ என்ற சினிமா பாடல் வரிகள் தான் ஞாபகத்துக்கு வருகிறது.
ஆம். ‘காதல்’ என்ற உருவமற்ற ஒரு உணர்வை வைத்து இன்று உலகளவில் புரியப்படும் குற்றங்கள் தொடர்பில் தகவல்களைப் பார்க்கும் போது அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.
இன்று நவீன தொழில்நுட்பம் வெகுவாக வளர்ச்சிகண்டுள்ள நிலையில் அதன் தாக்கம் காதலையும் விட்டு வைக்கவில்லை.
பேஸ்புக், வைபர், வட்ஸ் அப் என்று சமூக வலைத்தளங்கள் காதலுக்கும் காதலர்களுக்கும் சொர்க்கமாக தெரியும் நிலையில் அதனை பயன்படுத்திக் கொள்ளும் மோசடிக்காரர்களின் திருவிளையாடல்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே செல்கின்றன.
இந்நிலையில் தான் பேஸ்புக்கில் உலாவரும் ‘பெண் வேடமிட்ட’ கப்பக் குழு ஒன்று தொடர்பிலான தகவல்களை நாம் பகிர்ந்து கொள்ளவுள்ளோம்.
குற்றப் புலனாய்வு பிரிவின் பிரத்தியேக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ள இந்த கப்பக் குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் விசாரணைக்கு பாதிப்பேற்படா வண்ணம் விழிப்புணர்வுக்காக இது குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்.
பேஸ் புக் சமூக வலைத்தளம் ஊடாக இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி இடம்பெறும் பாரிய கப்பம் கோரல் நடவடிக்கை தொடர்பான தகவல்கள் இராணுவ வீரர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே அம்பலத்துக்கு வந்தது.
முறைப்பாட்டினை செய்த வீரரை நாம் சமன் என அடையாளப்படுத்தலாம்.
சமன் தனது கடமை நேரத்தின் பின் கிடைக்கும் ஓய்வு நேரத்தை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் செலவிடும் ஒருவர்.
தனது புகைப்படங்களை தனது பேஸ் புக் பக்கத்தில் தரவேற்றுவதிலும் தெரிந்த, தெரியாத நண்பர்களுடன் அரட்டை அடிப்பதிலுமே அந்த நேரம் செலவானது.
தான் போடும் தனது புகைப்பட பதிவுக்கு ஒருவர் விருப்பு (Like) ஒன்றினை அளிப்பதும் அல்லது கருத்து (comment) ஒன்றினை தெரிவிப்பதையும் பெரிதும் எதிர்பார்த்த சமன் பேஸ் புக்குடன் பின்னிப் பிணைந்தவர் எனலாம்.
இந்நிலையில் தான் சில மாதங்களுக்கு முன் ஒரு ‘நண்பர் அழைப்பு’ (Friend request) வந்திருந்தது. யுவதி ஒருவரின் அழகிய புகைப்படத்தை அடையாளப்படமாகவும் (Profile Photo) பெயரையும் கொண்டிருந்த அந்த ‘நண்பர் அழைப்பை’ உடனடியாகவே சமன் ஏற்றுக் கொண்டான்.
அடுத்த நொடியிலேயே ‘ஹாய்… எப்படி சுகம்’ என இரு வார்த்தைகளில் சமனுடனான தொடர்பை ஆரம்பித்தார் அந்த யுவதி (யுவதியின் பெயரில் உள்ளவர்) தனக்கு ஒரு யுவதி நண்பர் அழைப்பை விடுத்து தன்னுடன் உரையாடுகிறார் (chat) என நினைக்கும் போதே சமனுக்கு புல்லரித்துள்ளது.
‘நான் நலம்…. அப்புறம் நீங்கள் யார்?’ சமனும் பதிலனுப்பத் தவறவில்லை. இவ்வாறு ஆரம்பத்தில் இந்த தொடர்பு இறுதியில் காதலில் விழுந்து யுவதியை நேரடியாக பார்க்க வேண்டும் என்ற நிலைக்கு சமனை இட்டுச் சென்றது.
குறித்த யுவதி ‘அஷினி’ என்ற பெயரிலேயே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
அத்துடன் தான் மலேஷியாவில் வசிப்பதாகவும் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் வரவேற்பு உத்தியோகத்தராக தான் கடமையாற்றுவதாகவும் அஷினி சமனிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் அழகானவள் எனவும் தனக்கு 20 வயதே ஆகிறது என்ற தகவல்களையும் வழங்க அஷினி தவறவில்லை.
‘சரி ….. சரி உங்கள் அளவுக்கு நான் அழகானவன் இல்லை தான்….. ஆனாலும் எங்கள் மனசு அழகானது……’ எல்லா இளைஞர்களும் சொல்லும் வசனத்தை சொல்லியே சமனும் காதல் வலையை விரித்தான்.
இப்படி ஒவ்வொரு நாளும் நீண்ட தொடர்பு இறுதியில் சமனையும் அஷினியையும் காதலர்களாக்கியது.
‘எனக்கு உன் குரலை கேட்க ஆசையாக உள்ளது. என்னுடன் கதைக்க விரும்பமில்லையா! என ஒரு நாள் சமன் அஷினியிடம் கேட்கலானான்.
‘ நான் உன்னிடம் என்னைப் பற்றி எல்லா விடயங்களையும் சொன்னேன். ஆனால் ஒரே ஒரு விடயத்தை மட்டும் மறைத்துவிட்டேன்’ என அதற்கு அஷினி பேஸ் புக் ஊடாக பதில்களை அனுப்ப ஆரம்பித்தார்.
‘ எனது பெற்றோர் எனக்கு கண்டியை சேர்ந்த ஒரு பையனை திருமணம் செய்து வைக்க பேசியுள்ளார்கள். எனக்கு அந்த பையனை பிடிக்கவில்லை.
இப்பொழுது அவன் தொழில் நிமித்தம் இங்கு வந்துள்ளான். எமது பெற்றோருக்கும் அவனை பிடித்திருக்கிறது’ என அஷினி தனது திட்டத்துக்கான அத்திவாரத்தை போட ஆரம்பித்துள்ளார்.
காதலில் விழுந்திருந்த சமனுக்கு அஷினியின் வார்த்தைகள் என்னமோ செய்தது. உடனே அந்த செய்திக்கு பதில் எழுதினான்.
‘அப்படியானால் இனிமேல் என்னுடன் செட் (chat) செய்ய மாட்டாயா?….. ‘சமனின் ஏக்கம் அஷினிக்கு புரிந்தது.
‘இல்லை எனக்கு பகலில் செட் (chat) செய்வது கஷ்டம். ‘அவன் பகல் நேரத்தில் இங்கு வருவான் இரவு வேளையில் நான் பேஸ் புக் வருகிறேன் என அஷினி பதிலளித்தாள்.
அதன் பின்னர் சமன் அஷினியின் பேஸ் புக் உரையாடல்கள் இரவு வேளையிலேயே இடம்பெற்றுள்ளது. காதல் கண்ணை மறைக்க தாறு மாறாக இருவரும் பேஸ் புக்கில் உரையாடலாயினர்.
காதலை இருவரும் கூறிக் கொண்ட பிறகு ஒருநாள் அஷினி தனது அரை நிர்வாண (போலி) புகைப்படங்களை சமனுக்கு பேஸ்புக் ஊடாக அனுப்பினாள்.
இதனால் அஷினியை முழுமையாக நம்பிய சமன் பதிலுக்கு அஷினிக்கு அவள் கோரிய கோணங்களில் தனது புகைப்படங்களை அனுப்பினான்.
தனது நிர்வாணத்தை பிறருக்கு காட்டுவது குற்றம் என்ற உணர்வு சமனுக்கு ஏற்படாத நிலையில் அஷினியை தனது காதலி என்பதற்கு அப்பால் சென்று மனைவி என்றே ஏற்றுக்கொண்ட சமன் தனது நிர்வாண வீடியோக்கள் பலதையும் அஷினிக்கு அனுப்பியுள்ளான்.
இந்நிலையில் ஒரு நாள் அவசர செய்தியொன்றை சமனுக்கு அனுப்பிய அஷினி தனது பேஸ்புக் கணக்கிற்குள் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பையன் நுழைந்து தமது ரகசியங்களை கண்டுபிடித்து விட்டதாகவும் அதனால் தான் மீண்டும் கூறும் வரை தனக்கு எதுவும் அனுப்ப வேண்டாம் என அவள் தெரிவித்துள்ளார்.
இது சமனுக்கு பாரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. நாட்கள் கடந்து செல்ல ஒரு நாள் இரவு அஷினியிடம் இருந்து சமனுக்கு பேஸ்புக்கில் தகவல் வந்தது.
சமன் எனது தொலைபேசி நோட் புக் எல்லாவற்றையும் அவன் (அஷினிக்கு நிச்சயிக்கப்பட்டதாக காட்டப்படுபவர்)
தரையில் அடித்து உடைத்துவிட்டான். எனக்கு வாழ்வே வெறுத்து விட்டது. உன்னுடன் பேசாமல் எனக்கு இருக்க முடியாது. எனக்கு உன்னுடன் பேச வேண்டும். அஷினி சமனின் எரியும் காதலில் பெற்றோல் ஊற்றினாள்.
‘நான் நோட் புக் வாங்க உனக்கு பணம் அனுப்பவா?’ அஷினி எதிர்பார்த்ததை சமன் கேட்கலானான். ‘அது எப்படி…. நீ பாவம்…..’ என அஷினி நடிக்க சமன் பரவாயில்லை உனக்கு பணம் அனுப்ப வங்கிக் கணக்கொன்றை தா என கோரியுள்ளான்.
அதனைத் தொடர்ந்து அஷினி கொடுத்த வங்கிக் கணக்கிற்கு சமன் ‘நோட் புக்’ வாங்க 50 ஆயிரம் ரூபாவை வைப்புச் செய்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து சிறிது காலம் மீண்டும் சமன் அஷினி காதல் படலம் தொடர்ந்துள்ளது. ஒரு நாள் சமனின் கையடக்கத் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.
‘ நீ…. சமன் தானே அழைப்பை ஏற்படுத்தியவர் கேட்டுள்ளார். நீ இராணுவ முகாமில் தானே வேலை செய்கிறாய்? நீ Y தரத்தை சேர்ந்தவன் தானே?’ என மறு முனையில் பேசியவர் சமன் குறித்த தகவல்களை சரியாக சொல்லலானார்.
சமனோ ‘ஹலோ…. நீ யார்?…. உனக்கு என்ன பிரச்சினை?….. ‘என சவூதி அரேபிய இலக்கம் ஒன்றிலிருந்து வந்த அந்த அழைப்புக்கு தனக்கே உரிய இராணுவ அதிகார தொனியில் சமன் கேட்டுள்ளான்.
‘அழைப்பை ஏற்படுத்தியவர் நான் அஷினிக்கு நிச்சயிக்கப்பட்ட பையன். என்ன பிரச்சினை உனக்கு? நீ எனக்கு நிச்சயிக்கப்பட்டவருடன் மாதக்கணக்கில் செய்த திருவிளையாடல்கள் எனக்கு தெரியாது என்று நினைக்கிறாயா?
உனக்கு வெட்கம் இல்லையா? எத்தனை புகைப்படங்கள் அனுப்பியிருக்கிறாய் போதா குறைக்கு வீடியோ வேறு. உனது தலைமை அதிகாரி கபில (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தானே. நான் அவரிடம் இதனை சொல்கிறேன். இதனை இப்படியே விட்டுவிட மாட்டேன் ‘ என பேசிக் கொண்டே போகலானான்.
சமனுக்கு தனது செயலின் பாரதூரம் அப்போதுதான் புரிந்தது. ‘புரோ… நான் மட்டுமல்ல அவளும் தான் அனுப்பினாள். இலங்கை வந்தபின் என்னையே திருமணம் செய்வதாகவும் அவள் வாக்குறுதியளித்தாள் ‘ என சமன் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தலானான்.
‘ உனக்கு பைத்தியமா? நீ ஒரு காட்டான். உனது அப்பா ஒரு விவசாயி மணம் முடிக்காத இரு தங்கைகள். அவை எல்லாம் எனக்குத் தெரியும்.
இப்படி இருக்கையில் தான் அஷினியை முடிக்கப் போகிறாயா?’ என அந்த அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் திட்டினான்.
ஒரு நாளைக்கு பலமுறை வந்த அடையாளம் தெரியாத அழைப்பினால் சமனின் நிம்மதி இல்லாமல் போனது. முடியாத பட்சத்தில் தனது தொலைபேசி இலக்கத்தையும் சமன் மாற்றினான்.
எனினும் அந்த அடையாளம் தெரியாத நபர் விடவில்லை. சமனின் வீட்டு தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.
‘ நீ உனது இலக்கத்தை மாற்றினாலும் வீட்டு இலக்கத்தை மாற்றவில்லையே நான் உனது வீடியோக்களை இணையத்தில் போடப் போகிறேன். என்ன சொல்கிறாய்?’ என அந்த நபர் சமனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமன் : ‘நான் என்ன செய்வது? எனக்கு அஷினியுடன் கொஞ்சம் பேச வேண்டும். ‘
அடையாளம் தெரியாத நபர் ‘அஷினி எதற்கு? இதன் பிறகு அஷினியெல்லாம் இல்லை. என்னுடன் தான் நீ டீல் பண்ண வேண்டும்.’
சமன்: ‘நான் என்ன செய்ய வேண்டும்? அடையாளம் தெரியாத நபர் உனக்கு அஷினிக்கு மட்டும் பணம் கொடுக்கலாம். எனக்கு தர முடியாதா? இந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க எனக்கு ஒரு இலட்சம் ரூபா வேண்டும். ‘
அந்த உரையாடலின் பிரகாரம் அவரால் கொடுக்கப்பட்ட இரு வங்கிக் கணக்குகளுக்கு சமன் சுமார் ஒன்றரை இலட்சம் பணத்தை வைப்புச் செய்தான்.
சமனின் பயம், மானம் என்பவற்றை வைத்து குறித்த அடையாளம் தெரியாத நபர் இந்த கப்பத் தொகையைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் சமனுக்கு தனது காதல் படலத்தின் உண்மை புரிந்தது. தான் மோசடிக்காரர்களின் வலையில் சிக்கியதை அவன் உணர்ந்தான்.
இவ்வாறே சில நாட்கள் உருண்டோட, மீண்டும் அந்த அடையாளம் தெரியாத நபர் அழைப்பை ஏற்படுத்தி மிரட்டினார்.
இந்நிலையில் தான் சமன், குற்றப் புலனாய்வுப்பிரிவின் உதவியை நாடினான்.
அத்தனை கதைகளையும் கூறிய சமன், ‘ சேர் என்னுடன் யுவதியாக நடித்து செட் (Chat) செய்தவர்தான் அவர். நம்பி மோசம் போய்விட்டேன்’ என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ன, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் புலனாய்வுப் பிரிவின் கணனி குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.கே. சேனாரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இது குறித்து கடந்த 19 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பலபிட்டியவுக்கு அறிக்கை சமர்ப்பித்த புலனாய்வுப் பிரிவு வங்கிக் கணக்குகள் மற்றும் இணையக் கணக்குகளை வைத்தும் சந்தேக நபரால் பணம் மீளப் பெறப்பட்ட ஏ.ரி.எம்.நிலைய சி.சி.ரி.வி கமரா பதிவுகளை வைத்தும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது ஒரு திட்டமிட்ட கப்பக் குழு ஒன்றினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடு என்பதை புலனாய்வுப் பிரிவு கண்டறிந்துள்ளது.
இந்த கப்பக் குழுவின் மோசடி நடவடிக்கைகளால் முப்படைகளைச் சேர்ந்த 5 பேரும் ஜனரஞ்சக கிரிக்கெட் வீரர் ஒருவரும் நிதி நிறுவனங்களின் இரு இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளமை இது வரையிலான விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அதே போன்று பிரபல நடிகைகள், ஆசிரியர்கள், நிறைவேற்று அதிகாரிகள் என பலரும் இந்த மோசடிக் கும்பலின் வலையில் வீழ்ந்துள்ளதும், வெட்கம் காரணமாக இது குறித்த முறைப்பாடுகள் பதிவாகாமல் இருந்துள்ளதும் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதுவரை சிறுவர்கள், பெண்களுக்கே சமூக வலைத்தளங்கள் வில்லனாக தெரிந்த நிலையில் தற்போது இளைஞர்களையும் அது விரட்ட ஆரம்பித்துள்ளது. இந்த கப்பக் குழுவை கைது செய்வது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக் கப்பட்டுள்ள நிலையில், சமூக வலைத் தளங்களில் பல மணி நேரங்களை செலவிடும் இளைஞர் யுவதிகளுக்கு இச்சம் பவம் ஒரு எச்சரிக்கையாக அமையட்டும்.
–எம்.எப்.எம்.பஸீர்–